மகிந்த என்றால் சத்தம்..! மைத்திரி என்றால் அமைதி..! ரணில் என்றால் தந்திரம்…! – எஸ்.பி. தாஸ்

506

 

மகிந்த என்றால் சத்தம்..! மைத்திரி என்றால் அமைதி..! ரணில் என்றால் தந்திரம்...! - எஸ்.பி. தாஸ் 100

அரசியலில் சத்தமும், யுத்தமும், அமைதியும், தந்திரமும் இருக்க வேண்டும். இல்லையாயின் அரசியல் நடத்தமுடியாது. இது இலங்கை அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கின்றது. அது ஜனாதிபதிகளாக இருந்தவர்களாகட்டும், பிரதமர்களாக இருந்தவர்கள் ஆகட்டும். யாராயினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தில் வித்தியாசமான அரசியல் தன்மைகளைக் கொண்டிருப்பார்கள்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இரு தடவைகள் ஆட்சி செலுத்தி உலகின் முதல் பெண் ஜனாதிபதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க.

இவர் தன்னை அரசியலுக்குள் நுழைத்துக்கொண்டு தான் ஒரு விதவை என்பதை காட்டியும், பெண் என்ற அனுதாபத்தையும் கொண்டு தன்னை அரசியலில் அதுவும் இலங்கையின் முதல் பெண்மணியாக தேர்வு செய்துகொண்டார்.

இவரின் ஆட்சியில் அதுவும் ஒரு பெண்ணாக இருப்பவர். கணவரை இழந்தவர். ஆகையால் மக்களின் குறைகள், கஷ்டங்கள் தெரியும் என நினைத்தனர் மக்கள். ஆனால் அம்மையாரின் வருகையோ சமாதானத்திற்கான யுத்தம் என்ற மகுட வாக்கியமே முன்னிலை வகித்தது.

அது அவரின் குற்றமுமில்லை என்று சொன்னாலும் மிகப்பொருந்தும். ஏனெனில் இலங்கை அரசியலில் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமாயின் புலியழிப்பை செய்கின்றோம் என்று தமிழர்களை கொன்றாக வேண்டும். அவ்வாறு கொன்றாலேயே அடுத்த அரசியலில் வாக்கு வங்கிகள் நிரம்பும் என்பது இலங்கையின் பெரும்பான்மை இனத்தின் மனநிலை. அதற்கு ஏற்றால் போலவே ஒவ்வொரு அரசாங்க தலைவர்களும் இன்று வரை செயற்படுகின்றார்கள் என்பது உண்மை.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு ஈடு இணையாக சந்திரிக்காவின் ஆட்சியிலும் இனவழிப்பு நடந்தது என்பதை யாரும் மறந்து விடமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலேயே நாட்டை விட்டு வெளியோறியோர் அதிகம் எனலாம்.

ஆனால் சந்திரிக்காவின் சமாதானத்திற்கான யுத்தத்தில் வெற்றி பெறமுடியவில்லை. மாறாக இந்தியாவிடமும் இஸ்ரேலிடமும் ஓடி ஓடி புலியை அழிக்க ஆயுதங்கள் கொள்வனவு செய்து தோல்வியிலேயே முடிந்து போனது அவரின் கொள்கை.

இருந்தாலும், பிரதமராக ரணில் சந்திரிக்காவின் ஆட்சியில் அதிகாரத்தினை பெற்ற போது தான், சமாதானத்திற்கான யுத்தம் போய் உண்மையான யுத்தத்திற்கான சமாதானம் கொண்டு வரப்பட்டது. அதாவது புலிகளை நலினப்படுத்தி அழித்தொழிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. சுருங்க கூறின் 2009ம் ஆண்டிற்கான இனவழிப்பு போரின் பிள்ளையார் சுழியை 2002 இல் ரணிலைக்கொண்டு போட்டது இந்தியா.

ரணிலின் தந்திரங்கள் எல்லாம் சமாதானத்திற்கானதன்று. மாறாக அது புலிகளை நலினப்படுத்துவதும், உடைப்பதும் என்கின்ற குறியும், பலவீனப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தினரின் வலுவை மீளக்கட்டுமானம் செய்வதுமே அன்றைய நோக்கம்.

2001ம் ஆண்டே புலிகளின் வளர்ச்சி அதிகம் என்பதை இந்தியா கணித்துவிட்டது. ரணிலும் புரிந்து கொண்டார். சமாதான ஒப்பந்தம் புலிகளுக்கு அன்றே ஒரு எச்சரிக்கை தான். இது புலிகளின் தலைமைக்கு தெரியாமல் இல்லை. இருந்தும் சர்வதேசத்தோடு சில விட்டுக்கொடுப்போடு செல்ல வேண்டும் என்பதை புலிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

இதை சரியாக பயன்படுத்தி ஒப்பந்தமும், அதன் பின்னர் நடந்த ஆட்சி மாற்றமும் சாதகமாகவே இலங்கை அரசாங்க தரப்பிற்கு ஏற்பட்டது. குறிப்பாக சந்திரிக்காவின் ஆட்சி மாறி மகிந்தரின் ஆட்சிக் காலம் மலர்ந்தபோது சில காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. அது பற்றி விவாதிப்பதல்ல நோக்கம்.

அன்று சந்திரிக்காவின் ஆட்சியில் இருந்த ரணிலும், இந்தியாவும், அமெரிக்கா, நோர்வேயும் இணைந்து போட்ட முடிச்சை சீராகவும் சரியாகவும் பயன்படுத்த தொடங்கிய ராஜபக்சாக்கள், அமெரிக்காவின் பயங்கரவாத்திற்கான போரை தமக்கு சாதமாக்கி புலிகளை அழிக்க திட்டம் வகுத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள்.

அதாவது மகிந்த ராஜபக்ச அன்ட் கம்பனியினர். இவர்கள் இதில் நூற்றுக்கு 25 வீதமே யுத்ததில் வெற்றியீட்டினார்கள். மீதி வெற்றி மேற்சொன்ன ரணில், இந்தியா, அமெரிக்கா, நோர்வே போன்றவர்களின் ஜந்திர, தந்திர, ராஜாங்க விளையாட்டுக்கள். இவற்றில் பல சுவாரசியமான சம்பவங்கள் யாவும் மறைக்கப்பட்டு அல்லது இருட்டடிப்புச் செய்யப்பட்டு தான் இருக்கின்றன.

யுத்தத்தில் வெற்றி பெற்றவன், புலிகளை அழித்த ஒரே தலைவன் நான் தான் என்று மகிந்த ராஜபக்ச சத்தம் போடுவதெல்லாம் வெளியில் மிரம்பிப்பாக இருக்கலாம். உண்மையான, களயுத்தம் நடந்ததே 2002 தான்.

இதுவே யதார்த்தம். சந்திரிக்காவின் சமாதானத்திற்கான யுத்தம் தோல்வியில் முடிந்ததாயினும், ரணிலின் யுத்தத்திற்கான சமாதானம் உண்மையில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. மகிந்த மிகப்பெரிய சத்தம் போடும் அரசியல்வாதி. ரணில் அமைதியாக இருந்து சத்தத்தை வரவைக்கும் மகா ராஜதந்திரி.

இவையெல்லாம் நடந்து முடிந்த அரசியல் தான் என்று ஒதுக்கிவிட முடியாது. மீண்டுமொரு அமைதியான சமாதானமான யுத்தம் ஒன்று தமிழர் தரப்பினர் மீது விடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தாக வேண்டிய சூழலில் தமிழர் தரப்பு இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றது.

கடந்த தை மாதம் 8ம் திகதி நடந்த ஆட்சி மாற்றத்தின் போது எல்லா வெளிகளும் உடைக்கப்பட்டு உலகிற்கும் தமிழர்களுக்கும் இனி இங்கு பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை என்று காட்டப்படுகின்றது. அதாவது இங்கே அரசியல் பிரச்சினைகள் இல்லை என்று காட்டப்படும் சூழ்நிலையை மெல்ல மெல்ல உருவாக்க தொடங்கிவிட்டார்கள்.

ரணிலின் தந்திர யுத்திகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்தே இந்திய மற்றும் இலங்கை தமிழர்களின் வாயை அடைக்கும் சூழ்ச்சியொன்று புதிதாக வகுக்கப்படுகின்றது.

அதில் ஒன்று இந்திய மீனவர்களை விடுவிக்கும் காட்சியும், பிடிக்கப்பட்ட படகுகளை மீள ஒப்படைக்கும் நிகழ்வுகளும், மீனவர் சந்திப்புக்களில் இவர்களின் விளையாட்டுக்களும். இதன் மூலம் இலங்கை ஜனாதிபதி விட்டுக்கொடுப்போடு இருக்கின்றார். அவர் நல்லவர் என்றொரு விம்பமும்.

இந்திய மீனவர்களின் விடுவிப்பால் தமிழ் நாட்டில் மகிந்த தான் மோசம். மகிந்த அரசாங்கம் கொடுங்கோள் அரசாங்கம். ஆனால் இப்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நல்ல அரசாங்கம் என்பதை காட்டும் ஒரு நாடகமும்.

வடக்கில் மைத்திரியின் காணி வழங்கும் நிகழ்வுகளும், அண்மையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்ல வந்த ஜனாதிபதியின் செயற்பாடும் உண்மையில் வரவேற்கத்தக்கது தான். ஆனால் இதை இன்னொரு அரசியலாக மாற்றும் திட்டத்தை ரணில் தரப்பு வைத்திருக்கின்றது. அதாவது மைத்திரி நல்லவர். அவர் தலமையிலான ஆட்சி இயந்திரம் திறமையானது என்பதாகும்.

இது வரவிருக்கும் பொதுத்தேர்தலில் மகிந்தவுக்கும் அவரின் சகாக்ககளுக்கும் விழுந்த அடிமட்டுமல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு விழுந்த அடி தான். இப்பொழுது எல்லாம் வடக்கில் இருக்கும் பெரும்பாலான புதிய வாக்காளர்களாக இருக்கும் இளைஞர், யுவதிகளின் பேச்சில் மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நல்ல அரசாங்கம் என்றொரு பேச்சை கேட்க முடிகின்றது.

இது இலங்கைத் தமிழர்களுக்கு இன்னொரு ஆப்பு தான்.

இதுவொரு புறமிருக்க, உலகத் தமிழர்களையும் புதிய நல்லாட்சி என்று சொல்லுகின்ற அரசாங்கம் தனது வலைக்குள் இழுத்து வர பெரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது.

ஆட்சியை அமைத்தவுடன் வெளியுறவுத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவை நியமித்தமையானது ரணிலின் சரியான கணிப்பு என்றே சொல்ல வேண்டும். மங்கள சமரவீரவின் ஒவ்வொரு அசைவும் சரியானதாகவே இருக்கின்றது. அமைச்சுப் பொறுப்பேற்று 5மாதங்களில் உலகத் தமிழர்களிடம் அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் அவர் மூன்று முறை இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

அதாவது புதிய அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களோடு சேர்ந்து செயற்படவிரும்புகின்றது. அதாவது நாங்கள் சேர்ந்து செயற்படலாம் என்பதே அதன் கருத்து. இதற்கு ஒரு பகுதி புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். இன்னொரு பகுதியினர் தயார் நிலையில் இல்லை.
இதில் ஏதாவது ஒரு தரப்பு இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்தாலே போதும். மிகுதியை ரணில் பார்த்துக்கொள்வார்.

ஆக இப்பொழுது தமிழகத்தின் பேச்சை ஓரளவுக்கு குறைத்தாயிற்று. வடக்கிலும் இலங்கையிலும், அமைதி சுதந்திரம் என்றொரு பெயர் கொண்டு அடுத்த தலைமுறையினரை குறி வைத்தாயிற்று. புலத்திலும் ராஜதந்திரக்கதவுகள் திறந்து விடப்பட்டாயிற்று.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி என்றால் அங்கே சத்தம், சல்லடை வீரமான பேச்சு, அடிதடியான நடவடிக்கைகளாக இருக்கும். ஆனால் இப்பொழுது மைத்திரி, ரணில் ஆட்சி இங்கே வீரப்பேச்சுக்கு இடமில்லை. விவேகத்திற்கே முன்னுரிமை. அமைதியும், சாந்தமும் இவ்வாட்சியில் இருக்கும். அதிகம் சத்தம் வெளியில் வராது, ஆனால் உள்வேலைகள் எல்லாம் சரியாக நடக்கும்.

அதாவது 2002ல் புலிகளை அழிக்க வகுத்ததைப்போல. இன்னும் இன்னும் நிறைய எதிரிபார்க்கலாம். இதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்ல வைத்து புரிய வைப்பது என்றால் ரொம்பவே கஷ்டம். ஏனெனில் இஷ்டப்பட்ட வாழ்க்கை இருப்பதாக காட்டுவது தான் ரணிலின் கைவந்த கலை.

புலிகளையே அழிக்க திட்டம் தீட்டிய ரணிலுக்கு, புலிகள் இல்லாத போது தமிழர் அரசியலை சின்னாபின்னமாக்க எவ்வளவு நேரம் வேண்டும். தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலமிது. இன்றைய தலைமுறையினர் சொல்வதைப்போல மைத்திரி நல்லவர் தான். அவர் வகிக்கும் பதவியும், அவர் கூடவே இருக்கும் மந்திரிகளும் எப்படிப்பட்டவர்கள் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

காலத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். இன்னும் சிறிது காலத்திற்கு பின்னர் போர்க்குற்ற விசாரணைகள், சர்வதேச நீதிமன்றங்கள் எல்லாம் மறைந்து மறந்து போய்விடும்.

சர்வதேசத்திற்கு தமிழர்கள் தேவையில்லை தமிழர்கள் பிரச்சினையே தேவையாக இருந்தது மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை. இப்பொழுது அவர்களுக்கு மகிந்தவும் தேவையில்லை, தமிழர்களின் பிரச்சினையும் தேவையில்லை. அவர்கள் விரும்பிய ஆட்சியே போதும்.

அவர்கள் கேட்பதை இவர்கள் செய்தால். இவர்கள் கேட்பதை அவர்கள் செயவார்கள்.

 

– எஸ்.பி. தாஸ் –

SHARE