உழைக்கும் தமிழ் மக்கள், தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்தே உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து எடுக்கும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வழமையான ஆண்டுகளை விடவும், இம்முறை தமிழ் மக்களுக்கு இரண்டு முக்கியமான செய்திகளை சொல்லியிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், உலகமெல்லாம் வாழும் நூற்றுஇருபதுகோடி கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை பிரான்ஸிசின் வருகையும்.
இவ்விரு நிகழ்வுகளின் மூலம் தமிழ்மொழி பேசும் மக்களினுடைய அன்றாடப்பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வும், இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய நிரந்தர அரசியல் தீர்வும் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வவுனியா பொன்னரசங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றும் போதே, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ்மொழி பேசும் மக்களினுடைய அன்றாடப்பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வும், இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய நிரந்தர அரசியல் தீர்வும் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு, நம்பிக்கையை ஊட்டும் வகையில் புதிய அரசாங்கம் செயல்பட்டு இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள, மக்களிடையே பிளவினை ஏற்படுத்தியுள்ள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதிலேயே மைத்திரி அரசின் இருப்பு தங்கியுள்ளது. புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்துக்குள் தமிழ்மொழி பேசும் மக்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு காண்பது தொடர்பான திட்டம் உள்ளடக்கப்படுவதோடு, அரசியல் தீர்வை காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் படியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் மைத்திரி அரசிடம் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்காக மட்டும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. தமது அன்றாட பிரச்சினைகளிலிருந்து நிரந்தரமான சமாதானத்துக்கும் சேர்த்தே வாக்களித்துள்ளார்கள். இந்த ஆண்டுக்குள் ஒரு கௌரவமான அரசியல் தீர்வைக் காண்பதற்குப் புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தைப்பொங்கல் திருநாளில் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.
இப்பொங்கல் விழாவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, இ.இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் தர்மலிங்கம் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர். இதன்போது கணேசபுரம் கிராமத்திலும், கூமாங்குளத்திலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
கையளிக்கப்பட்டன
.