பேருவளையில் நேற்றிரவு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும், ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பேருவளையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளை அமைப்பாளரின் வீட்டில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அப்பகுதிக்கு வந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் ஐ.தே.க. அமைப்பாளரின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஐ.தே.வின் பேருவளை அமைப்பாளர் காயமடைந்தார். இதையடுத்து இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இந்த மோதலில் சிக்கி மூவர் காயமடைந்தனர் என்பதை உறுதி செய்த பொலிஸ் பேச்சாளர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர விசேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டனர் என்றும் தெரிவித்தார். இன்று காலை அங்கு சென்ற இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.