..
சரத் பொன்சேகாவின் விடுதலையின் பின்னணி என்னவாக இருக்க முடியும்?
முன்னாள் இராணுவத் தளபதியும் பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவருமான சரத் பொன்சேகாவின் விடுதலைதான், இன்றைய சூழலில் இலங்கை அரசியலில் பிரதான பேசுபொருள் ஆகும். அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் அரசியல் கைதி என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவின் விடுதலையை அமெரிக்கா வரவேற்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. பீரிஸ் தலைமையிலான குழு அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் நிலையில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டிருப்பதானது, சமீப காலமாக அமெரிக்காவினால் கொழும்பு மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அழுத்தங்களின் பிரதிபலிப்பு என்பதே பொதுவான பார்வையாக இருக்கிறது.
சரத் பொன்சேகா ஏன் விடுதலை செய்ய்பட்டார் என்பதற்கான காரணத்தை அரசு தெளிவாக தெரிவித்திருக்காத நிலையில், அமெரிக்க அழுத்தங்களுக்குப் பணிந்தே அரசு பொன்சேகாவை விடுதலை செய்துள்ளது என்னும் முடிவுக்கு வருவது இலகுவான ஒன்றாகவும் இருக்கிறது. இது பற்றி செய்தி வெளியிட்டிருக்கும் சீனாவின் சர்வதேச வெளியீடான ’குளோபல் டைம்ஸ்’ மகிந்த அரசு கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்காவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே சரத் பொன்சேகாவை விடுதலை செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பொன்சேகா ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்பதற்கு இரண்டு விதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று சமீப நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த சரத் பொன்சேகா ஒருவேளை சிறையில் இயற்கையாக மரணம் எய்த நேர்ந்தாலும் கூட, அது வெகுசன பார்வையில் இயற்கையான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதன் மூலம் அரசின் நம்பகத் தன்மை சிங்கள மக்கள் மத்தியில் வீழ்சியடையலாம். இதனையும் ஒரு காரணமாகக் கொண்டே மகிந்த அரசு பொன்சேகாவை தற்போது விடுதலை செய்துள்ளது. இத்தகைய பார்வையை முன்வைத்திருப்பவர்கள் வெகு சிலரே.
எனது அவதானத்திற்குட்பட்ட வகையில் குமார் டேவிட் இவ்வாறானதொரு பார்வையை (http://www.southasiaanalysis.org ) பதிவு செய்திருக்கின்றார். ஆயினும் பொன்சேகாவின் விடுதலைக்குப் பொதுவாக சொல்லப்படும் அமெரிக்க அழுத்தம் என்னும் கருத்தையும் அவர் பதிவு செய்யாமலில்லை.
ஆனால் அமெரிக்காவின் அழுத்தங்களை சமாளிப்பதற்கான ஒரு நல்லெண்ண வெளிப்பாடாக அரசு இதனைச் செய்திருக்கலாம் என்பதே பல அரசியல் நோக்கர்களினதும் கணிப்பாக இருக்கின்றது. பீரிஸ் தலைமையிலான அரச குழுவினர், ஹிலாரி கிளின்ரன் உட்பட பல்வேறு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடிவரும் சூழலில், அமெரிக்காவின் நம்பகத்தன்மையை வென்றெடுக்கும் வகையில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் சமர்ப்பித்திருக்கவில்லை என்பதே பொதுவான வாசிப்பாக இருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எதிர்கொண்ட முக்கிய சந்திப்பான, ஹிலாரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கான விசேட பிரதிநிதியும் (Special Assistant to President Obama) ஐ.நாவிற்கான பாதுகாப்பு பேரவையில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப் படுத்துபவருமான பவர் (Senior Director of the US National Security Council handling multilateral affairs and human rights and the head of the Atrocities Prevention Board) ஆகியோருடனான சந்திப்பின்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுல்படுத்தல் நிலைமைகள் கேட்டறியப்பட்டதுடன், வடகிழக்கில் அரசியல் முன்னெடுப்புக்களை சுதந்திரமாக மேற்கொள்ளக்கூடிய வகையில் இராணுவ நீக்கம் (de-militarize the area) அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி சந்திப்பின்போது, LLRC இன் பரிந்துரைகள் அமுல்படுத்தலுக்கான வேலைத்திட்டமொன்றை பீரிஸ் வைத்திருந்த போதும், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதில் பீரிஸ் தோல்வியடைந்துள்ளதாக சண்டே லீடர் (Gov.shows no progress while the US stands firm May24.2012) தெரிவித்துள்ளது. இத்தகையதொரு பின்னணியில்தான் சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான செயலகம் வெளியிடும் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கை இவ்வாரம் வெளிவரவுள்ளது. இந்த நிலையிலேயே அமெரிக்காவால் அரசியல் கைதி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பொன்சேகாவை விடுதலை செய்வதன் மூலம் அமெரிக்க ஆலோசனைகளை செவிமடுப்பதற்கான தயார்நிலையை இலங்கை அரசு காண்பித்திருக்கலாம். இதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பிரதான சக்திகளில் ஒருவரான சரத் பொன்சேகா, 2010 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். தேர்தலில் தோல்வியடைந்து இரு வாரங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் சிறை வைக்கப்பட்டவர். புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்ததும் இராணுவத் தளபதி என்னும் பொறுப்பில் இருந்து Chief of Defense Staff என்னும் பொறுப்பிற்கு மாற்றப்பட்ட பொன்சேகா அமெரிக்காவில் (Oklahoma) இருந்த தனது மகளை பார்க்கும் நோக்கில் சென்றிருந்தபோது, இறுதிப் போர் தொடர்பான விடயங்களை கசிய விட்டார் என்னும் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் மீது சந்தேகங்கள் எழுந்தன.
ஜெனரல் பொன்சேகா பிரிகேடியர் அத்துல சில்வாவுடன் இணைந்து டுபாய் வழியாக வோசிங்டனுக்கு சென்றதாகவே அப்போதைய சில தகவல்கள் தெரிவித்தன. அமெரிக்காவின் பசுபிக் தளபதியாக இருந்த அட்மிரல் திமோதி ஜே.கீட்டிங்கின் (US Pacific Command (PACOM) Commander Admiral Timothy J.Keating) பிரியாவிடை நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கான அழைப்பின் பேரில் சென்றதாகவே முன்னர் சொல்லப்பட்டது, எனினும் பின்னர் அதனை அமெரிக்க அரசு விலக்கிக் கொண்டதாகவும் அப்போது சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதே வேளை, நவம்பர் மாதம் இலங்கைக்கான அமெரிக்க தூதர் பட்ரிக்கா பூட்டின்ஸ் (Patricia Butenis) போர்க் குற்றச்சாட்டுக்களை பொன்சேகா கோத்தா மீது சுமத்த முற்படுகின்றார் (Fonseka tries to shift blame on war crime to Gota) என்னும் தலைப்பில் வோசிங்டனுக்கான தனது இரகசிய ராஜதந்திர கேபிளை அனுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல்கள் பின்னர் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமானது. இந்த பின்னணியிலேயே புலிகளை அழிப்பதில் முன்னின்ற பொன்சேகா மகிந்த அரசின் பிரதான எதிராளியானார்.
புலிகளை அழித்ததால் கிடைத்த வெகுசன கவர்ச்சியை பங்கு போடும் வகையிலேயே மகிந்த – பொன்சேகா தேர்தல் களம் அமைந்திருந்தது. ஆனால் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடொன்றை செய்துள்ளார் என்னும் பிரச்சாரம் பொன்சேகாவை பெரியளவில் பாதித்தது. தற்போது பொது மன்னிப்பின் பேரில் வெளிவந்திருக்கும் பொன்சேகா அரசியல் விடயங்களில் பங்கு கொள்ள முடியாதவாறு தடை உண்டு. ஆனால் அரசியல் செய்ய முடியும். பொன்சேகா 30 மாத சிறை வாசத்திலிருந்து வெளிவந்ததும், இந்து செய்தியாளருக்கு வழங்கிய முதல் நேர்காணலில் தெரிவித்திருக்கும் விடயங்கள், தற்போதைய அரசுக்கு சவாலான ஒருவராக அவர் இருப்பார் என்பதையே குறித்துரைக்கின்றது – அரசியலில் நிறம், பெயர் என்ற அடிப்படையில் வேறுபடாது, ஒரு வலிமையான பொது எதிரணியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் பொன்சேகா, அரசுக்கு எதிரான பொது அணி என்பதே தற்போது முக்கியம், பின்னர் யார் தலைமை ஏற்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் தெரிவித்திருக்கின்றார். பொன்சோகாவின் வருகை அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போது ஊகித்துவிட முடியாது. ஆனால் உடனடி அர்த்தத்தில் பொன்சேகாவின் விடுதலை அரசிற்கு இரு வழிகளில் சாதகமானதாக அமைந்திருக்கிறது. ஒன்று, வெகுசன அபிப்பிராயத்தில் அரசுக்கு எதிராக சதி செய்த ஒருவருக்கும் இந்த அரசு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் ஒரு சாதாரண சிங்கள குடிமகன் அரசு குறித்து உயர்வாக எண்ணக்கூடும். இரண்டு, சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கான ஒரு உடனடி உபாயமாகவும் பொன்சேகாவின் விடுதலை அமைகிறது.
ஆனால் பீரிஸ் எதனைக் கூறினாலும் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு பின்னால்தான் நிற்கும் என்னும் செய்தி, இது போன்ற செயற்பாடுகளால் மட்டுமே அரசு தனது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திவிட முடியாது என்பதையே காட்டுகின்றது. பொன்சேகா வெளியில் வந்ததும் உடனடியாக ‘ஜனநாயக கட்சி’ என்னும் புதியதொரு அரசியல் கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டார். எனவே இனிவரப் போகும் நாட்களில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இத்தகைய புதிய நிலைமைகளை த.தே.கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதே தமிழர் அரசியலுக்கு முக்கியமானது.
யதீந்திரா.