போகோஹராம் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனம்: 2 நாட்களில் 200 பேர் பலி

149

 

நைஜீரியாவில் கடந்த இரண்டு நாட்களாக போகோஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் போர்னோ பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்களில் வந்த 50 தீவிரவாதிகள் வீடுகளில் இருந்த நபர்களை எல்லாம் வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர். வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். மேலும் மசூதி ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோரை தங்கள் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டு அவர்கள் மூலமாக இந்தத் தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 15 ஆயிரத் துக்கும் அதிகமானோரை கொன்றிருக்கும் போகோ ஹராம் இயக்கத்தை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி முகமது புஹாரி அந்நாட்டு அதிபராக கடந்த மே மாதம் பதவியேற்றார்.

அவர் பதவியேற்றதற்குப் பிறகு இதுவரை சுமார் 450க்கும் அதிகமானோர் போகோ ஹராம் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்

தங்கள் இயக்கத்தில் சேர விரும்பாத நபர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவங் களை, ‘மனிதத்தன்மையற்றதும், காட்டுமிராண்டித்தனமானதும் ஆகும்’ என்று புஹாரி கூறியுள்ளார்.

 

SHARE