புதிய அரசு தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை! கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் முறையீடு- முஸ்லிம் காங்ரஸை சந்தித்த நிஷா

366

 

இலங்கை புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்பில் இன்னும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று அமெரிக்காவிடம் முறையிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின்  வேலைத் திட்டத்தின் கீழ் 25நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதன்போது ஊழல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் வடக்குகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் காணி அபகரிப்பு உட்பட்ட பல விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.

காணாமல் போனோர் விடயம் தொடர்பிலும் புதிய அரசாங்கத்தின் கவனம் முக்கியத்துவம் பெறவில்லை.

இதனை தவிர தமிழ் சிறைக்கைதிகளின் விடயத்திலும் இலங்கை அரசாங்கம் இன்னும் முன்னுரிமை வழங்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிஸ்வாலிடம் தெரிவித்தனர்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் குழு ஒன்றை அமைக்க புதிய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இதன்போது பிஸ்வால் கூட்டமைப்பினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கூட்டமைப்பினர் அது தொடர்பில் முழுமை விடயங்கள் வெளியாகவில்லை என்றும் பிஸ்வாலிடம் சுட்டிக்காட்டியது.

புதிய அரசாங்கத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்தே தமிழ் மக்கள் அதற்கு வாக்களித்தனர். எனினும் இன்னும் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் காங்ரஸ் பிரதிநிதிகளுடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் சந்தித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மு.கா. செயலாளர் நாயகமும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரான நாட்டு நிலைமைகள் குறித்து அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட மு.கா. பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை நல்லாட்சிக்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் ஹக்கீமின் வேண்டுதலின் பேரில் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகம் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கு விளக்கிக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நிஷா பிஸ்வால், இத்திட்டங்கள் நாட்டு மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் இலங்கையின் நல்லாட்சிக்கும் பொது நல விடயங்களுக்கும் அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிபிட்டார்.

SHARE