மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றிரவு (12-11-2014) 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான 40 வயதுடைய கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக சென்ற ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நகுலேஸ்வரனின் மனைவி கவிதா அப்பகுதி பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த டெனிஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து நீண்ட இடைவெளியின் பின் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதை வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதாகும். உடனடியாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது. காரணம்; எஞ்சியிருக்கின்ற இராணுவத்திடம் புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.