அதிலும் குறிப்பாக வடமாகாண தமிழ் மக்கள் போர் நிறைவடைந்த பின்னரும் சொந்த நிலங்களக்கு திரும்ப முடியாமலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் விடுதலை செய்யப்படாமலும் உள்ள நிலையில் இத்தகைய சர்வாதிகார, இராணுவ ஆட்சி தேவையா? என்பதை தீர்மானிக்கவேண்டும்.
மேற்கண்டவாறு ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) கட்சியின் பிரசாரச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படிப் பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறமையினை ஒழிக்கவேண்டும். என நாங்கள் சந்திரிக்கா காலத்திலும் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த காலத்திலும் கேட்டிருக்கின்றோம். இவர்கள் அவ் வப்போது வாக்குறுதிகளை வழங்கி பின்னர் மறந்துபோனார்கள்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த எமக்கு வழங்கிய வாக்குதியையும் மறந்து 18ம் திருத்தச்சட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக தன்னிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டதுடன், நாட்டை மிகமோசமான பாதைக்கும் கொண்டு சென்றிருக்கின்றார்;. இவருடைய ஆட்சியின் நாடாளுமன்றம், நீதிமன்றம்,
சட்டம் ஒழுங்கு மற்றும் அரசதுறைகள் முழுமையாக சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. இதனைவிட வடமாகாணத்தை பொறுத்தவரையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இவ்வாறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக தமிழ் மக்கள் இன்னமும் பல சிக்கல்கள் அல்லது அசௌகரியங்கள் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் உண்மையில் 2010ம் ஆண்டு இந்த நிலைமையினை மாற்றியமைக்க கூடிய சந்தர்ப்பம் அரசாங்கத்திற்கு கிடைத்தது.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களை மேலும் துண்டாடி இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளை இந்த அரசாங்கம் வளர்த்து விட் டிருக்கின்றது. மேலும் அண்மையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் வந்தார்கள்.
அவர்களை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கும் இந்த ஜனாதிபதி சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதற்காக விடுவிக்கவில்லை? இதனை விட மோசமான விடயம் இலங்கையில் 40 வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260 ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50 வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260 ரூபா செலவிட முடியாமலும்,
இருக்கும் நிலையில் ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2 கோடியே 65லட்சம் ரூபா, ஒரு மாதச் செலவீனம் 936 கோடி ரூபா. இது ஒரு நியாயமான அரசாங்கம் செய்யும் செயலாகுமா?
எனவே நாம் வெளிப்படையாக கூறுகின்றோம். பொது வேட்பாளர் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தமிழ் மக்களிடம் பல குறைகள் உள்ளன. ஆனால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது.
ஆனால் மோசடி மிக்க ஊழல் பேர்வழிகளாக இருக்கும் இந்த மஹிந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதனை தமிழ் மக்கள் உங்களுடைய தலைமைகள் என்ன தீர்மானத்தை எடுத்தாலும் அதனை தாண்டியும். நீங்கள் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.