புரோ கபடியில் ரூ.1 கோடி பரிசை வெல்லப்போவது யார்? மும்பை-பெங்களூரு இன்று பலப்பரீட்சை

190
உலகெங்கும் உள்ள கபடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கும் 2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 18-ந் திகதி முதல் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் மும்பையும், பெங்களூரு புல்சும் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளன.

இந்த நிலையில் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு அரங்கேறும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் அனுப்குமார் தலைமையிலான மும்பை அணி, மன்ஜீத் சிலார் தலைமையிலான பெங்களூரு அணியை சந்திக்கிறது. 14 லீக் ஆட்டங்களில் 2-ல் மட்டுமே தோல்வியை தழுவிய மும்பை அணி, அரைஇறுதியில் 35-18 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை துவம்சம் செய்தது. பலம் வாய்ந்த அணியாக திகழும் மும்பை அணி, எதிரணியினரை மடக்கி பிடிப்பதில் அசாத்திய திறமையுடன் காணப்படுகிறது. அந்த வகையில் மட்டும் மும்பை அணி 166 புள்ளிகள் குவித்துள்ளது.

பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றியையும், 5 தோல்வியையும் கண்டது. அந்த அணி அரை இறுதிப்போட்டியில் 39-38 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத் அணியை மயிரிழையில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைத்துள்ளது. முந்தைய லீக் ஆட்டங்கள் இரண்டிலும் மும்பை அணி, பெங்களூருவை (36-23, 36-29) சாய்த்து இருக்கிறது. அந்த ஆதிக்கத்தை தொடர மும்பை அணி முழுமையாக முயற்சிக்கும்.

அத்துடன் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் மும்பை அணி பட்டத்தை பறிக்க பக்கபலமாக இருக்கும். அதேநேரத்தில் பெங்களூரு அணியும் பட்டத்தை வெல்ல மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐதராபாத்-பாட்னா அணிகள் மோதுகின்றன.

புரோ கபடி போட்டியில் பரிசுத்தொகை இந்த சீசனில் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 3-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களுக்கு ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக அளிக்கப்படுகின்றன.

SHARE