போருக்கு பின்னர், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சு சிவில் சுதந்திரத்தை பறித்து இலங்கைக்குள் இராணுவ அரசாங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறது-கரு ஜயசூரிய

386

இலங்கையில் ஜனநாயக நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என ராஜபக்ஷ நிர்வாகம் நாட்டு மக்கள் மற்றும் வெளியுலகத்திடம் கூறி வருகின்ற போதும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு இணையான அடாவடி நிர்வாகம் ஒன்றை நாட்டில் செயற்படுத்தி வருவதை தெளிவாக காண முடிவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு தொடர்பாக அந்த கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

2014 ஜூலை 1 ஆம் திகதி அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அமைவாக இலங்கையின் சிவில் சமூகம் மீது மேற்கொண்ட கொலை தாக்குதல்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை உட்பட அடிப்படை உரிமைகளுக்கு இந்த உத்தரவின் மூலம் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது நிலைப்பாடுகளை மக்களுக்கு முன்வைக்கும் உரிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான செயலகம் குறித்த சுற்றறிக்கையை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

கொடூரமான போர் முடிந்து 5 வருடங்கள் கழிந்துள்ள சந்தர்ப்பத்தில் அரசசார்பற்ற அமைப்புகள் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கையை வெளியிடக் கூடாது, கருத்தரங்குகளை நடத்தக் கூடாது என இந்த சுற்றறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அதிசயமான சட்டம். பாதுகாப்பு அமைச்சின் இந்த சுற்றறிக்கையானது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது.

போருக்கு பின்னர், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சு சிவில் சுதந்திரத்தை பறித்து இலங்கைக்குள் இராணுவ அரசாங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

சர்வாதிகார நாடுகளிலேயே அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஸ்தாபனங்கள் இப்படியான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

நாட்டின் அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியின்றி நுழைந்து, அவற்றை இராணுவமயப்படுத்தியுள்ளது எனவும் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE