போரைச் சாட்டாக வைத்து வடகிழக்கை பலவிதத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது –

566

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
தேவிபுரம் ‘அ’ பகுதியில்
09.08.2014 அன்று காலை 10 மணிக்கு
பிரதம விருந்தினர் உரை
குருர் ப்ரம்மா ………………….
தலைவரவர்களே, கௌரவ அமைச்சர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே,
இன்று திறக்கப்பட்ட இந்த முதியோர் இல்லம் ப்ரான்சில் உள்ள கொடையாளர் ஒருவரின் தாராள சிந்தையின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அவர் தமது தாயார் ஏழாலை ப+பதி டீச்சர் ஞாபகமாகக் கட்டிக் கொடுத்துள்ளார் என்று அறிகின்றேன். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியறிதல்களும் உரித்தாகட்டும்!
முதியோர் பராமரிப்பு என்பது மூத்த பிரஜைகளின் தனித்துவ தேவைகளைத் தேர்ந்தறிந்து அவற்றைப் ப+ர்த்தி செய்வதாகும். அதில் ஒரு முக்கிய பங்கை வகிப்பது யாதெனில் அம் முதியோரின் மனோநிலையாகும். மதிப்புடன் முதுமை அடைவதையே யாவரும் விரும்புகின்றனர். அவர்களை ஏனோ தானோ என்று நடத்தினால் அவர்கள் மனங்கள் புண்படும். ஒவ்வொருவரையும் மாண்புடன் மதிப்புடன் நடத்துவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கலாம் – ஆனால் அவ்வாறு அவர்களை  நடத்தும் போது தான் மூத்த பிரஜைகளின் மனங்கள் குளிர்கின்றன.
இந்த இல்லம் முதியோரின் பராமரிப்பு இல்லம் அன்று. அவர்களை வைத்து நடாத்தும் ஒரு காப்பகம் அன்று. ஆனால் அவர்கள் கூடுவதற்கும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக இந்த இல்லம் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 140 பேர்களைக் கொண்ட தேவிபுரம் மூத்த பிரஜைகள் சங்கம் தனது உறுப்பினர்கள் ஒருங்குகூடி, உளமாற உறவாடி, ஒருவர்க்கொருவர் ஒத்தாசையாய் நடந்து கொள்ள இடமளிப்பதாய் இந்த இல்லம் செயற்படப் போகின்றது.
இன்று உலகத்தின் முதியோர் தொகை அதிகரித்து வருகின்றது. காரணம் எமது வைத்திய சேவைகள் பலவிதத்திலும் எம்மைக் காப்பாற்றி நீண்ட ஆயுளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு நவீன மாற்றுவழி இணைப்புச் சத்திர சிகிச்சையானது (டீலியளள ளுரசபநசல) அவ்வாறான அறுவை மருத்துவத்தின் பின்னர் ஒரு மனிதனை பல வருடங்கள் இளைமை எய்தியவராக இருந்து வாழ வழி வகுக்கின்றது. மேலைநாடுகளில் மேற்படி சத்திரசிகிச்சைகள் பலதின் பின்னர் மலை ஏறுவோரும் உளர்.
அடுத்து மலேரியா போன்ற நோய்கள் என் இளைமைப் பருவத்தில் பலரின் உயிர்களைப் பலியெடுத்தது. இன்று மலேரியா சில காலம் மறைந்திருந்த பின்னர் மீண்டும் தலையெடுக்க எத்தனித்தாலும் மரணங்கள் அதன் பொருட்டு ஏற்படுவது மிகக் குறைவே. இன்று நன்றியுரை கூறப் போகும் சகோதரர் மலேரியா தடுப்புத் திணைக்களத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதைக் காண்கின்றேன். ஆகவே முதியோர்கள் தொகை கூடக் கூட அவர்களைப் பற்றிய சமூக சிந்தனைகளும் கடப்பாடுகளும் கூடிக் கொண்டு செல்கின்றன.
முதுமை என்பது எங்கள் எல்லோரையுந் தீண்டப்போகும் ஒரு நிச்சயமான சம்பவம். என்னைப் போன்றோரை அது ஏற்கனவே தீண்டிவிட்டது! எனினும் அதிலிருந்து யாருந் தப்ப முடியாது என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதேநேரம் முதுமை அடைவோரை பாதுகாக்கலாம், பராமரிக்கலாம், மதிப்போடு வாழச் செய்யலாம். சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எமது குடும்ப வயோதிபர்களை கட்டாயமாக நாங்களே பராமரித்து வந்தோம். ஏதாவது ஒரு இல்லத்தில் அவர்களை இட்டு வைப்பது என்றால் இழிவான ஒரு செயல் என்று நாங்கள் கூறி வந்தோம். இன்றும் பெரும்பாலும் அந்த மனோநிலையில்த்தான் உள்ளோம்.
என்றாலும் இன்று காலம் மாறிவிட்டது. கொழும்பு போன்ற நகரங்களில் பிள்ளைகள் யாவரும் வேலைக்குப் போகின்றார்கள். குழந்தைகள் பாடசாலை செல்கின்றார்கள். முதியோரைப் பராமரிப்பது முடியாத காரியமாகச் சிலருக்குப் படுகின்றது. எனவே முதியோர் இல்லங்களில் தமது தாய்தந்தையரை அவர்கள் சேர்த்து விடுகின்றார்கள்.
வடமாகாணத்தில் அதுதான் காரணம் என்று கூற முடியாது. ஆனால் பலர் தமது உற்றார் உறவினர்களை போரின் தாக்கத்தால் இழந்த நிலையில் உள்ளார்கள். இருக்க இடம் இருந்தும் இயல்பாகப் பேசிப் பழக இல்லத்தார் எவரும் இன்றித் தவிக்கின்றார்கள். சிலருக்கு இல்லத்தில் உற்றார் உறவினர் இருந்தும் அதே கதிதான். இன்முகத்துடன் சிரித்துப் பேச முடியாத நிலை.
இவற்றை எல்லாம் மனதில் எடுத்துத்தான் பராமரிப்பு இல்லத்தை உருவாக்காமல் பகிர்ந்து கொள்ளும் ஒரு இல்லமாக ஆக்கியுள்ளார் இதனைத் தாபித்த அன்பர் என்று நம்புகின்றேன். அதாவது தமது ஏக்கங்களைத், தாக்கங்களை, எதிர்பார்ப்புக்களை, அனுபவங்களை எல்லாம் தமது வயதொற்றிய மற்றையோருடன் கூடியிருந்து குசலம் விசாரித்துக் கூறிக்கொள்வதற்கு ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார் அவர்.
எமது தமிழ்ப் பேசுஞ் சமுதாயமானது பாரிய சமூக மாற்றத்தினுள் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. என்னைப் போன்ற முதுமை அடைந்தவர்களுக்கு அது தெற்றெனத் தெளிவாக விளங்குகின்றது. எமது இளைமை நாட்களில் நாம் இலங்கை எங்கும் சென்று வந்தோம். உதாரணத்திற்கு திஸ்ஸமகாராம என்ற தென்பகுதிக் கிராமத்தில் இருந்த வயல் நிலங்களில் பெரும்பான்மையானவை தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தன. அங்கு வசிக்கையில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள் அவர்கள். ஆனால் போதிய வருமானம் பெற்றார்கள். சிங்கள மக்களுடன் மிகவும் சுமுகமான உறவினை வைத்திருந்தார்கள. சரளாமாகச் சிங்களம் பேசினார்கள். சிங்கள மக்கள் பலருக்குப் பலவிதமான உதவிகள் செய்தார்கள். 1958ம் ஆண்டு நடந்த கலவரத்தின் பின்னர் அவர்கள் யாவரும் வடகிழக்கை நோக்கிப் பயணிக்க நேர்ந்தது. பலரின் காணிகள் இன்னும் அவர்களின் பெயர்களில் இன்றும் உள்ளன. ஆனால் வேற்றார் ஆக்கிரமித்து விட்டார்கள். படிப்படியாக நாடெங்கும் பரந்து வாழ்ந்த தமிழ்ப் பேசுஞ் சமூகம், முள்ளிவாய்க்காலுக்கு மக்கள் போரின் கடைசிக் கட்டத்தில் தள்ளப்பட்டது போன்று வடக்கு கிழக்கிற்குத் தள்ளப்பட்டார்கள். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் இருக்கின்றோம். போரைச் சாட்டாக வைத்து வடகிழக்கை பலவிதத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. பயத்தின் காரணத்தால் மக்கள் ஆயுதம் ஏந்தியவரை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். ஜனநாயகம் துளிர் பெற்றிருந்த இந்த நாட்டில் ஆயுத கலாச்சாரம் படம் எடுத்து ஆடத் தொடங்கி இன்று விசித்திரமான விதங்களில் விதை போட்டுப் பயிராகிக் கொண்டிருக்கின்றது.
இக்காலகட்டத்தின் போது முதியோர்களின் அனுபவங்கள் ஆழ்ந்தமைந்தவையாக உள்ளன. அவற்றை மற்றையோருடன் கலந்து பேசிக் கொள்ள இடமளித்துள்ளார் இந்த இல்லத்தை ஏற்படுத்தித் தந்த கொடையாளர். அதற்கு மேலும் எமது நன்றி.
அதே நேரம் இந்த முதியோர்களின் சுகம், சுகாதாரம் பற்றிக் கவனம் செலுத்துதல் மிக்க அவசியம் என்பதைக் கூறி வைக்கின்றேன். வீட்டில் இரந்து வந்து அளவளாவிவிட்டுத் திரும்பவுந் தத்தமது வீடுகளுக்கே செல்லவிருந்தாலுங் கூட அவர்கள் இங்கிருக்கும் போது ஏதேனும் சுகக் குறைவு ஏற்பட்டால் உடனே அவர்களைப் பார்த்துப் பராமரிக்கக் கூடிய வைத்திய சேவை, தாமதம் இன்றிக் கிடைக்க வழி வகுக்கப்பட வேண்டும்.
மேலும் முதியோர் கூட தமது வாழ்க்கை முடியுந் தறுவாயில் இருக்கின்றது என்ற எண்ணத்தில் எல்லாவற்றையுங்; கைவிட்ட ஒரு மனோ நிலைக்குச் செல்லாது “எம்மால் இந்த ஊருக்கு எதனைச் செய்து கொடுக்கலாம்?” என்ற கேள்விக்குப் பதில் காண முனைய வேண்டும். உதாரணத்திற்கு அழிந்து போய்க் கொண்டிருக்கும் எமது பாரம்பரிய விவசாய, மீன்பிடி, மற்றைய தொழில்கள் சார்ந்த அறிவினை எமது பின்வருவோருக்கு அறிவுறுத்தும் வகையில் சிறு சிறு கைநூல்களாக நீங்கள் வெளிக் கொண்டுவரலாம். இறுவெட்டுக்களில் வடித்து வைக்கலாம். சிறு சிறு கைத்தொழில்களில் சேர்ந்து ஈடுபடலாம்.
முக்கியமாக ஒரு கேள்வியை எங்களிடமே நாங்கள் கேட்க வேண்டும். ஒரு பரோபகாரி எமக்கு இந்த இல்லத்தைத் தந்துள்ளார். அது அவரின் பெருந்தன்மை. அதைப் பெற்றுக் கொண்டுள்ள நாங்கள் கைமாறாக எதனை அவருக்குச் செய்யப் போகின்றோம் என்று சிந்திக்க வேண்டும். அந்தப் பரோபகாரிக்கு உங்களிடம் இருந்து உங்கள் சந்தோசத்தை விட எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது. ஆனால் உங்களைப் பொறுத்த வரையில் கடப்பாடொன்று மேலோங்கி நிற்கின்றது. உங்களுக்கு சமூகம் தந்ததை அந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடே அது.
ஆகவே முதியோர் இல்லம் திறக்கப்பட்ட அதே வேளையில் இங்கு கூடியிருந்து மகிழ்வைக் காணப் போகும் எம் சகோதர உறவுகளுக்கு ஒரு சமூகக் கடப்பாடு ஒன்று உண்டு என்று அவர்களுக்கு வலியுறுத்தி என்னை இந்த நிகழ்வில் பங்குபற்ற அழைத்த தம்பி சிவசக்தி ஆனந்தனுக்கு நன்றி கூறி அமர்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

SHARE