புயலாக ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ! அல் நஸர் அதிரடி வெற்றி

111

 

 

சவுதி புரோ லீக்கில் அல் நஸர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அல் டாய் அணியை வீழ்த்தியது.

ஒட்டாவியோ கோல்
Al-Awwal மைதானத்தில் நடந்த சவுதி புரோ லீக் போட்டியில் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் டாய் (Al-Tai) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 20வது நிமிடத்திலேயே அல் நஸரின் ஒட்டாவியோ பந்தை உயரத் தூக்கியடித்து கோலாக மாற்றினார். அதற்கு பதிலடியாக அல் டாய் வீரர் விர்கில் 22வது நிமிடத்தில் மிரட்டலாக ஒரு கோல் அடித்தார்.

அதன் பின்னர் 45+7வது நிமிடத்தில் அல் நஸருக்கு அப்துல் ரஹ்மான் மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது. இதன்மூலம் முதல் பாதியில் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ருத்ர தாண்டவம் ரொனால்டோ
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் ரொனால்டோ ருத்ர தாண்டவம் ஆடினார். 64வது நிமிடத்தில் தன்னிடம் பாஸான பந்தை ரொனால்டோ அப்படியே திருப்பி கோலாக மாற்றினார்.

அடுத்து இரண்டு நிமிடங்களில் (66வது நிமிடம்) மின்னல் வேகத்தில் செயல்பட்டு ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் உயர பறந்து வந்த பந்தை, காற்றில் எகிறி தலையால் முட்டி ரொனால்டோ கோலாக மாற்றினார். இதன்மூலம் அல் நஸர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, தனது எக்ஸ் பக்கத்தில் ”இப்படித்தான் செய்கிறோம். அற்புதமான வெற்றி மற்றும் மற்றொரு ஹாட்ரிக்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE