புதிய உலக சாதனை படைத்த யூனிஸ்கான்

171
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய யூனிஸ்கான், பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.இந்த டெஸ்ட் போட்டி பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் 2வது இன்னிங்சில் 377 ஓட்டங்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது.இதில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் மூத்த வீரர் யூனிஸ்கான் சதம் அடித்தார். இவர் 171 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

டான் பிராட்மேன், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் குவித்திருந்த நிலையில், யூனிஸ்கான், 30 சதங்களை விளாசி, பிராட்மேனை முந்தியுள்ளார்.

இந்த பட்டியலில் 51 சதங்களுடன், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

30 சதங்கள் அடித்த வீரர்களான மேத்யூ ஹேடன் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால் ஆகியோருடன் யூனிஸ்கான், 8வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ்சில் ஆடும் துடுப்பாட்டக்காரர்கள் மிகவும் தடுமாறுவது வழக்கம்.

ஆடுகளம் மிக மோசமாக இருக்கும் என்பதால் சரியாக விளையாடுவது என்பது சவாலான விடயம். ஆனால் அப்படிப்பட்ட 4வது இன்னிங்சில் மட்டும் யூனிஸ்கான் இதுவரை 5 சதங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, கவாஸ்கர், பொண்டிங் மேற்கிந்திய தீவுகளின் ராம்நரேஷ் சர்வான், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் தலா 4 சதங்களை, 4வது இன்னிங்சில் அடித்திருந்தனர்.

சச்சின் கூட 3 சதம் தான் அடித்திருந்தார். இந்தப் பட்டியலில் யூனிஸ்கான் தான் அதிக சதங்களை விளாசியுள்ளார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

SHARE