புயலின் சிறுகதைகள் ஒரு பார்வை

331

காற்று சில வேளைகளில் அமைதியை இழந்து வேகங்கொண்டு புயலாகிவிடுகிறது. ஸ்ரீகந்தநேசன் அமைதியான ஒரு மாணவன். ஆனால் அவன் வாழ்ந்த காலச்சூழல் அவனை எப்போதுமே அமைதியானவனாக இருக்க அனுமதிக்கவில்லை. சுயமுயற்சியிலேயே தன்னிறைவு கண்டு வாழ்ந்த கிராமிய பொருளாதாரச் சூழலில் வாழ்ந்த ஸ்ரீகந்தநேசனுக்கு தனது மக்களின் வாழ்வின் அடிப்படைகள் அனைத்தும் அர்த்தமற்ற போரால் அடியோடு பிடுங்கி எறியப்பட்ட சூழல் மனத்தின் அமைதியைக் குலைத்தது. அதுவே வேகம் கொண்டு புயலாகவும் அவனை மாற்றியது. அவன் சொல்ல நினைத்தவை ஏராளம் ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாத காலச்சூழல் அவனின் மன வேகத்திற்கு ஒரு வகையில் தடையாகவும் இடர்படுத்தியது. அவற்றையெல்லாம் கடந்து அவன், தான் வாழும் சமூகத்தில் கண்ட அவலம்மிக்க அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு ஊடகமாக இப்படைப்பாக்கம் உங்கள் முன் படைக்கப்படுகின்றது

ஓன்பது சிறுகதைகளை கொண்டமைந்துள்ள இப்படைப்பில் தலைப்பாகவுள்ள ‘ஆகாயத்தாமரைகள்’ என்ற சிறுகதை தமிழ் – சிங்கள மக்களிடையே வகுப்பு வாத அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்ட இன முரண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. தமிழர் வளர்க்கும் நாய்களும், சிங்களவர் வளர்க்கும் நாய்களும், நான் சிங்களவன், தமிழன் என்று சண்டையா பிடிக்கின்றன? ஏன் எங்கட நாயின் குட்டி கூட பக்கத்து சுப்பிரமணியத்தின் நாயுடன் கொண்ட காதலால் போட்ட குட்டியல்லவா? என்ற பண்டாவின் வார்த்தைகளாக வெளிப்படுத்தப்படுகின்ற சிந்தனை ஒவ்வொரு மனித இதயங்களிலும் ஊற்றெடுக்குமாக இருந்தால் இந்த நாட்டில் அமைதிக்கு பங்கமேற்பட வாய்ப்பே இருக்காது. இது கண்கெட்ட பின்னர் கிடைத்த சூரிய உதயமாகக் கருதப்படாமல் எமது எதிர்காலச் சந்ததியின் நல்வாழ்வில் அக்கறையுள்ள பலரும் கருத்தில் கொள்ள வேண்டிய கருத்தே என்பதில் ஐயமெதுவும் இல்லை.

தொகுப்பின் முதலாவதாகவுள்ள ‘வேதனையில் பூத்த வேப்பம் பூக்கள்’ என்ற சிறுகதை வேப்பம் மரத்தை குறியீட்டுப் பாங்கில் பயன்படுத்தி போர்க்காலச் சூழலில் தனது வாழ்க்கைக் கனவுகளைப் பறிகொடுத்த ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கைச் சுவடுகளை எடுத்துக்காட்டி நிற்கிறது.

‘இறுதிக்கு முதல் நாளைய தேசம் உனது கைகளில்’ என்ற சிறுகதையில் வறுமையின் கொடுமையால் சிறுவயதிலேயே கூலித்தொழிலாளியாகித் தனது வாழ்வைப் பலிகொடுத்த சிறுவனுக்கு வழிகாட்டியாக நின்று அவனது வாழ்வுக்கு ஒளியூட்டிய அப்புக்குட்டி ஐயாவின் தியாகத்தை எடுத்துக்காட்டுகின்றது. கதியற்று நின்ற சிறுவனுக்கு வழிகாட்டி ஒளியூட்டிய அப்புக்குட்டி ஐயா அநாதையாகவே தனது வாழ்வை முடித்துக்கொள்கிறார். தன்னலம் கருதாது செயற்பட்ட ஒருவரின் மனிதாபிமானம் மிக்க பணியின் மேன்மையை எடுத்துக்காட்டும் போது மறுபக்கத்தில் சிறுவர் நலனுக்காகவே செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் நிறுவனங்களின் கவனயீனம் யாராவது ஒருவரின் மனச்சாட்சியையாவது தொட்டுக்கொள்ளாதா என்ற அங்கலாய்ப்பு இங்கே தெரிகின்றது. அந்தத் தனிமனித ஆத்மா அநாதையாகிப்போய் வாழ்வை முடித்துக்கொண்டாலும் அவர் விதைத்த முத்து சமூகத்தில் சிறுவர்களின் நலனுக்காக உழைக்கும்போது அந்த ஆத்மாவுக்கு ஆறுதல் கிடைக்கும் என நம்பலாம்.

‘பூக்காத முல்லை’ என்ற சிறுகதையும் சிறுவர்களின் உரிமை தொடர்பான சிந்தனையின் வெளிப்பாடாகவே உள்ளது. இக்கதையில் வருகின்ற வனஜா குடிகாரத் தகப்பனின் கொடுமைகளுக்கு பலியாகிப்போகின்ற வேளையில் தான் ஆசிரியை ஒருத்தியின் ஆதரவைப் பெற்றுக்கொள்கின்றாள். ஆனால் வனஜாவிற்கு வாழ்வளிக்க வந்த ஆசிரியை தனது உதவிக்காக அவளிடம் கேட்ட குருதட்சணை மிகவும் கொடூரமானது. ஆசிரியை தனது சுயநலத்திற்காக வனஜாவின் சிறுநீரகத்தில் ஒன்றை குருதட்சணையாகக் கேட்க அவள் இரண்டையுமே கொடுத்து தனது வாழ்வை முடித்துக்கொள்கிறாள். இது வாழ்த்தும் கைகளிலும் வாளிருக்கும் என்ற எச்சரிக்கையை விடுக்கும் சிறுகதையாகவே தெரிகின்றது.

இடையிடையே உள்ள மறக்கமுடியவில்லை, இரண்டுவேடங்கள், விபத்து, கடந்தகால ஞாபகங்கள் ஆகிய நான்கு சிறிய கதைகளிலும் ஆண்களை ஏமாற்றிய பெண்களே எடுத்துக்காட்டப்படுகின்றனர். காதலிப்பது போலநடித்து கைப்பொருள் முழுவதையும் கவர்ந்த பின்னர் வெறுங்கையோடிருந்தவனை ஏமாற்றிவிட்டுப் போனவளை மறக்கமுடியாது நிற்கும் சுதா என்பவனையும், அவனை ஏமாற்றிய காவியாவையும் எடுத்துக்காட்டுவது மறக்கமுடியவில்லை என்ற சிறுகதை. கையில் காசில்லாத கண்ணனை ஏமாற்றிவிட்டுப் போன கவிதாவின் சிறுகதையாக உள்ளது இரண்டு வேடங்கள் என்ற சிறுகதை. வாடகைக்குக் குடியிருக்கச் சென்ற வாலிபனை காதலிப்பதுபோல நடித்துக்கொண்டு வேறு ஆண்களோடு கள்ளத்தொடர்புகளை வைத்திருந்த நதியா என்ற பெண்ணை எடுத்துக்காட்டுவது விபத்து என்ற சிறுகதை. பிரிந்த தனது மனைவியையும், இறந்த மகனையும் நினைத்து வாழும் ஆறுமுகத்தின் வாழ்க்கையைக் காட்டுவது கடந்தகால ஞாபகங்கள் என்ற சிறுகதை.

பொதுவாக இம் நான்கு சிறுகதைகளிலும் கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவு சாத்தும் பெண்களை அடையாளம் காட்டுவனவாகவே உள்ளன. இது கூட ஒரு வகையில் போர்காலச் சூழலின் விளைவுதானே என்ற எண்ணம் தோன்றுகின்றது.
மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினையை ‘தொடர்கதை…’ என்ற சிறுகதை எடுத்துக்காட்டுகின்றது. மலையகம் தொடக்கம் ஏனைய பிரசேதங்களில் அவர்கள் படும் அவலங்களை வெளிக்காட்டுகின்றது.

பொதுவாக இச்சிறுகதைகள் போர்காலச் சூழலால் மனிதநேயத்தை இழந்து நிற்கும் மனிதர்களின் உறைந்துபோன மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி விலகிப்போன இன உறவுகளை இணைத்து சுபீட்சமானதொரு இலங்கையைக் கட்டியெழுப்பவேண்டும் என்ற கனவின் வெளிப்பாடுகளாகவே சாட்சி தருகின்றன. இது வெறும் ஊமைகண்ட கனவாகப்போகக்கூடாது என்ற எதிர்பார்ப்போடு ஸ்ரீகந்தநேசனின் சிந்தனை வளம்பெறவும், ஆக்கப்பணி தொடரவும் எனது ஆசியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என பேராசிரியர் கலாநிதி.ம.இரகுநாதன் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகந்தநேசன் அவர்கள் வவுனியாவிலிருந்து வெளிவரக்கூடிய தினப்புயல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றியவர். அத்துடன் இவரது ஆக்கங்களான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் தினப்புயல் மற்றும் பல பத்திரிகைகளிலும பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. காலத்தின் தேவை கருதி தான் வாழ்ந்த சூழல் மற்றும் பெற்ற அனுபவங்களைக்கொண்டு படைப்புக்கள் பல இவரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவர் ஒரு ஆசிரியராக இருக்கின்ற அதேவேளை தமிழ்மொழிக்காகவும், இலக்கிய வளர்ச்சிக்காகவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துக்கொண்டிருப்பவர். எதிர்காலத்தில் இவர் பல படைப்புக்களை தரவேண்டும். அதன் மூலம் அனைவரும் பயன்பெறவேண்டும்.  இவருடைய ஆக்கங்கள்  பல விருதுகளையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இவரது இந்தப் பயணம் தொடரவேண்டும் என வாழ்த்துவதோடு, இறைவனையும் பிரார்த்திக்கின்றேன்.

க.சசிகரன்
தினப்புயல் பத்திரிகை
இல.06, கண்டி வீதி,
தேக்கவத்தை, வவுனியா.

SHARE