மட்டக்களப்பில் இன்று கருணா, பிள்ளையான் குழுவினரின் அராஜக ஆட்சியே நடைபெறுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி நகரில் நேற்று ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறிப்பாக பிள்ளையான் குழுவினர் இன்று ஆயுதங்களுடன் திரிகின்றனர். சந்திவெளியில் இருந்த மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்தை அவர்களே தாக்கியிருந்தனர் இது தொடர்பாக இரண்டு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை அழித்ததாக கூறும் மகிந்த அரசு, விடுதலைப் புலிகளின் முன்னால் ஆயுதக்குழுவினரை வைத்தே தனது ஆட்சியை தக்கவைக்க பார்க்கின்றார்கள்.
ஒரு பக்கம் விடுதலைப் புலிகளை அழித்ததாக கூறு மகிந்த ராஜபக்ச, மறுபக்கம் தங்களுக்கு வாக்களிக்காவிட்டால் விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்று கூறுகின்றார்.
அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் எப்படி திரும்ப வருவார்கள்? விடுதலைப் புலிகளை முற்றாக அழித்ததாக கூறும் இவர்களே, விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்று கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளது என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.