பெண்களுக்கு ஏற்படும் “தொடைப்பகுதி” குடலிறக்கம்

68
தொகுப்பு: பைஷல் இஸ்மாயில்
குடலிறக்கம் என்றால்,
வயிற்றுப்பகுதி உறுப்புகள், குறிப்பாக குடல் இருக்குமிடத்தை விட்டு நழுவி, பிறயிடத்திற்கு சென்று புடைத்துக் கொண்டிருப்பதைத்தான் குடலிறக்கம் என்று சொல்கிறோம்.
குடலிறக்கத்தின் வகைகள்
குடலிறக்கத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவை ஏற்படுமிடத்தைப் பொறுத்து இவற்றிற்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
1.தொடைப்பகுதி குடலிறக்கம்.
2.அறைப்பகுதி குடலிறக்கம்.
3.தொப்புள் குழிப்பகுதி குடலிறக்கம்.
4.முதுகுப்பகுதி குடலிறக்கம்.
5.வயிற்றுப்பகுதி குடலிறக்கம் என பல வகைகள் உண்டு.
இதில்,”தொடைப்பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்” பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படக்கூடியதாகும்.
பெரும்பாலான “குடலிறக்கம்” நிற்கும்போது நன்றாகத் தெரியும். படுத்திருக்கின்றபோது சரிவரத் தெரிவதில்லை. இவ்வாறான குடலிறக்கத்தை கையினால் உட்புறமாக தள்ளினாலும் மறைந்து விடும். சிலருக்கு குடலிறக்கம் மறையாமல் அப்படியே இருக்கும்.
சிலருக்கு ‘இறங்கிய குடல்’ பகுதி மீண்டும் பழைய இடத்திற்கு செல்ல முடியாமல் அடைத்துவிடும். இவ்வாறு அடைப்பட்ட குடல்பகுதி மேன்மேலும் அழுத்தப்பட்டால், அந்தக்குடல் பகுதிக்கு ‘இரத்த ஓட்டம்’ செல்லாது. இதனால் அது செயலிழந்து அழுகி, பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
தொடைப்பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்
ஆண்களைப் போலவே பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ஹெர்னியாவின் பெயர் பெமோரல் ஹெர்னியா. இது மேல் தொடைப்பகுதி அல்லது கவட்டை என்று சொல்லப்படும் பகுதியில் ஏற்படுகிறது. வயிற்றில் இருந்து காலுக்கு இரத்தக்குழாய், நரம்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்லும் கால்வாய்ப் பகுதியில் தசைகள் பலவீனமாகும்போது இந்த வகை ஹெர்னியா ஏற்படுகிறது. இது தொடைப் பகுதியின் முன்பகுதியில், மேற்புறத்தில் உட்புறமாக ‘தொடை குழாய்’ போன்ற சவ்வுப்பகுதி இருக்கும். இதன் வழியாகத்தான் ‘குடலிறங்கி’ வரும்.
இது தொடையின் உட்பகுதியில் ஏதோ ஒரு கட்டியைப்போல தென்படும். இந்த வகை குடலிறக்கம் உண்டாகி விட்டால், அதை உள்ளே தள்ளியபோதும் மறைவதில்லை. எனவே, இது அடைபட்டு ஆபத்தை விளைவித்துவிடும்.
இடுப்பு முன்பகுதி எலும்பான ‘பியூபிக்’ எலும்பின் முகடிற்கு கீழாகவும், வெளிப்புறமாகவும் இந்த ‘குடலிறக்கத்தின்’ கழுத்துப்பகுதி அமைந்திருக்கும்.
யாருக்கு ஏற்படும்?
இந்த வகை குடலிறக்கம் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படும். 20 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படும். அதன் பின்னர், வயதாக, வயதாக, தசைகள் தளர்ந்து வர, இந்தக் ‘குடலிறக்கமும் ‘ அதிகமாக ஏற்படும். இது பெரும்பாலும் வலதுபுறத்தில்தான் ஏற்படும். சிலருக்கு இரண்டு புறமும் தோன்றும்.
இதன் அறிகுறிகள்:
அறையில் தோன்றும் குடலிறக்கத்தை விட இது குறைவான பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாமலும் இருக்கும். எனவே, இவ்வகை குடலிறக்கத்தை கண்டு பிடிக்க தாமதமாகும்.
தொடைப்பகுதியில் இவை துருத்திக் கொண்டும் அதிகமாக இருப்பதில்லை. இதைக் கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சிலருக்கு கீழே ஏதோ இழுப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். குடலையும் அதைச் சுற்றி இருக்கும் சவ்வும் ஒட்டிக் கொள்வதால் வலி ஏற்படும்.
இந்த “குடலிறக்கத்தை’ தொடைப் பகுதியில் தோன்றும் பிற வகை வீக்கங்களில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
தொடைப்பகுதி குடலிறக்கத்தை போன்ற பிற வீக்கங்கள்
அறைப்பகுதியில் தோன்றும் குடலிறக்கம், தொடைப்பகுதி சிரை குழாய் வீக்கம், தொடைப்பகுதியில் வீக்கமடைந்த ‘கழலை’ (நிணநீர் திட்டு), கொழுப்புக்கட்டி,
தொடைப்பகுதி இரத்தக் குழாய் வீக்கம், பழுப்பு சீழ் கட்டி போறவை இதில் முக்கியமானவையாகும்.
பரிசோதனைகள்
சத்திர சிகிச்சை நிபுணர் நோயாளியை நன்கு பரிசோதனை செய்து எளிதாக இந்த வகை “குடலிறக்கத்தை” கண்டுபிடித்து விடுவார். எனவே, இதில் சிரமம் இருக்காது. இது குறித்து தேவையற்ற பரிசோதனைகளும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
சிகிச்சைகள்
இந்த குடலிறக்கத்திற்கும் பிற குடலிறக்கத்தைப் போலவே “அறுவை சிகிச்சை’ செய்ய வேண்டும்.
தாமதப்படுத்தினால் குடல் நலிந்து, அழுகி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே, எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்திட வேண்டும்.
இதற்கு மேற்பகுதியில், கீழ்பகுதியில், அறைப்பகுதியில் செய்யும் அறுவை சிகிச்சை என மூன்று வகைகள் இருக்கின்றன.
இந்த “குடலிறக்கத்தை” குறைப்பதற்கும், வராமல் தடுக்கவும் அறையில் ஏற்படும் குடலிறக்கத்தைப்போல தடுப்பு பேல்ட்கள் பயன் அளிப்பதில்லை.
பாதிக்கப்பட்ட பகுதியைத் திறந்து “குடலிறக்கப்பகுதியை” கண்டறிந்து “குடல் மற்றும் பிறபகுதிகளை மீண்டும் பழையபடியே உள்ளே தள்ளிவிடுவார்கள். குடலிறக்கப் பையை சரிசெய்து, அதன் கழுத்துப் பகுதியில் முடிச்சு போடுவார்கள். மீண்டும் குடலிறக்கம் ஏற்படா வண்ணம் தடுக்க, அப்பகுதிகளை முறையாக தைத்து பலப்படுத்துவார்கள். வெளிப்புறமும் தையல் போட்டு மருந்து வைப்பார்கள்.
”காயம்” குணமடையும் வரை தினமும் மருந்து வைப்பதுடன், காயம் ஆறுவதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளையும்
தொடர்ந்து ஊசியாக செலுத்தப்படும்.
பின்னர், தையலை ஒரு வாரத்தில் எடுத்துவிடுவார்கள். அதன் பின்னர், முதல் ஒரு மாதம் அதிக கடினமான வேலைகள் செய்யக்கூடாது, சைக்கிள் மிதிக்கக்கூடாது, கடினமான, பளுவான பொருட்களைத் தூக்கக்கூடாது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இருமல் வந்தால் அதற்குரிய மருந்தை குடிக்க வேண்டும். இதன் மூலமும் குடலிறக்கத்தை வராமல் தடுக்கலாம்.
டாக்டர் முத்துச் செல்லக்குமார்
MD (Gen.Medi.)
SHARE