பிளவுபடும் நிலையில் ஐ.ம.சு.மு.!

293

தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவு அணியினரின் முடிவே இதுவென்று தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் எதிரணியில் இருந்தபடி செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவுடன் கைகோர்த்து எதிரணியில் செயற்படுவதற்கு 60 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தயாராகவே இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளதால்,சுதந்திரக் கட்சியின் தலைமையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடையும் நிலை உருவாகியுள்ளது. விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எனத் தெரியவருகின்றது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ள லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான டியூ குணசேகர ஆகியோர் தேசிய அரசுக்குத் தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமக்குரிய தேசியப் பட்டியல் நியமனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் மைத்திரி பக்கம் நிற்கவேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.

SHARE