1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதற்கு ₹15 லட்சம் கூட கையில் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் தள்ளாடிக் கொண்டிருந்தது. அப்போது பாடகி லதா மங்கேஷ்கர் தான் நிதியுதவி வழங்கி ஆதரித்தார். அப்படிப்பட்ட பரிதாப நிலையில் இருந்த கிரிக்கெட் வாரியத்தின் வருமானத்துக்கு வழி வகுத்தவர் டால்மியா. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப கணிசமான உரிமத் தொகை நிர்ணயித்து, அதன் மூலமாக வருவாயை அதிகரித்தார்.
இன்று இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளதற்கு அவரது பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்போது ஒவ்வொரு சீசனிலும் உள்ளூர் போட்டிகளையும் கணக்கில் கொண்டால் 55,000 போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. மாநில கிரிக்கெட் சங்கங்கள், விளையாட்டு வீரர்கள் என்று அனைத்து தரப்பினரும் பலன் அடைவதை அவர் உறுதி செய்தார். அவரது லட்சிய நோக்கும் செயல்பாடுமே கிரிக்கெட் விளையாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் நமக்கு முக்கியமான இடம் கிடைத்துள்ளதிலும் அவரது பணி மகத்தானது.