போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடி படையினர் பாதுகாப்பு மண் ஏற்றுபவனுக்கு வெடி-சிவனேசத்துரை சந்திரகாந்தன்

267

இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாவிற்கு போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிரடிப் படையினர், அன்றாடம் மண் ஏற்றுபவனுக்கு வெடி வைப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற வாயிலில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளனர்.

காயன் மடுவில் நேற்று நடந்த சம்பவத்தை பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதினம் பார்த்து வேட்டி அயன் குலையாமல் நிற்பதை தவிர்த்து, வேட்டியை மடித்து கட்டி நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,

பாராளுமன்றத்தில் கதைத்து விசேட அதிரடி படையினர் ஏன் போனார்கள் என்பது தொடர்பாக அந்த மக்களுக்கு நியாயம் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் நவம்பர் மாதம் 06ம் மற்றும் 07ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் நவம்பர் மாதம் 06ம் மற்றும் 07ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு அன்றைய தினம் 1ம், 2ம், 3ம், 4ம், 6ம் சந்தேகநபர்களுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரை கைது செய்யப்படாத 5ம், 7ம் சந்தேகநபர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE