பிரேசிலில் நடைபெற உள்ள ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி

432
இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

இதில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. உலகின் முன்னணி தொழில்நுட்பமாகக் கருதப்படும் இந்த ரோபோக்கள் விளையாடும் கால்பந்து போட்டி கடந்த 1997ஆம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்டது.

வரும் 2050ஆம் ஆண்டில் பிபாவின் உத்தியோகபூர்வ விதிகளின்படி உலகக் கோப்பையை வென்ற அணியினை எதிர்த்து விளையாடக்கூடிய அளவிற்கு முழுமையான தன்னாட்சி திறன் கொண்ட மனித உருக் கொண்ட ரோபோக்களை உருவாக்குவதே இந்த அமைப்பின் திட்டமாகும்.

பிரேசிலின் வடகிழக்கு நகரமான ஜோவா பெசோவா நகரில் நடைபெற உள்ள இந்தப் போட்டிகள் ரோபோக்களின் அளவுகள், பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இத்துடன் மாணவர்களில் இளைய பிரிவினருக்கான ரோபோ ஜூனியர் கோப்பைக்கான போட்டியும் நடைபெறும் என்று அவர்கள் கூறினர். கால்பந்து போட்டியே இந்த நிகழ்ச்சியின் மையக் கருத்தாக இருக்கும்போதிலும் உள்நாட்டுப் பணிகள், மீட்பு நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளும் இதனுடன் சேர்ந்திருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 நாடுகளில் இருந்து 3000 பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட 400 அணிகள் இந்த ஆண்டிற்கான போட்டியில் பங்கு பெறும் என்றும், கிட்டத்தட்ட 60,000 பார்வையாளர்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு களிக்க பிரேசிலுக்கு வருகை தரக்கூடும் என்றும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பிரிவுகளுக்கான இறுதிப் போட்டி வரும் 24ஆம் திகதி நடைபெறும். அதற்கு அடுத்த நாள் அனைத்து ரோபோ கோப்பை பிரிவுகளுடன் இணைந்திருக்கும் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றும் அங்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE