புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி

116
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் – என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் ‘பாலாறு’ திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது.
valliyamai_praba_001
அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர்தானே அந்தக் குழந்தைப் போராளி’ என்று அவர் கேட்க, ‘இல்லை’ என்று நான் மறுக்க வேண்டியிருந்தது. ‘முதல் குழந்தைப் போராளி’ என்று நான் எழுதவில்லை. ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி’ என்று தான் எழுதியிருந்தேன். ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளிகள் இருந்தார்கள்’ என்று இட்டுக்கட்டிச் சொல்வதிலேயே பொழுதைக் கழிப்பவர்களுக்காகத்தான் அப்படி எழுதினேன். நண்பர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் எழுதியதிலிருக்கும் எந்த வார்த்தையையும் விட்டுவிடக்கூடாது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே, குழந்தைப் போராளிகளின் பெயர்கள் பதிவாகியிருக்கின்றன. பின்னோக்கி இன்னும் இரண்டு எட்டு எடுத்துவைத்தால், வள்ளியம்மை என்கிற குழந்தையின் உருவம் கண்ணில் படுகிறது. மகாத்மா காந்திக்கே விடுதலை உணர்வை ஊட்டிய குழந்தைப் போராளியான தில்லையாடி வள்ளியம்மை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது எவரும்! ‘பலன் எதையும் எதிர்பாராமல், தியாகத்துக்குத் தயாராக இருந்த வள்ளியம்மைதான் முதல்முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்….! என் சகோதரர் லட்சுமிதாஸ் காந்தியின் மரணம் கூட இந்த அளவு என்னை பாதிக்கவில்லை… வள்ளியின் மரணம் உண்மையிலேயே எனக்குப் பேரிடி’ என்று வள்ளியம்மை இறந்தபோது நாத்தழுதழுக்கக் குறிப்பிட்டார் காந்திஜி. ”ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் கடமையைச் செய்தவள் வள்ளியம்மை. இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம்” என்று, தனது ‘இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிகையில் உருகி உருகி எழுதினார். காந்திஜியின் வார்த்தைகள் அவரது அடிமனத்திலிருந்து வெளிப்பட்டவை என்பதை, தமிழகத்துக்கு அவர் வந்திருந்தபோது உணரமுடிந்தது. தனது ஆதர்சமான வள்ளியை இதயத்தில் சுமந்தபடி, சாலை வசதிகள் அதிகம் இல்லாத தில்லையாடிக்குச் சென்றார். அந்தக் குழந்தை பிறந்த புனித மண்ணில் கண்ணீர் மல்க நின்றார். தஞ்சாவூர் அருகில் இருக்கிறது தில்லையாடி கிராமம். அந்த ஊரைச் சேர்ந்தவர், வள்ளியம்மையின் தாயார் மங்களம். புதுச்சேரியைச் சேர்ந்த அவரது கணவர் முனுசாமி முதலியார், மனைவியின் ஊரிலேயே தங்கி, நெசவுத் தொழில் செய்தவர். அந்நிய (பிரிட்டிஷ்) துணி மோகத்தால், உள்ளூர் நெசவுத் தொழில் நசுங்கிவிட, கர்ப்பிணி மனைவியுடன் பஞ்சம் பிழைக்க தென் ஆப்பிரிக்கா சென்றுவிட நேர்ந்தது. தென் ஆப்பிரிக்காவில்தான் பிறந்தாள் – வள்ளியம்மை. தனது உறுதியான போர்க்குணத்தால், அங்கேயே இறந்தாள். இறுதிவரை, அவள் தன் தாய்மண்ணைத் தரிசிக்கவேயில்லை. அந்த மண்ணைத் தானாவது தரிசிக்க வேண்டுமென்று நினைத்திருக்க வேண்டும் காந்திஜி. தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களுக்கு, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பெயரே அருவருப்பாக இருந்த ஒரு தருணத்தில், அவரை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தாள் வள்ளி. காந்தி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களை இனவெறி பிடித்த வெள்ளையர்கள் அறவே விரும்பவில்லை. அப்படியொரு போராட்டத்தின் போது, வெள்ளையன் ஒருவன் தனது துப்பாக்கியால் காந்தியைச் சுட முயன்றான். அருகிலிருந்து அதைப்பார்த்த வள்ளி ஓடிவந்து காந்திஜிக்கு முன்னால் நின்றுகொண்டதும், ‘இப்போது சுடு’ என்று அந்தச் சிறுமி சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்டு அந்த வெள்ளையன் திரும்பியதும் அந்தக் குழந்தைப் போராளியின் வீர வரலாறு. தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுக்கு, அந்த நாட்டின் இனவெறி அரசு மனிதத் தன்மை சிறிதுமின்றி தலைவரி விதித்தது. 1913ல், தலைவரியை எதிர்த்து காந்தி நடத்திய அறப்போர்ப் பேரணியில் தாயுடன் கலந்துகொண்டாள் வள்ளியம்மை. ஜோகன்னஸ்பர்க் நகரில் பேரணி தொடங்கியபோது, முதல் வரிசையில் கஸ்தூரிபா காந்திக்கு அருகில் நின்றிருந்தார்கள், வள்ளியம்மையும் தாயும்! நியூகாசில் நகர் வழியாக பேரணி டிரான்ஸ்வால் எல்லைக்குள் நுழைந்தபோது, பேரணியில் வந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். வள்ளியம்மையும் கைதானாள். அப்போது அந்தக் குழந்தைப் போராளிக்கு, 15 வயது. காந்திஜி, வள்ளியம்மை உள்பட கைது செய்யப்பட்ட அனைவருக்கும் 3 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மாரிட்ஸ்பர்க் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அது ஒரு நவீன நரகம். மிகமிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு வந்த சிறை. படுமோசமான சுகாதாரக் கேடு, சிறையைச் சாக்கடை நிலையில் வைத்திருந்தது. அப்படியொரு சிறைச் சூழலில், கைது செய்யப்பட்ட பலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். வள்ளியம்மையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டாள். அவளது உடல்நிலை மோசமடைந்தபடியே இருந்தது. அதைப் பார்த்து அஞ்சிய சிறை அதிகாரி, அவளை விடுவிப்பதாக காந்தியிடம் கூறினான். ‘அபராதம் கட்டிவிட்டு அந்தச் சிறுமி வெளியே போகட்டும்’ என்றான் அவன். அந்த உடல்நிலையிலும் ஓர்மத்துடனிருந்த அந்தக் குழந்தை, அதை ஏற்க மறுத்துவிட்டாள். “அபராதம் கட்டுவது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையில்தான் சாவேன்” என்று, காந்திஜிக்கே சத்தியாகிரகப் போராட்ட நெறிகள் குறித்து போதித்தாள் அந்தக் குழந்தை. அது காந்திஜியின் இதயத்தில் ஆழப்பதிந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் தான் கைது செய்யப்பட்ட போதெல்லாம், காந்திஜி ஓர்மத்துடனும் உறுதியுடனும் இருக்க முடிந்ததென்றால், வள்ளியம்மை தான் அவருக்கு வழிகாட்டி. வரலாற்றின் வழி நாம் இதை அறிய முடிகிறது. அபராதம் கட்டி வெளியே போக மறுத்து சிறையிலேயே இருந்த வள்ளியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. கந்தல் துணி மாதிரி கிடந்த அவளது அருகில் அமர்ந்து, ‘கஷ்டமாக இருக்கிறதா’ என்று கவலையுடன் கேட்டார் காந்தி. அந்த நிலையிலும் உறுதியிழக்காமல் பேசினாள் அந்தக் குழந்தை. “தன் தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க உயிர் நீப்பதை கஷ்டம் என்று நினைத்து விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா” என்று கேட்டாள் அந்தக் குழந்தைப் போராளி. அடுத்த சில தினங்களில் அவள் இறந்தாள். இறந்தபோது, அந்தச் சிறுமிக்கு பதினாறே வயது! காந்திஜியின் அந்தப் போராட்டத்தால்தான் தலைவரி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. உண்மையில் அது காந்திஜியின் போராட்டம் மட்டுமல்ல, வள்ளியம்மையின் போராட்டமும்! வெள்ளை அரசாங்கம், அந்தச் சிறுமியின் ஓர்மம் கண்டு அதிர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. “எவருடைய தியாகத்தால் பலன் கிடைத்தது என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால், வள்ளியின் தியாகம் நிச்சயமாகப் பலனளித்தது” என்று வெளிப்படையாகச் சொன்னார் காந்திஜி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளியம்மை என்கிற சிறுமிக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாமையையும், ஓர்மத்தையும், உறுதியையும் தான், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தங்கள் தாய்மண்ணுக்காகப் போராடிய எங்கள் ஈழத்து இளைஞர்கள் தாங்கி நின்றார்கள். வள்ளியம்மையைப் போற்றுகிற நாம், ஈழத்தின் வேர்களிலிருந்து வெடித்துக் கிளம்பிய அந்தக் குழந்தைகளை எப்படிப் போற்றாமல் இருக்க முடியும்? அதனால்தான், ‘அது சரி – இது தவறு’ என்று கூசாது பேசுபவர்களின் பெட்டைப் புலம்பல்களைக் காது கொடுத்துக் கேட்கக்கூட கூசுகிறது எனக்கு! நேருவின் மகள் இல்லை வள்ளியம்மை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நெசவுத் தொழிலாளியின் மகள். அந்தக் குழந்தை தான், மகாத்மா காந்தியின் போர்க் குணத்தைக் கூர்மைப்படுத்தினாள். பெருமையுடன் இதைப் பறைசாற்றுகிற போது, நேருவின் மகளான இந்திரா பிரியதர்ஷினி என்கிற குழந்தைப் போராளியையும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது நாம். சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில், சிறுமி இந்திரா தலைமையிலான ‘வானர சேனை’ ஈடுபட்ட போது, இந்திராவுக்கு வயது 12 தான்! அந்தச் சிறுமியின் தலைமையில் இயங்கிய வானரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடி ஊர்வலங்கள் என்று கலக்கிக் கொண்டிருந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக தேசத் தலைவர்கள் எழுதி – தடை செய்யப்பட்ட பிரசுரங்களை – மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள் இந்த வானரங்கள்தான்! 12 வயது இந்திராதான் அவர்களுக்குத் தலைவி என்றால், அதிலிருந்த மற்ற வானரங்களுக்கு என்ன வயது இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்! 1917 நவம்பர் 19ல் பிறந்தவர் இந்திரா. 1930ல், நேருவின் வீடு ரகசிய போலீசாரின் கடுமையான கண்காணிப்பில் இருந்தது. வீட்டிலிருந்து எதுவும் வெளியில் போகவும் முடியாது, உள்ளே வரவும் முடியாது. அப்படியொரு கடுமையான கண்காணிப்புக்கிடையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் நேரு எழுதிக் கொடுத்த திட்டம் சிறுமி இந்திரா மூலம் வெளியிலிருந்தவர்களுக்குக் கிடைத்தது. தனது பள்ளிப் புத்தகப் பையில் அதை மறைத்து எடுத்துச் சென்று, சேர வேண்டியவர்களிடம் சேர்ப்பித்தது, அந்தக் குழந்தைப் போராளி தான்! இந்திராவுக்கு முன்பும் ஒரு வரலாறு இருக்கிறது. ஜான்சிக்கு ராணியாவதற்கு முன், சின்னஞ் சிறுவயதிலேயே ஆயுதப் பயிற்சி பெற்றவள், சிறுமி மணிகர்ணிகா. காலாகாலத்துக்கும் தமிழகப் பெண்களின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் வீரமங்கை வேலு நாச்சியார், சின்னஞ்சிறு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறத் தொடங்கியவர். உலக வரலாற்றின் வழிநெடுக குழந்தைப் போராளிகளைப் பார்க்க முடிகிறது. நான் அவர்கள் அத்தனைப் பேரையும் நினைவு கூரவில்லை இங்கே! தம் இனத்தின் அடிமை விலங்கொடிக்க எந்த அர்ப்பணிப்புக்கும் தயார் என்கிற ஓர்மத்தைத் தங்கள் கருவிலேயே ஏந்தியிருந்த குழந்தைகளை – சிறுமிகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். நாயினும் கேடுகெட்ட அடிமைகளாக இருக்க மனமுவந்து முன்வருபவர்களும், தங்களுடைய அடிமைச் சங்கிலியைத் தாங்களே தயாரித்துக் கொள்பவர்களும், இத்தகைய குழந்தைப் போராளிகளைக் கொச்சைப்படுத்துவது மாதிரி பேசுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் விடுதலைக்காக மட்டுமல்ல, இவர்களது விடுதலைக்காகவும்தான் போராடியிருக்கிறார்கள் அந்தக் குழந்தைப் போராளிகள். முள்ளிவாய்க்காலில், இராணுவ மிருகங்களால் அழைத்துச் செல்லப்படும் ஓர் இளம் பெண் போராளி, தனது பெற்றோரையோ உறவினர்களையோ பார்த்துக் கதறுகிற காட்சி கண்முன் விரிகிற போதெல்லாம் உடைந்து போகிறேன் நான். அந்தப் பிள்ளைகள் மற்றவர் மண்ணைப் பறிப்பதற்காகப் போராடியவர்களில்லை. தங்களது சொந்த மண்ணை மீட்கப் போராடியவர்கள். அந்தப் பிள்ளைகளின் அர்ப்பணிப்பை மறந்துவிட்டு, ‘இனப்படுகொலை’ என்கிற உண்மையை உரைக்கக்கூட அஞ்சி நடுங்குகிற ஒரு கோழைச் சமுதாயமாக நாம் மாறிவிட்டோமே என்கிற மனக் கவலையில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் செய்தியோடு தான் வருகிறது – என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், ‘அடிமையாகவே பிறந்தோம், அடிமையாகவே கிடந்தோம், அடிமையாகவே இறப்போம்’ என்கிற மலட்டு மனப்பான்மையிலேயே மூழ்கியிருந்த மூத்தோருக்கு, ‘விடுதலையின் விலை’ என்ன என்பதை தங்கள் அர்ப்பணிப்பால் உணர்த்திய ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் செய்தியோடுதான் வந்திருக்க வேண்டும். அந்தச் செய்தியோடு தான் வென்றிருக்க வேண்டும். ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தையின் கையில் பிஸ்கட் கொடுத்து, ‘பாயின்ட் பிளாங்க் ரேஞ்ச்’-ல் அந்தக் குழந்தையை நிற்கவைத்து, ஒரு பொறுக்கி இராணுவம் சுட்டுக் கொல்லலாம்….. அமெரிக்கா முதல் இந்தியா வரை அந்தப் பொறுக்கிகள் மீது விசாரணை வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளலாம்……. எத்தகைய துரோகம் இது? ‘குழந்தைப் போராளிகள்’ என்று வாய்கிழியப் பேசியவர்கள், அந்தப் பச்சிளங் குழந்தையின் படுகொலைக்கு நீதி கிடைக்க ஒரு துரும்பையாவது தூக்கி வைத்திருக்கிறார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி யார் என்பதைத் தெரிந்துகொள்பவர்கள், விரும்பியேற்ற அந்த ஆபத்தான வாழ்க்கையில் அந்தக் குழந்தைகள் முழுமையாகவும் மனமொன்றியும் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள். “தன் தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க உயிர் நீப்பதை கஷ்டம் என்று நினைத்து விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா” என்று கேட்டாளே வள்ளியம்மை…. அந்தக் குழந்தையின் குரல்தான், ஈழத்தில் போராடிய இளைஞர்களின் குரலாகவும் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, ஏழாம் வகுப்பு படிக்கும்போது (12 வயது?) வெடிகுண்டு தயாரித்தவன்……. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, 16 வயதிலேயே பாதுகாப்புப் படைகளால் தேடப்பட்டதால் தலைமறைவானவன்…… தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, 18 வயதில் ஒரு வியக்கத்தக்க இயக்கத்துக்கு வித்திட்டவன்…… அவன் – வேலுப்பிள்ளை பிரபாகரன்! புகழேந்தி தங்கராஜ்
SHARE