பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இன்று பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதியாக இன்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொள்வதுடன், பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி, கோதபாய ராஜபக்ஸ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதியே படைச் சேனாதிபதியாக கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இன்று மாலை புதிய பாதுகாப்புச் செயலாளர் ஒருவரும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியும் மிகவும் ஜனநாயக ரீதியாக ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜனநயாக ரீதியாக ஆட்சி மாற்றத்திற்கு வழியமைத்து வருகின்றமை அரசியல் ஆய்வாளர்களினால் பாராட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.