பாக். தொடர் போராட்டத்தால் ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு: ரூ.50 லட்சம் அரசு சொத்துக்கள் சேதம்

376

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக்–இ–இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ‘பாத்’ கட்சி தலைவர் மதகுரு தாகிருல் காத்ரி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த மாதம் (ஆகஸ்ட்) 14–ந்திகதி முதல் இஸ்லாமாபாத் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில் இறங்கியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 8 பேர் பலியாகினர். 300–க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இப்போராட்டம் இன்னும் ஓயவில்லை. இன்று 27–வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே, சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர்கட்சிகள் போராட்டத்தால் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள், பொருளாதார இழப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த வாரம் அட்டர்னி ஜெனரலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் சல்மான் அஸ்லம்பட் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் இதுவரை ரூ.54,700 கோடிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தின் போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE