புங்குடுதீவு தந்த சோகமும் கூட்டமைப்பின் இயலாமையும்

346

 

 

புங்குடுதீவு தந்த சோகமும் கூட்டமைப்பின் இயலாமையும்

புங்குடுதீவு சோகம் அந்த மாணவியின் குடும்பத்தையும், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்களையும் ஆத்திரம் கொல்ல வைத்து விட்டாலும் அது சில அரசியல் தரப்புகளை தடுமாற்றங்களுக்கு உள்ளாக்கி விட்டது. இதில் மகிந்த ராஜபக்ச, ஹெல உறுமய என்ற தென்னிலங்கை தரப்புகள் என்றால், வடக்கில் கூட்டமைப்பு, ஈபிடிபி, யாழ்ப்பாண ஐதேக கிளை வரை இருக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பெயரில் கூட்டமைப்பு கடைசியாக விடுத்துள்ள அறிவித்தலில் ஒரு முக்கிய பகுதி  இப்படி இருக்கிறது.

“………(19.05.2015)  நண்பகல் 12.00 மணிக்கு அந்த மாணவியின் இல்லத்தில் தாயார் உறவினரைச் சந்திக்க நானும்,   கல்வி அமைச்சர், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சென்றிருந்தோம். அதற்கிடையில்  புங்குடுதீவு சர்வோதய மண்டபத்தில் ஒரு மக்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்த அங்கு சென்றோம். அங்கு எம்மைச் சந்தித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சுவிசில் வாழும் குமார் என்பவர் கொழும்புக்கு தப்பிவிட்டதாகக்  கூறினர்.

திரு. துவாரகேஸ்வரன் என்னிடம் வந்தார். குமார் என்பவர் பலாலி விமானத்தளத்திலிருந்து  கொழும்பு செல்ல முயற்சிக்கிறார்; இதைத் தடுத்து நிறுத்திக் கைது செய்ய வேண்டும். மண்டபத்தில் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிற்கின்றார்; நீங்களும் வாருங்கள் என அழைத்த போதுதான், நானும் மண்டபத்துக்குள் சென்று பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் வாதாடினோம். அவர் சாட்சியமொன்றைத் தருமாறு கோரினார். அப்பொழுது அந்த குமார் என்பவர் கொழும்பில் நிற்பதாக ஒரு செய்தி வந்தது.

Bati (1)அதை அறிந்தும்  துவாரகேஸ்வரன் என்னுடன்  ஆலோசித்து,  ஒரு முறைப்பாட்டை எழுதி பிரதி பொலிஸ் மாஅதிபரிடம்  கையளித்தார். சில நிமிடங்களில் பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்மிடம் “கொழும்பில் அந்த நபர் கைது செய்யப்பட்டுவிட்டார்” என்றார். அவரை யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்று வாதாடினோம். அதற்கு பிரதி பொலிஸ் மாஅதிபர் உடன்பட்டார். அதுதான் நடைபெற்றது. உடன் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஒலிபெருக்கியில் அவற்றை அறிவித்தார்.

இறுதியாக  நானும் ஒலிபெருக்கியில்  பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்மிடம் கூறிய உறுதிமொழியை பகிரங்கமாக அறிவித்தேன். மக்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.  திரு. வீ. ரீ. தமிழ்மாறனைக் கூட அந்த மண்டபத்திலேதான் கண்டோம். அவரிடம்  என்ன நடைபெற்றது என விசாரித்தோம். பின்பு நாம் அனைவரும் அந்த மாணவியின் இல்லத்திற்குச் சென்று  பெற்றோரிடம் பேசிச் சில விடயங்களை அறிந்து வந்தோம். மூன்று மணிக்கு யாழ் வந்து சேர்ந்தோம்.

இந்த சம்பவங்களை எல்லாம் மறைத்து விட்டு உண்மைக்கு மாறான செய்திகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளன. இதனையிட்டு  மனம்   வருந்துகிறோம். அங்கிருந்து திரும்பும்போது தெருக்களில் பல மோட்டார் வண்டிகளில் இளைஞர்கள் பலர்  மிகத் தீவிரமாகச்  செல்வதை அவதானித்தோம். அவர்கள் யாரென்று அறிய முடியவில்லை. இதைப் போன்று எங்கள் வாழ் நாளில் எத்தணையோ போராட்டங்களையும், பேரழிவுகளையும் அனுபவித்து விட்டோம். நன்றியுள்ள மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் அநீதிக்கெதிராக பேரெழுச்சி கொண்டு அணி திரண்டது எழுச்சியைத் தந்தது…….”

கூட்டமைப்பின் அறிக்கை இப்படி போகிறது. இதில் ஒரு பதட்டம் தெளிவாக தெரிகிறது. நடைபெற்ற சகிக்கவே முடியாத அநீதிக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு, அழுத்தம் கொடுக்க, வழமையாக சும்மா இருக்கும், யாழ்ப்பாண பொலிஸ் இம்முறை விரைந்து செயற்பட்டு, சந்தேக நபர்களில் மிகப்பெரும்பாலோரை கைது செய்து விட்டது. அதை ஏற்றுக்கொண்டுதான் மாவை சேனாதிராசா, “…………மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் அநீதிக்கெதிராக பேரெழுச்சி கொண்டு அணி திரண்டது எழுச்சியைத் தந்தது…….” என்று கூறுகிறார்.

எனவே மக்கள் அழுத்தம் கொடுக்க, போலிஸ் கைது செய்ய, இப்போது சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட முதற்கட்ட பணிகள், அரசியல்வாதிகளின் பெரும் பங்கு இல்லாமலேயே முடிவுற்றது. வீ. ரீ. தமிழ்மாறன், தமிழரசு கட்சியின் தீவுப்பகுதிக்கான உத்தேச வேட்பாளர் என்று சொல்லப்படுகிறது.. அவர் அந்த பகுதியையும் சார்ந்தவர். ஆகவே அவர் அரசியல் காரணமாகவும், தன் ஊரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் பங்கெடுக்க்கவும் அங்கு சென்று இருக்கலாம்.

IMG_3773இதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரிவில்லை. ஆனால், அவர் தனது கட்சி தலைவருக்கு கூட சொல்லாமல்தான், இதுபோன்ற பதட்டம் நிலவும் பகுதிக்கு சென்றுள்ளார் என்பது இப்போது, “……திரு. வீ. ரீ. தமிழ்மாறனைக் கூட அந்த மண்டபத்திலேதான் கண்டோம்……” என்ற மாவையின் கூற்றில் இருந்து தெரிகிறது. ஆகவே இத்தகைய துயர சம்பவங்கள், அவசர சூழல்கள் உருவாகும் போது அவற்றை எதிர்கொள்ளும் எந்தவொரு வேலை திட்டமும், அதற்கான கட்சி இயந்திரமும் கூட்டமைப்பிடம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிய வருகிறது.

ஆகவே தன்னிச்சையாக எழும் மக்கள், இளைஞர் போராட்டத்தை பாராட்டி மகிழ்வதுடன், அங்கே போய் நின்று ஊடகங்ளுக்கு போஸ் கொடுப்பதுடன்   கூட்டமைப்பு சும்மா இருக்க வேண்யதுதான். பின்னர் இத்தகைய தன்னெழுச்சி போராட்டங்களில், வழமைப்போல் உள்ளே நுழையும் “வன்முறை’ கும்பலை “சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்’ என்று அறிக்கை விட்டு கோருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என தெரியவில்லை.

ஏனெனில் அதற்குள் கல்லெறி, கைது, எல்லாம் நடந்து முடிந்து விட்டன. அதை சுட்டிக்காட்டி மகிந்த ராஜபக்ச மீண்டும் புலிகள் எழுந்து வருகிறார்கள் என சிங்கள மக்களிடம் பூச்சாண்டி காட்டியதும் நடந்து முடிந்து விட்டது. யாழில் வாழும் சிங்கள மக்கள் பயமுறுத்தப்பட்டனர் என்று ஹெல உறுமய சொல்லி முடித்து விட்டது..

கூட்டமைப்பிடம் அல்லது அதற்குள் வரும் ஒரு கட்சியிடம், அவசர நிலையில் செயற்படும் செயற்திட்டமோ, இளைஞர் அணி, மகளிர் அணி, கிளை அணி என்று (பெயரளவில் இல்லாமல்) களத்தில் இறங்கி செயற்படும் உள்ளூர் மட்ட கட்சி இயந்திரம் இருந்திருக்குமானால் இத்தகைய சூழலில் போராட்ட தலைமை கூட்டமைப்பிடம் இருந்திருக்கும். போராட்டங்கள் கைமீறி போகாமல் தடுக்க முடிந்திருக்கும்.

ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை கொண்டுவர இராணுவம் கொண்டவரப்பட இருந்தது. அதை சம்பந்தன் பேசி நிறுத்தினார் என்ற செய்தி பெரிய ஒரு விடயம் அல்ல. கண்ணீர் புகை, வானை நோக்கிய சூடு ஆகியவற்றுடன் அதிஷ்டவசமாக கலவரம் முடிவுக்கு வந்தது விட்டது. இல்லாவிட்டால் இதுதான் சாக்கு என்று அந்த இடத்தில் பொலிஸ் அகற்றப்பட்டு முழுமையாக இராணுவம் வந்து இருக்கும். சம்பந்தனிடம் கேட்டு அனுமதி வாங்கிக்கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி  இல்லாமல், தீவைப்பு, கைக்குண்டு வீச்சு என்று திட்டமிட்ட வன்முறைகள் நடைபெற்று இருக்குமானால், நாம் ஒரு பத்து வருடங்களுக்கு பின்னால் செல்ல வேண்டி இருந்திருக்கும்.

“(அந்த பிரதேசத்துக்கான ரணில் விக்கிரமசிங்கவின் உத்தேச வேட்பாளர்)……..திரு. துவாரகேஸ்வரன் என்னிடம் வந்தார். குமார் என்பவர் பலாலி விமானத்தளத்திலிருந்து  கொழும்புக்கு (தப்பி) செல்ல முயற்சிக்கிறார்; இதைத் தடுத்து நிறுத்திக் கைதுசெய்யவேண்டும். மண்டபத்தில் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிற்கின்றார்; நீங்களும் வாருங்கள்…” என அழைத்ததையும்,  “….என்னுடன்  ஆலோசித்து, அவர் ஒரு முறைப்பாட்டை எழுதி பிரதி பொலிஸ் மாஅதிபரிடம்  கையளித்தார்..” என்பதையும், மிகவும் பலவீனமான நிலையில் இருந்து தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா சொல்கிறார். இது ஏன்?

“….அங்கிருந்து திரும்பும்போது தெருக்களில் பல மோட்டார் வண்டிகளில் இளைஞர்கள் பலர்  மிகத் தீவிரமாகச்  செல்வதை அவதானித்தோம். அவர்கள் யாரென்று அறிய முடியவில்லை…..” என்று மாவை கூறுவது இன்னொரு பலவீன வெளிப்பாட்டு கட்டம்.  அந்த இளைஞர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளகூடிய  கட்சி தொண்டர் இயந்திரம், கட்சி உளவு (உழவு அல்ல) இயந்திரம் ஆகியவை கூட்டமைப்புக்கு இருக்க வேண்டும்.

வடக்கில் முதல்வர் பதவி உட்பட மாகாணசபையையும். பெரும்பாலும் எல்லா உள்ளூராட்சி சபைகளையும், மிகப்பெரும்பலான எம்பி ஆசனங்களையும் தன்னகத்தே கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு இயலாமை கொண்ட இயக்கமாக இருப்பது உண்மையில் வெட்ககேடு. அப்பாவி மாணவி பெண் வித்தியாவின் மரணம் ஒரு கொடுமை. அது பற்றிய பல்கோண விமர்சனங்கள் இந்த பத்திரிக்கையின் பல இடங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் இங்கே தன் மரணத்தின் மூலம் வடக்கின் அரசியல் தலைமையின் இயலாமையை வித்தியா வெளிப்படுத்தி விட்டாள் என்ற கோணத்தை காட்டுகிறோம்.

வித்தியா போன்று எத்தனையோ தமிழ் இளைஞர்களை, யுவதிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, இனியாவது இந்த இரண்டு மூன்று நபர்களினால் மாத்திரம் முடிவு எடுத்து கொண்டு நடத்தப்படும் இயக்கம் என்ற, “செயற்பாட்டில் கிழடு தட்டிய இயக்கம்” என்ற,  அவப்பெயர்களை துடைத்து எறிந்து விட்டு,  இளைஞர்களை உள்வாங்கி பேரியக்கமாக மாற வழி தேட வேண்டும்.

வித்தியா வல்லுறவு, படு கொலை கடைசி சந்தேக நபர் வடக்கில் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டாரா? பொலிஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாரா?  அது உண்மையானால் அவர் அங்கிருந்து எப்படி தன்னை விடுவித்துக்கொண்டு கொழும்பு வந்தார்? இவை இன்று பரவலாக எழுப்பப்படும் கேள்விகள். இவற்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈபிடிபி, யாழ்ப்பாண ஐதேக கிளை ஆகியவை உரிய விளக்கங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு  கொடுக்க கடமைப்பட்டுள்ளன. பதட்ட சம்பவங்களை அதன்போது அல்லது அது நடைபெற முன் தடுத்து நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டங்கள்தான் உங்களிடம் இல்லை. நடந்து முடிந்த பிறகாவது உண்மைகளை வெளியே கொண்டு வாருங்களேன்.

-உலக நாயகன்

SHARE