புலிகளின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் தலைமையில் உலகையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தமிழினம், உலக வல்லரசுகளை நடுங்க வைத்த தமிழினம்-தொல்.திருமாவளவன்

457

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு மற்றும் 40ஆவது ஆண்டு விழா கடந்த அக்டோபர் 4, 5, ஆகிய நாட்களில் ஜெர்மனி – ஹம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. 

ஏற்கனவே, 2004ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ் மாநாட்டிலும் 2007ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 10ஆவது மாநாட்டிலும் கலந்துகொண்டேன். அடுத்து 2011ஆம் ஆண்டு ஃபிரான்சில் நடைபெற்ற 11ஆவது மாநாட்டிற்கும் அழைக்கப்பட்டேன். ஆனால்கலந்துகொள்ள இயலவில்லை. தற்போது ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டிலும் பங்கேற்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். இவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் துரை.கணேசலிங்கன் அவர்கள் என்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர். அவர் விடுத்த அழைப்பையேற்று அக்டோபர் 3, 2014 அன்று எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் துபை வழியாக ஜெர்மனிக்குச் சென்றேன். டுஸ்ஸல்டார்ஃப் விமான நிலையத்தில் இறங்கியபோது,அம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த தமிழர்களை அங்கே சந்தித்தேன்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைச் சார்ந்த ஜெர்மனி ஞானம் எங்களை வரவேற்றார். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரு.மிக்கிசெட்டி அவர்களுடன் வந்திருந்த ஏழுபேரும் நானும் ஞானம் கொண்டுவந்திருந்த ஒரே வண்டியில் ஏறிக்கொண்டோம். விமான நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறும் இடமான ஹம்’ நகருக்குச் செல்ல சுமார் மணிநேரம் ஆனது. ஜெர்மனியிலும் போக்குவரத்து நெரிசல்தான். பொழுது இரவை நெருங்கும் வேளையில் நாங்கள் ஹம் நகரை நெருங்கினோம். வண்டி ஒரு கோயிலின் வாசலில் போய் நின்றது. ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயம் என அந்தக் கோயிலின் பெயர்ப்பலகையில் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ஹிந்து டெம்பிள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஜெர்மனியில் இப்படியொரு கோயிலா என்று வியப்படைந்தேன். பொதுவாகஐரோப்பிய நாடுகளில் வீட்டின் கூரைக்குள்ளேயே அடங்கியிருக்கும் வகையில் கோயில்களை அமைத்துக்கொள்ள மட்டுமே அரசு அனுமதிக்கும் என்றும் வெளியில் விண்ணை நோக்கி கோபுரங்களை அமைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஹம் நகரிலுள்ள இந்த கோயிலில் மட்டுமே இத்தகைய கோபுரம் அமைக்க அரசு அனுமதியளித்திருப்பதுதான் இக்கோயிலுக்குள்ள சிறப்பு என்றும் அறிந்துகொள்ள முடிந்தது. கோயிலின் வாசலில் வரவேற்பு வளைவு ஒன்றை அமைக்கும் கட்டுமான பணிகளை அப்போதுதான் செய்து கொண்டிருந்தனர். கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு அழகிய வீடு. அவ்வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த தோழர்கள் வண்டியிலிருந்து இறங்கிய எங்களை வரவேற்று அவ்வீட்டின் பின்புறமுள்ள முதல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கேதான் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டில்தான் காமாட்சி அம்பாள் ஆலயத்தை நிறுவிய பாஸ்கர குருக்கள் குடும்பத்தோடு தங்கியிருக்கின்றார் என்பதையும் வரவேற்ற தோழர்கள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

அங்கே தமிழகத்திலிருந்து  வருகை தந்திருந்த பெருங்கவிக்கோ வாமுசே உட்பட பலரைக் காண முடிந்தது. நண்பர் துரை கணேசலிங்கன்வேலுப்பிள்ளைராஜ்சூரி ஆகியோரும் அங்கே எங்களை அகமகிழ்வோடு வரவேற்றனர். இரவுஉணவு அங்கே வழங்கப்பட்டது. ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் தமிழகத்தைச் சார்ந்த தோழர்களும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டுபடம் பிடித்துக் கொண்டோம். அப்போது தமிழகத்தைச் சார்ந்த தம்பிகள் சிலர் சிமெண்ட் வேலைவண்ணம் தீட்டும் வேலை செய்த கையோடு ஓடிவந்து என்னிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். தாங்கள் சீர்காழி பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும்கோவில் சிற்ப வேலைகள் செய்யவும் வண்ணம் தீட்டவும் வந்தோம் என்றும்  கூறியவாறு எனது கைகளைப் பிடித்து குலுக்கினர். அப்போதுஅக்கோயிலை நிறுவிய பாஸ்கர குருக்களும் காவி உடையோடு அங்கே வந்தார். அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். அவரோடும் படம் பிடித்துக் கொண்டோம்.

பின்னர்நெடுநேரம் அங்கிருந்த பலரும் பேசிக் கொண்டிருந்தோம். கடுங்குளிர் என்ற அச்சத்தோடுதான் ஜெர்மனியில் இறங்கினேன்.  ஆனால்அவ்வளவு குளிர் இல்லை. என்றாலும்நெடுநேரம் வெளியில் நிற்க இயலவில்லை. எங்கே தங்கபோகிறோம் என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். ஜெர்மனியைச் சார்ந்த திருமதி சுபாஷினி என்பவரும் அவருடன் வந்திருந்த தமிழகத்தைச் சார்ந்த அருண் என்பவரும் லங்காஸ்ரீ இணைய தளத்தின் செய்தியாளர் தமிழரசு என்பவரும் என்னைப் போலவே எங்கே தங்குவது என்று தெரியாமல் நண்பர்களுடன் பேசியவாறு நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்தனர்.  ஒருவழியாக,  இரவீந்திரன் என்பவர் எங்கள் நால்வரையும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரவீந்திரன்,thiiruma_germany10 உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் ஜெர்மனி நாட்டிற்கான பொறுப்பாளர்களில் ஒருவர்.  ‘அகரம்’ என்கிற இதழின் ஆசிரியரும், ‘ஐரோப்பிய தமிழ்  வானொலியின் நிறுவனரும் ஆவார். அவருடைய வீட்டில்தான் நானும்ஜெர்மனியிலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற மூவரும் தங்கினோம்.

அடுத்த நாள் காலையில் நாங்கள் நால்வரும் அதே கோயில் பகுதிக்கு சென்றோம். அங்கேதான் காலைமதியம்உணவு அளிக்கப்பட்டது. அந்தக் கோவிலிலிருந்து பத்து கி.மீ.க்கு அப்பால் உள்ள ஒரு மண்டபத்தில் மாலை 4மணிக்கு மாநாடு தொடங்கியது. அங்கே சென்றதும் ஒரு அதிர்ச்சி! மண்டபத்தின் வாசல்வரவேற்புப் பகுதிஅரங்கம்,மேடை என எங்கும் லைகா மொபைல்’ நிறுவனத்தின் விளம்பர பதாகைகள்! இந்நிறுவனத்தின் ஆதரவுடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு நடைபெறுகிறது என்பது அந்த மண்டபத்திற்குச் சென்ற பின்னர்தான் தெரிந்தது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மாநாட்டுக்கு வந்தவர்கள் யாரும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எனக்கோ பெரும் தயக்கம். அரங்கிற்குள் செல்வதா?  வேண்டாமாஎன்று வாசலிலேயே தயங்கியபடி நின்று கொண்டிருந்தேன். நான் தயங்கிக் கொண்டிருக்கும் போதேமாநாட்டு குழுவின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டுக் கொடியும் ஏற்றப்பட்டது. பின்னர்நானும் தயக்கத்தோடு அவர்களுடன் அரங்கிற்குள் நுழைந்தபோதுவரவேற்பு பகுதியில் ஏராளமான லைகா’ பதாகைகள்!  அங்கிருந்து எங்களை மேளதாளத்துடன் அழைத்துச்சென்று மேடையில் ஏற்றினர். அங்கே மேடையின் பின்பகுதியிலும் லைகா’ பதாகை! என்ன செய்வதேன்றே புரியாத நிலையில்தயக்கத்தை வெளிக்காட்ட இயலாமல் அவர்களுடன் நானும் நின்றேன். மாநாட்டுக்கான வாழ்த்துப் பாடல் ஒலித்து முடிந்ததும் மேடையைவிட்டு இறங்கினோம். இறங்கியதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களிடம் லைகாவின் பதாகைகள் பற்றிப் பேசினேன். அவரும் என்னைப் போலவே அதிர்ச்சியோடும் தயக்கத்தோடும் தான் இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. என்ன செய்வதுஇப்படி பண்ணியிருக்கிறார்களே! என்று ஆதங்கப்பட்டார்.

அனைத்துப் பதாகைகளையும் அப்புறப்படுத்தச் சொல்லலாமா?’ என்று அவரிடத்தில் கேட்டேன். ஆமாம்! மாநாட்டை நடத்துவோரிடம் சொல்லுவோம்’ என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். சிறிது நேரத்தில்தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த மிக்கிச் செட்டி மற்றும் சத்திஷ் செட்டி ஆகிய இருவரும் வந்து என்னிடத்தில் லைகாவிளம்பர பதாகைகளைப் பற்றிக் கேட்டனர். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு சொல்லுவோமென்று மிகுந்த பதற்றத்துடன் என்னிடத்தில் கூறினர். நான் லைகா நிறுவனம் பற்றியும் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவர்களிடத்தில் விளக்கினேன். அதைக் கேட்டதும் அவர்கள் இன்னும் ஆவேசம் அடைந்ததைக் காணமுடிந்தது. இந்நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் சிங்கள இனவெறியன்,இனப்படுகொலை குற்றவாளியான இராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும்தொழில்ரீதியாக இவர்களுக்கிடையில் நட்புறவு இருக்கிறது என்றும் தமிழகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. இதனால்லைகா மொபைல்  நிறுவனத்தார் தயாரிக்கும் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி’ என்னும் திரைப்படத்திற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது என்பதையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்கள் இருவரும் மிகவும் அதிர்ச்சியுற்றுமாநாட்டை நடத்தும் தோழர்களோடு பேசிஅவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்கலாம் என்று அங்கிருந்து வேகமாகக் கிளம்பினர்.

மாநாடு நடக்குமோ நடக்காதோ என்று அய்யப்படும் வகையில் பரபரபப்பு உருவானது. ஒரு இளைஞர் வரவேற்பு பகுதியில் ஆவேசமாகஉரத்துப் பேசிக் கொண்டிருந்தார். லைகா மொபைல் நிறுவனத்தைச் சார்ந்த தொழிலாளர்களிடம் வேறு சிலர் வேகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தச் சூழல் எனக்குச் சற்று பதற்றத்தை உருவாக்கியது. அனைத்துலக அளவில் மாநாட்டை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. பல்வேறு நாடுகளிலிருந்து பேராளர்கள் அரும்பாடுபட்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்நிலையில்இம்மாநாடு சீர்குலைக்கப்பட்டு விடுமோ என்ற பதற்றம்தான் உருவானது.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ராஜ்சூரிலைகா மொபைல் நிறுவனத்தார் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்குப் பல்வேறு வகையில்,கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில்அவருடைய தாயார் பெயரில் நிறுவப்பட்டுள்ளஞானம் ஃபௌண்டேசன்’ என்னும் அறக்கட்டளையின் மூலம் அறப்பணிகளை ஆற்றிவருகின்றனர். அதனால்இராஜபக்சே அரசாங்கத்தினருடன் அவர்களுக்குத் தொடர்பு  இருக்கலாம். இதற்காக லைகா நிறுவனத்தாரை எப்படி எதிராகப் பார்க்கமுடியும் என்று கேட்டார். அத்துடன்அந்நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் அவர்களின் குடும்பமும் ஒரு மாவீரர் குடும்பம்தான் என்றும் கூறினார். எனினும் மேடையிலுள்ள பதாகையை மட்டுமாவது அகற்றுங்கள் என்று சொன்னதற்கு,ஏற்கனவேஇரண்டு முறை பதாகைகளை மாற்றி,  இது மூன்றாவது பதாகையாக வைத்திருக்கிறோம். இதைப் பெரிதுப்படுத்தாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்குமேல்அவர்களை வற்புறுத்துவது நாகரிகமில்லை என்று அமைதியாகிவிட்டேன். வரவேற்பு பகுதியில் ஆவேசமாக உரத்துப்பேசிய இளைஞரை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு வெளியே வந்துஎன்ன பிரச்சினை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். எங்களைக் கவனித்த துரை.கணேசலிங்கம்  அவர்கள்வேகமாக வந்து என் கையைப் பிடித்து அரங்கத்திற்குள் இழுத்துக்கொண்டு போனார். அவர் குழப்பத்தை உருவாக்க வந்திருக்கிறார். அந்த ஆளுடன் பேசவேண்டாம்வாருங்கள்” என்று என்னிடம் கூறினார்.  அந்த நபரோ, “அவரை விடுங்கள் அவர் என்னுடன் பேச விரும்புகிறார்” என்று கணேசலிங்கனிடம் சொன்னார். ஆனாலும்என் கையை வலுவாகப் பிடித்து இழுத்து, ‘உங்கள் பாதுகாப்பு முக்கியம்தனியே எங்கும் செல்லவேண்டாம்’ என்று எனக்கு அறிவுறுத்தினார். அந்த நபர் மாநாட்டில் பங்கேற்காமலேயே போய்விட்டார். அரங்கிற்குள் சென்றதும் துரை.கணேசலிங்கன் மற்றும் பிற பொறுப்பாளர்கள், ‘லைகா மொபைல்’ நிறுவனத்தை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் தமிழர் ஒற்றுமையைச் சிலர் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்” என்று என்னிடத்தில் விளக்கம் கூறினர். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குச் சில நிமிடங்கள் ஆனது. இதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் மக்கள் அமைதியாக அமர்ந்து கலை நிகழச்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். பண்பாட்டு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். வரவேற்பு பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த என்னைக் கண்ட ஈழத் தமிழ்ச் சொந்தங்கள்கைக்குலுக்கியும் நலம் விசாரித்தும் படம் பிடித்தும் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டனர். தமிழக அரசியலைப் பற்றியும் விவாதித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சிறையிலிருப்பதைப் பற்றியும் வருத்தமுடன் விசாரித்தனர்.

லைகா மொபைல் நிறுவனத்தின் விளம்பரப் பதாகைகளை அங்கே வைத்திருந்ததுடன்சிம் கார்டுகள்’ விற்பனையும் செய்துகொண்டிருந்த இளைஞர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டுபடம் பிடித்துக் கொண்டனர். அப்போது அவர்களிடம் நான் வெளிப்படையாக லைகா மொபைல் பற்றி பேசினேன். அவர்கள், ‘அண்ணா நாங்களும் தமிழர்கள் தானேஅந்நிறுவனம் பற்றி நீங்கள் சொல்வது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது’ என்று அப்பாவித்தனமாக என்னைக் கேட்டார்கள். தமிழகத்தில் இப்படியொரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுஅதனை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதற்காகவே கூறுகிறேன்’ என்று அவர்களிடத்தில் விளக்கம் கூறினேன். அவ்வாறு நான் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோதுசில இளைஞர்கள் தொலைவிலிருந்து என்னைப் படம் பிடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டுதமிழகத்திலிருந்து அம்மாநாட்டுக்கு வந்திருந்த வள்ளியூர் வீரக்குமார் அவர்கள் என்னருகே வந்து,என்னிடத்தில் அவர்கள் படம் பிடிப்பது பற்றிக் கூறினார். லைகா மொபைல்நிறுவனத்தின் பதாகை உங்கள் பின்னணியில் இருப்பதை குறிவைத்து படமெடுக்கின்றனர்வேண்டுமென்றே செய்கிறார்கள்கவனமாக இருங்கள்” என்று கூறினார். சிறிது நேரத்தில் அந்த இளைஞர்கள், ‘தங்களின் எதிர்ப்பை முடிந்தால் எங்கள் முதலாளியின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்’ அண்ணா, – என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர். நானும் அங்கிருந்து அரங்கத்திற்குள் சென்றுசிறிதுநேரம் நிகழ்ச்சிகளைக் கவனித்தேன். பின்னர் அங்கிருந்து தேநீர் அருந்துவதற்காக வெளியே கிளம்பினோம்

அரங்கத்தின் வாசலில் என்னைப் பார்த்த ஈழத்தைச் சார்ந்த தோழர் ஒருவர் என்னிடத்தில் மிகுந்த ஆவேகமாகப் பேசினார். எனவேஅவரையும் அழைத்துக்கொண்டு தேநீர் அருந்த ஹம் நகருக்குள் சென்றோம். திருமதி சுபாஷிணி ட்ரெம்மல்அருண் மற்றும் ஈழத்து இளைஞர் ஒருவர் உள்ளிட்ட நாங்கள் ஒரே காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த தோழர் மிகுந்த ஆதங்கத்தோடு  பேசிக்கொண்டே வந்தார். அவர் பேசியது லைகா’ பற்றி அல்ல. அதைப்பற்றி அவர் எதுவுமே பேசவில்லை. என்னைப் பற்றித்தான் வருத்தமாகப் பேசினார். உங்களை ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைச் சூரியனாகப் பார்க்கிறோம்ஆனால்நீங்கள் சாதியவாதிகளின் பிடிக்குள் சிக்கி இருக்கீர்களே’ என்று கொதித்தார். ஈழத்தில் நடக்கும் சாதிக் கொடுமைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமாஎன்று ஆவேசமாகக் கேட்டார். ஓரளவு எனக்கும் தெரியும் என்றேன். அவரை மெல்ல சமாதானப்படுத்தினேன். இந்தியாவிலும் தான் சாதிக் கொடுமைகள் உள்ளன;  சாதிக்கொடுமைகளை எதிர்க்கும் அதே வேளையில் இன ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நாம் போராடித்தானே ஆகவேண்டும்சாதிக்கொடுமைகள் இருக்கின்றன என்பதற்காக இனவெறியர்களை எதிர்க்காமல் வேடிக்கைப் பார்க்க இயலுமா?’ என்று அவரிடம் கேட்டேன்.உண்மைதான்ஆனால்ஈழத்திலும் சாதிக்கொடுமைகள் இருப்பதை உங்களுக்கு சொல்லவேண்டும் என்றுதான் கூறினேன்’ எனப் பதில் சொன்னார் அந்த தோழர்.

அடுத்த நாள் மீண்டும் பிற்பகலில் தான் மாநாடு கூடியது. முதல் நாள் பரபரப்பு இரண்டாம் நாள் இல்லை. அமைதியாய் நடந்துகொண்டிருந்தது. ஒரு அரங்கில் கருத்தரங்கம்! பெரிய அரங்கில் பொது மாநாடு! பெரிய அரங்கில் கலை நிகழ்ச்சிகளும்,உரையும் மாறி மாறி நடந்துகொண்டிருந்தன. பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிக்குப் பின்னர் திடீரென என்னைப் பேசுமாறு அழைத்தனர். நீங்கள் கடைசியாகத்தான் பேசவேண்டும்’ என்று ஏற்கனவே என்னிடத்தில் கூறியிருந்ததால்,இடையிலே என்னை அழைக்கமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால்இடையிலேயே பேசுவதற்கு எனது பெயரை அறிவிப்புச் செய்தனர். எனக்கு அடுத்து அமர்ந்திருந்த பெருங்கவிக்கோ வாமுசே அவர்கள்நீங்கள் கடைசியாகப் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று என்னிடத்தில் கூறினார். அத்துடன்எழுந்துபோய்திருமாவைக் கடைசியாகப் பேச அழையுங்கள்’ என்றும் கூறிவிட்டு வந்தார். ஆனாலும்அறிவித்தபடி என்னை மீண்டும் அழைத்தனர். அரங்கம் நிறைந்திருக்கும் இந்த வேளையில் நீங்கள் பேசவேண்டும் என்பதற்காகத்தான் இப்போதே அழைத்தேன்’ என்று அறிவிப்பு செய்தவர் என்னிடத்தில் கூறினார். மேடையேறினேன். எனக்குப் பின்னால்,அந்த லைகா நிறுவனத்தின் ஆதரவுடன்’ என்கிற பதாகை’ இருக்கிறதே என்கிற உறுத்தலுடன்தான் பேச்சைத் தொடங்கினேன்.  பேச்சின் தொடக்கத்திலேயே லைகா ஆதரவைப் பற்றிய எனது மாற்றுக்கருத்தை வெளிப்படையாகப் பேசினேன். பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகளே தங்களுக்கிடையில் இனிவரும் காலங்களில் செலவுகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது என்கிற வேண்டுகோளையும் வைத்தேன். அத்துடன்,மேடையில் இந்த நிறுவன விளம்பர பதாகை இருக்கிறது என்பதற்காகமக்களுக்கு நாம் சொல்லவேண்டிய கருத்துக்களைச் சொல்லாமல் வெளியேறி விடமுடியுமாயாரோ எவரோ விமர்சிப்பார்கள் என்பதற்காகதமிழ்ச் சொந்தங்களின் ஒற்றுமையானது ஒரு வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பதை வலியுறுத்தாமல் இருக்க முடியுமா?என்றெல்லாம் எனது உரையில் கேள்விகளை எழுப்பினேன்.

நமக்கிடையில் நாம் யாரும் யாரையும் விமர்சிக்காமல்அவதூறு பரப்பாமல்,ஒற்றுமையைச் சிதைக்காமல் நல்லிணக்கத்தோடு செயல்பட வேண்டுமென்பதை மக்களுக்கு நாம் சொல்ல வேண்டாமாஆகவேசிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் நம்மைப் போன்றவர்கள் எதற்கும் அஞ்சவோ பின்வாங்கவோ கூடாது என்கிற கருத்தையும் பதிவு செய்தேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எனது உரை நீண்டது. மிகுந்த அமைதியும் ஆழ்ந்த கவனமும் நிறைந்ததாய் அரங்கம் இருந்தது. அவ்வப்போது அரங்கமே ஒட்டுமொத்தமாக கைகளைத் தட்டியது எனக்கு ஊக்கத்தை அளித்தது.

என்னைத் தனது வீட்டில் தங்கவைத்திருந்த இரவீந்திரன் அவர்கள்அன்று மாநாடு முடியப் போகும் தறுவாயில் மேடையேறினார். காமாட்சி அம்பாள் ஆலயத்தின் குருக்கள்தான் இரவீந்திரன் அவர்களை வற்புறுத்தி மேடை ஏற்றினார். மேடையேறிய இரவீந்திரன்மிகவும் ஆவேசப்பட்டு உரையாற்றினார். அவருடைய பேச்சு சற்றுக்கு கடுமையாகவே இருந்தது. லைகாவின் உதவியைப் பெற்று இம்மாநட்டை நடத்துவது தனக்கு தெரியாது என்று கூறினார். அவரும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடய பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடய உரை முடிந்ததும் நிகழ்ச்சித் தொகுப்பாளர், ‘அது அவருடைய கருத்து’ என்று ஒரு வரியில் மறுப்பு தெரிவித்து விட்டு அடுத்தவரைப் பேச அழைத்தார். அதன் பின்னர் நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்தேறின. சிறீதரன்மாவை சேனாதிராஜா ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்துபுதுவை சித்தனின் எழுச்சி மிகுந்த பாடல்களுடன் மாநாடு நிறைவுப் பெற்றது.

புலிகளின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் தலைமையில் உலகையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தமிழினம்உலக வல்லரசுகளை நடுங்க வைத்த தமிழினம் இன்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சந்தேகப்படவும் விமர்சிக்கவும் ஒற்றுமையின்றி சிதறவும் கூடிய நிலைமைக்கு உள்ளாகியிருப்பதையெண்ணிவேதனைச் சுமைகளுடன் தமிழகம் திரும்பினேன். எப்படி மீண்டும் ஒருங்கிணைந்து இனப்பகையை வெல்லப்போகிறோம் என்கிற கவலைதான் நெஞ்சை வலுவாக அழுத்துகிறது!

  – தொல்.திருமாவளவன்

 

SHARE