பொதுபல சேனா ரிஷாத் பதியுதீன் இடையே மோதல் முற்றுகிறதா?

558

untitled

இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல்போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.

அமைச்சரின் அலுவலத்தில் பொதுபல சேனா உறுப்பினர்கள்

 

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அவர்களின் அலுவலகத்துக்குள் புதன்கிழமை காலை பொதுபல சேனா அமைப்பினர் நுழைந்து மாற்றுக் கருத்துடைய ஒரு புத்தபிக்குவை தேடியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இதில் தலையிடும் நிலைமை உருவானது.

பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் புதனன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் அத்துமீறு நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கும் மிரட்டல் என்று குற்றச்சாட்டுகள்

 

தமக்கு எதிராக செயல்படும் அமைப்பான ஜாதிகபல சேனாவைச் சேர்ந்த புத்தபிக்கு வட்டரக்க விஜித தேரர் அந்த அமைச்சக அலுவலகத்தில் ஒளிந்திருப்பதாகக் கூறியபடி பொதுபல சேனா அமைப்பினர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் புகுந்தனர் என்று அமைச்சக அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

வட்டரக்க விஜித தேரர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அமைச்சர் என்கிற முறையில் தன்னை சந்திக்க முடியும், அதை பொதுபல சேனா உட்பட யாரும் தடுக்கவும் முடியாது அதை கேட்பதற்கு உரிமையும் கிடையாது என ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் வேதனப்பட்டதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த பல மாதங்களாகவே இருதரப்புக்கும் இடையே உரசல்கள் இருந்தன.

 

ஆனால் பொதுபல சேனா அமைப்பினரோ ஜாதிகபல சேனாவைச் சேர்ந்த வட்டரக்க விஜித தேரர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜாதிகபல சேனாவின் பிக்கு தமது மதத்துக்கும் தேசத்துக்கும் கேடு விளைவிக்கிறார் என பொதுபல சேனா கூறுகிறது. அவர் அவ்வாறு செய்யக் கூடாது என நேரில் சந்தித்து அறிவுறுத்துவதே தமது நோக்கம் எனவும் பொதுபல சேனாவினர் கூறுகிறார்கள்.

ஜாதிகபல சேனாவுக்கு எதிராக கோஷமிடும் பொதுபல சேனா பிக்குகள்

 

இதனிடையே பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள், ராவண பாலய அமைப்பினர் மற்றும் தேசிய பிக்குமார் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாட்டின் அதிஉயர் பௌத்த பீடாதிபதிகளில் ஒருவரான மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கலத் தேரரை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பௌத்த மதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அது குறித்து அரசு மௌனம் காப்பதாகவும் அவர்கள் மல்வத்த பீடாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்

BBC NEWS

SHARE