பௌத்த பிக்குகளை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கும் செயற் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

405

பௌத்த பிக்குகளை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கும் செயற் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆயிரம் பிக்குமார் கொழும்புக்கு வரவழைத்து இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.

அரசியல் மற்றும் சமூக ரீதியாக பிரபலமான சில பிக்குகளுக்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பெருந் தொகை பணத்தை இலஞ்சமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

அரசாங்கத்துடன் நெருக்கமான செல்வந்தர்கள் சிலர் இந்த பணத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் அவர்களே இந்த திட்டத்தின் சூத்திரதாரிகளாக இருந்து செயற்பட்டு வருகின்றனர்.

பிரதமர் பதவியை எதிர்ப்பார்த்திருக்கும் பசில் ராஜபக்ஷ, ஊழல் பேர்வழி, பௌத்தர்களின் ஆதரவு அவருக்கு இல்லை என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ள இவர்கள், பிரதமர் பதவியை ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியில் உள்ள ஒருவருக்கு வழங்குவதும் ஆபத்தானது என்பதால், அந்த பதவிக்கு கோத்தபாய ராஜபக்ஷவே தகுதியானவர் எனவும் கூறியுள்ளனர்.

news_10-07-2014_47gota6

இதனடிப்படையில் பிரதமராகும் முனைப்பில் இருந்து வரும் கோத்தபாய ராஜபக்ஷ தனது உட்குழுக் கூட்டத்தை அண்மையில் வர்த்தகர் ஒருவர் வீட்டில் நடத்தியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, குழப்பமடைந்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு தகுதியற்றவர் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்கள் நிலைப்பாடு ஒன்றை உருவாக்குமாறு தனது குழுவினருக்கு பணித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.

கோத்தாபாயவின் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்கள் அரசியல் சட்டத்தை கிழித்தெறிய முயற்சித்து வருகின்றன – ரணில் குற்றச்சாட்டு

கோத்தபாய ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை கிழித்தெறிய ஏன் முயற்சித்து வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட சட்டவிரோத உத்தரவு சம்பந்தமாக நிலையியல் கட்டளையின் 23 – 2 கீழ் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அராஜக சட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் மற்றும் பதிவாளர் கடந்த முதலாம் திகதி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அனுப்பி சுற்றறிக்கைக்கு அமைய அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவது, கருத்தரங்குகளை நடத்துவது, செய்தியாளர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் ஊடக அறிக்கைகளை வெளியிடுவது தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த அமைச்சுக்கும் அதன் கீழ் இயங்கும் நிறுவனத்திற்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அப்படியான உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரமோ, அனுமதியோ இல்லை என்பதை முதலில் வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் என பொதுவாக அழைக்கப்படும் நிறுவனங்களை வரையறுக்கவும் கண்காணிக்கவுமே 1980 ஆம் ஆண்டு அரசாங்கம் தொண்டர் சமூக சேவை அமைப்புகள் சட்டமூலத்தை கொண்டு வந்தது.

அந்த சட்டமூலத்தின் 15வது ஷரத்திற்கு அமைய விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்பதால், 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.

ஊழல் மற்றும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரிக்க விசாரணை குழுவை அமைப்பதற்கே இந்த விதிமுறைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இதனால், அரசசார்பற்ற அமைப்புகள் தொடர்பான விதிமுறைகளை தொண்டர் சமூக சேவை அமைப்புகள் சட்டமூலத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின் அடிப்படையிலேயே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

இதனை தவிர்த்து எந்த நிறுவனத்திற்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக உத்தரவுகளையே விதிமுறைகளையே விதிக்க அனுமதியோ அதிகாரங்களோ இல்லை.

அதேபோல் அரசசார்பற்ற நிறுவங்கள் தொடர்பாக தேசிய செயலகம், அரசியல் அமைப்பின் 14வது ஷரத்தில் கூறப்பட்டுள்ள சகல பிரஜைகளுக்குமான பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், அமைதியான கூடுதல் உள்ளிட்ட உரிமை மீறியுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

 

SHARE