புலம்பெயர் தமிழர்களின் குரல்களை நசுக்கத் துடிக்கும் பிள்ளையானின் சித்தப்பன்

348

 

 

புலம்பெயர் தமிழர்களின் குரல்களை நசுக்கத் துடிக்கும் பிள்ளையானின் சித்தப்பன்

ஈழமக்களின் வெகுண்டெழுந்த போராட்டமும் அதற்கு பக்கபலமாகவுள்ள புலம்பெயர் தமிழர்களின் போராட்டமும், இப்போராட்டங்களை மழுங்கடித்து புலம்பெயர் தமிழர்களின் குரல்களை நசுக்கத் துடிக்கும் பிள்ளையானின் சித்தப்பனின் புதிய சதித்திட்டமும்

புலம்பெயர் உறவுகள் தாங்கள் முடிவுசெய்வதையே நாங்களும் கேட்கவேண்டும் அதன்படியே நாங்களும் நடக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. ஈழத்தமிழ் மக்களின் நிலையையும் அவர்களின் கோரிக்கையையும் அடிப்படையாகக்கொண்டே நாங்கள் செயற்பட முடியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புலம்பெயர் உறவுகள் நாட்டின் தற்போதைய நிலைமையையும், தமிழர்களின் நிலைமையையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் உணராது எமது தலைவரின் கொடும்பாவியை எரித்து எமது பாதையில் குந்தகம் விளைவிக்கின்ற செயலை செய்வதையிட்டு கவலையடைவதாக சீ.யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சீ.யோகேஸ்வரன் அவர்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறாரா? அவரின் கூற்றுப்படியே நாட்டின் தற்போதைய நிலைமையையும், தமிழர்களின் நிலைமையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் அறியாது தூங்கிக்கொண்டிருக்கிறாரா யோகேஸ்வரன்? முதலில் யோகேஸ்வரன் அவர்கள் ஈழமக்களின் நிலையையும் அவர்களின் கோரிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறாரா? முதலில் தனது கிழக்கு மாகாண மக்களின் நிலையையும் அவர்களின் கோரிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு யோகேஸ்வரன் அவர்கள் செயல்படுகிறாரா? உண்மையில் இல்லையென்றே கூறவேண்டும்.

யோகேஸ்வரன் அவர்கள் ஒட்டுக்குழுவைச் சார்ந்த பிள்ளையானுக்குச் சித்தப்பன் ஆவார். கொடுக்கல் வாங்கலின் மூலமாகக் கூட்டமைப்பிற்குள் இணைக்கப்பட்டவரே இந்த யோகேஸ்வரன், தமக்கு நீதி வழங்கக்கோரி காணாமல் போனோரின் உறவினர்களும், தமிழ் மக்களும் போராடுகிறார்கள், மேலும் நடந்த இனப்படுகொலைக்காக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், ஐநா அதில் ஈடுபடவேண்டும் என்று ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் போராடாடுகிறார்கள் இவற்றை அறிந்திருக்கிறாரா யோகேஸ்வரன்? அல்லது தூங்கிக்கொண்டிருக்கிறாரா? இல்லையெனில் தூங்குவது போன்று நடிக்கிறாரா? கிழக்கு மாகாணத்தில் சிங்களத்துடன் இணைந்து கருணா, பிள்ளையானால் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள் இதனை அறிந்திருக்கிறாரா யோகேஸ்வரன்? இது தொடர்பாக ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார் யோகேஸ்வரன்?

கிழக்கில் கோத்தாவின் முகாமில் பல தமிழர்கள் பிடித்து வைக்கப்பட்டது தொடர்பாக வடக்கை சார்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் சிங்கள அரசை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார், கோத்தாவின் முகாம்கள் தொடர்பாக இதுவரை ஏன் யோகேஸ்வரன் அவர்கள் வாய்திறக்கவில்லை? இவ்விடயத்தை முதலில் எடுத்துரைக்க வேண்டியவர் யோகேஸ்வரன் அல்லவா? இது மட்டுமல்ல கருணா, பிள்ளையானின் முகாம்கள் தொடர்பாக இதுவரை ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார் யோகேஸ்வரன்? தனது கிழக்கு மாகாணத்தில் என்ன நடைபெறுகிறது, அங்கு உள்ள மக்களின் கோரிக்கைகள் என்ன, அவர்களின் போராட்டங்களைக் கூட கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கிறாரா யோகேஸ்வரன்? தனது மக்களின் நிலையையும் அவர்களின் கோரிக்கையையும் அடிப்படையாகக்கொண்டே செயற்பட முடியாத யோகேஸ்வரன் தன்நிலை மறந்து தாமே பின்பற்றாத ஒன்றைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுறுத்துகிறார். இதனை நினைத்து இவரே வெட்கப்படவேண்டும். உண்மையில் யோகேஸ்வரன் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களிலேயே தனது ஆர்வத்தைச் செலுத்துக்கொண்டு கிழக்கின் மக்களின் நிலமைகளைப் பற்றி கவலைகொள்ளாது இருந்துவருகிறார்.

சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலமையையும் அவர்களின் கோரிக்கைகளையும் அடிப்படையாகக்கொண்டு செயற்படாமையினால் புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தில் உள்ள தமிழ் மக்களும் இவர்களின் கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் கொடும்பாவிகளை புலம்பெயர் தமிழர்கள் எரித்துவிட்டார்கள் எனபதற்காக யோகேஸ்வரன் கூறுகிறார் புலம்பெயர் தமிழர்கள் முடிவுசெய்வதையே நாங்கள் கேட்கவேண்டும், அதன்படியே நாங்கள் நடக்க வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என இவர் உரைக்கிறார். அவ்வாறாயின் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் இவர்களின் கொடும்பாவிகளை எரிக்க ஆரம்பித்திருக்கிறார்களே அதற்கு என்ன நொண்டிச் சாட்டு கூறப்போகிறார் யோகேஸ்வரன்? கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை மக்களின் தவறல்ல தமிழரின் நலனில் அக்கறையின்றி செயல்படும் அரசியல்வாதிகளின் தவறினால் அவை எரிக்கப்பட்டன . சுமந்திரன், சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளின் தவறுகளை முழுமையாக மறைத்துவிட்டு தமிழ் மக்கள் மீது மட்டும் குறை கூறுகிறார் யோகேஸ்வரன். யோகேஸ்வரன் அவர்கள் தமது தலைவர்கள் செய்கின்ற தவறுகளை மறைத்து அவற்றைத் திசைதிருப்பி புலம்பெயர் தமிழர்களின் தலையில் பழியைத் தூக்கிப் போடுவதற்கு முனைகிறார். ஆனால் கூட்டமைப்பினருக்கு எதிராக ஈழத்தில் உள்ள தமிழ் மக்களே போராட்டங்களை நடத்துவது தொடர்பாக அதற்கு காரணங்களைக் கூறமுடியாமல் இவர்கள் திகைத்து நிற்கின்றனர். இதற்கும் சிங்களத்தைப் போன்றே இவர்களும் புலம்பெயர் தமிழர்கள் மீதே பழியைப் போட்டு தப்பித்துக்கொள்கின்ற தந்திரத்தைப் பயன்படுத்துவார்கள்.

ஈழத்தமிழர்களே புலம்பெயர் நாடுகளிலும் உள்ளார்கள், அவர்களின் உறவினர்களே ஈழத்திலும் உள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பாகுபாடு பார்க்கின்ற பார்வையானது தமிழர்களைப் பிரித்தாளும் யோகேஸ்வரனின் சூழ்ச்சியாகும். புலம்பெயர் தமிழர்களைப் புறக்கணிக்க முடியாது, அவர்களின் கோரிக்கைகளையும் நிராகரிக்க முடியாது. கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலையையும் அவர்களின் கோரிக்கைகளையும் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதனையே புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கைகளாக கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தி வருகின்றனர். பணம் கொடுத்து கூட்டமைப்பிற்குள் பிரவேசித்தவர்கள் தொடர்ந்து தமது தலைவர்களின் கால்களை அமுக்கிக்கொண்டு அவர்களுக்கு மட்டுமே விசுவாசிகளாக நடந்துகொண்டு அரசியலில் ஈடுபடுவதனை விரும்புகிறார்களே தவிர. இவர்கள் மக்களுக்கு விசுவாசிகளாக இருப்பதற்கு மறுக்கின்றனர். சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் அண்மைக்கால செயல்பாடுகள் தொடர்பாக கூட்டமைப்பில் உள்ளவர்களே கண்டிக்கிறார்கள்.

சிங்களத்தின் முடிவுகளுக்கு கூட்டமைப்பினர் இணங்கிச் செல்வதனை தமிழ் மக்கள் கண்டிக்க கூடாது என்று எவரும் கூறமுடியாது. சிங்களத்திற்கு துணைபோகும் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் தவறுகளைத் தட்டிக்கேட்க கூடாது என்று தமிழ் மக்களுக்கு எவரும் கட்டளை போடமுடியாது. கருணா, பிள்ளையான் போன்றவர்களின் மீது விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், அவர்களைச் சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும் என இதுவரை வலியுறுத்தாமல் அவர்களுடன் விழாக்களில் கலந்து சிறப்பிக்கிறார் யோகேஸ்வரன். இவர் ஒன்றிணைந்த தமிழர்களின் குரல்களை நசுக்குவதற்கு முயல்கிறார். தமிழர்கள் ஈழத்தில் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குத் துணையான புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை மழுங்கடிக்க முனைகிறார்கள் சிங்களத்திற்கு துணைபோகும் சக்திகள். மக்களின் எழுச்சியைக் கண்டு தவறுகளை மேற்கொண்டுவரும் கூட்டமைப்பினரும் அச்சமடைகிறார்கள். இதன் வெளிப்பாடாகவே யோகேஸ்வரனின் கருத்துக்களும் உள்ளன. கூட்டமைப்பில் உள்ளவர்கள் தமது தவறுகளை முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் புலிகள் இருந்த இடத்தில் தமிழ் மக்கள் இருந்துகொண்டு உங்களைத் தட்டிக் கேட்பார்கள் எனபதனை மறந்துவிடாதீர்கள்.

யோகேஸ்வரன் அவர்களே ஈழத்தமிழ் மக்களின் நிலையையும் அவர்களின் கோரிக்கையையும் அடிப்படையாகக்கொண்டு முதலில் நீங்கள் செயல்படுங்கள், வெறும் வாய்ச் சொற்களால் மட்டும் அதனை நிறுத்திவிடாதீர்கள், உங்களின் கொள்கை தவறிய அரசியல் பாதையையும், உங்களின் விருப்பங்களையும் மக்கள் மீது திணிக்காதீர்கள். அதனைப் புலம்பெயர் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தாதீர்கள்.

-லிங்கேஸ்வரன் விஸ்வா

SHARE