புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை இன அழிப்பிற்கு ஈடாக்க முடியாது:-

309

 

விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொன்றென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமுக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். சட்டத்தரணி மற்றும் விரிவுரையாளரான அவர் அமையத்தின், இணைப பேச்சாளருமாவார். பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டில் யாழ். பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையில் இன்று காலை  இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக உயிரிழந்த அனைவரிற்கும் மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பொது ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டிருந்தது.

நிகழ்வின் உரையாளர்களாக ருக்கி பெர்னான்டோ (மனித உரிமை செயற்பாட்டாளர்), பவானி பொன்சேகா (சட்டத்தரணி;சிரேஸ்ட ஆய்வாளார், மாற்றுக் கொளைக்களுக்கான நிலையம்), எழில் ராஜன் (வருகைதரு விரிவுரையாளார்- அரசியறிவியல் துறை- கிழக்கு பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்) மற்றும் தமிழ் சிவில் சமுக அமையத்தின் இணைபேச்சாளர்  குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

அங்கு உரையாற்றிய ருக்கி பெர்னான்டோ தமது அமைப்பில் இருந்து இறந்து போனவர்களுக்கு நினைவு தினம் அனுஸ்டிக்க ஜே.வி.பி முதல் ஈ.பி.டி.பி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், உள்ளிட்ட சகல கட்சிகளுக்கும் அனுமதி உண்டு. ஏன் படையினருக்கும் உண்டு. ஆனால் புலிகள் அமைப்பில் இருந்து சாவடைந்தவர்களையும், போரில் மரணமடைந்த மக்களையும் நினைவுகூர அனுமதி இல்லை. இதன் மூலம் நினைவு கூரலில் கூட பாகுபாடுகள் காட்டப்படுகின்றதென தெரிவித்தார்.

உலகெங்கும் போர் நினைவு சின்னங்கள் உள்ளபோதும் இங்குள்ளது போன்;று ஒரு இனத்தை, புலிகளை வென்றதற்கான வெற்றி சின்னங்கள் போல இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

முந்நூற்றிற்கும் அதிகமான ஆர்வலர்கள் நிகழ்வினில் பங்கெடுத்திருந்தனர். பங்கெடுக்க வந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் நூலக நுழைவாயிலில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
 

SHARE