நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா கலிங்கபட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர்வைகோ கடந்த 4 நாட்களாக தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
![பிரபாகரன் மீண்டும் வருவார்; தமிழீழத்தை மீட்பார்: வைகோ பிரபாகரன் மீண்டும் வருவார்; தமிழீழத்தை மீட்பார்: வைகோ](http://tamil.oneindia.in/img/2014/01/17-vaiko-new-2-600.jpg)
நேற்று நடைபெற்ற வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து வைகோ பேசுகையில், நான் எந்த கூட்டணியில் இருந்தாலும் நானும் ம.தி.மு.க.வும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். நான் பள்ளி பருவத்தில் நடந்த கடமை நாடகத்தில் கதாநாயகனாகவும், வீரமுழக்கம் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், சாம்ராட் அசோகாவில் அசோகராகவும் நடித்தேன்.
வேணுகோபால் சர்மா என்பவர் ஒன்பது ஆண்டுகளாக திருவள்ளுவரின் ஒவியத்தை வரைந்து அப்போது முதல்வராக இருந்த பக்தவச்சலத்திடம் அளித்தார். அவரது மகன் தான் ஸ்ரீராம் சர்மா இந்த நாடகத்தை நடத்துகிறார்.
வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைபுலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் 8 ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதே போல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்த காலம் வெகுவிரைவில் வரும்.
சோனியாவின் ஏவுகணை கொண்டு சிங்களர்கள் தமிழீழத்தை தகர்த்தனர். மக்கள் மன்றத்தில் நியாய கூண்டில் அவர்களால் துன்பப்பட்ட ஈழத்தமிழர்களும், குற்றவாளி கூண்டில் அவர்கள் கொன்றெடுத்த சோனியா கூட்டமும் நிற்கும். இந்த நாடகம் நான் அரசியலுக்காக போடவில்லை. வீரம் செறிந்த இந்த மண்ணில் வீரத்தாயின் நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ப.ஆ.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார், சிவகாசி செய்யது இப்ராஹிம், இமயம் ஜெயராஜ்,மாநில மாணவரணி நிர்வாகி தி.மு .ராஜேந்திரன், ம.தி.மு.க இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதுஅலி உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.