போராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை- அரியநேத்திரன் எம்.பி.

330

 

பலபோராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளான நேற்று  திங்கட்கிழைமை நடைபெற்ற கலை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கடந்த 30 வருடத்திற்கு மேலாக இடம்பெற்ற ஆயுதப் போராட்ட காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன தங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரி வடகிழக்குப் பெண்கள் நீதிகோரி பலபோராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்து மதத்தில் பெண் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் குறிப்பாக கண்ணகி தனது கணவனுக்காக நீதி கோரி போராடி மதுரை நகரை எரித்து நீதி பெற்ற வரலாறு இருக்கிறது.

ஆனால் இந்த நாட்டில் பெண்கள் தங்கள் கணவன்மாரை மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரியும் அதற்கான நீதியினை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் வட கிழக்கில் வாழுகின்ற பெண்கள் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வரலாறு எம்மால் மறக்கமுடியாது

மட்டக்களப்பில் கோணேஸ்வரியும, யாழப்பாணத்தில் கிருசாந்தியும முல்லைத்தீவில் இறுதிப் போரில் இசைப்பிரியாக்களும் என்ற பட்டியல் நீண்டு செல்கிறது.

தற்போது ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு புங்குடுதீவு மாணவி கொடூரமா அதே ஊரைச்சேர்ந்த காமுகர்களால் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

வித்தியாவின் கொலையினைக் கண்டித்து வடகிழக்கு மலையகம் உட்பட பல பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இதற்கு முன்னர் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட முடியாத அளவிற்கு அடாவடித்தனமான ஆட்சி அன்று இருந்தது.

வித்தியாவின் படுகொலையினை படையினர் செய்து இருப்பார்கள். ஆனால் இவ்வாறான போராட்டங்கள் பரவலாக இடம்பெற்று இருக்குமா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கிறது.

பெண்களுக்குத்தான் இன்று சுதந்திரம் இல்லை என்றால் ஆண்களுக்கும் இந்தநாட்டில் சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது கடந்த 26ம் திகதி மட்டக்களப்பு மண்டூரில் அரச உத்தியோகத்தர் மதிதயன் பட்டப்பகலில் ஆயுததாரிகளால் சுடப்பட்டார். இதனைக் கண்டிக்க பொது அமைப்புக்கள் இன்னும் முன்வரத் தயங்குகிறன.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு காலவரையறையைக் கொடுத்து இருக்கின்றோம். அதற்கு பின் மக்களைத் திரட்டி மதிதயனுக்கு நீதிகோரி வீதியில் இறங்கி போராட்டம் நடாத்த இருக்கின்றோம் அதற்காக எமது மக்கள் முன்வரவேண்டும்.

மதிதயனுக்கான விசாரணை துரிதப்படுத்தப்பட்டடு உரிய சூத்திரதாரி கைது செய்யப்படவேண்டு அவ்வாறு இல்லாது இழுத்தடிக்கப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படும் என்றார்.

கண்ணகி வழிபாட்டின் மூலம் எமது கலை கலாசாரம் மரபுகளை பேணப்படுகிறது. இது நிலைத்திருக்க தமிழத் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற தமிழ்மக்கள் முன்னின்று உழைக்க வேண்டும். அப்போதுதான் எமது பலத்தை நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

பாராட்டு நிகழ்வுகளில் அரசடித்தீவு ம.தெ.மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவரும் முன்னால் தலைவருமான பொ.நேசதுரை மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளை செயலாளர் க.தியாகராசா மற்றும் கல்வியில் சாதனை படைத்த தரம் 5 பல்கலைக்கழக் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE