நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சிலர் கூறுவதன் மூலம் சிங்கள இனம் மற்றும் இலங்கையர்கள் வெட்கப்படுகிறார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
இலங்கை அரசாங்கம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே விடுதலைப் புலிகளுடனான போரை முன்னெடுத்தது.
எனினும் செனல்-4 போன்ற தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பிய பொய்யான ஆவணப் படங்களை பார்த்த இலங்கையர்கள் சிலர், இலங்கை படையினர் போர்க்குற்றம் புரிந்தததாக கூறுகின்றனர்.
இது சிங்களவர் என்ற அடிப்படையிலும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் வெட்கப்பட வேண்டிய செயலாகும்.
இலங்கையின் போரின் போது அதற்கு உதவியளித்த நாடுகள் பின்னர் அந்தப்போரை இடையில் நிறுத்த அழுத்தம் கொடுத்தன.
இதன்பின்னர் போர் முடிந்த பின்னர் போர்க்குற்றத்தை ஜெனீவாவில் முன்வைத்துள்ளன.
போரின் போது 6000 படையினர் கொல்லப்பட்டனர். 25ஆயிரம் பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.
இந்தநிலையில் சிலரின் அரசியல் நோக்கங்களுக்காக படையினரின் அர்ப்பணிப்புகளை அடகு வைக்க முடியாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.