பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் இன்று அதிகாலை நடந்த ஒரு விபத்து தொடர்பாக ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, கறுப்பு நிற உடை அணிந்து வந்த நபர் அந்த போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதைப் பார்த்த துப்புரவு ஊழியர் ஒருவர், விறுவிறுவென வந்து அந்த நபரை தைரியமாக தடுத்துள்ளார். இந்த போராட்டத்தின்போது அவரது முகத்திலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் அதிகாரி இறந்துவிட்டார். பலத்த காயமடைந்த துப்புரவு தொழிலாளியின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று இரவு பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர். அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டாவது தாக்குதல் நடந்துள்ளது. இந்த இரு தாக்குதல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா? என்ற தகவல் வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.