சீனாவின் நீர்மூழ்கி கொழும்பிற்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தமை இந்தியாவின் இறையாண்மையை பாதித்ததே அதற்கான காரணம் என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய அரசு சீனாவின் இலங்கையில் முன்னெடுக்கப்படும் எந்தத் திட்டத்தையும் நிறுத்தாது. அவை தொடரும். ஆனால் இராணுவ நோக்கங்களிற்கு இந்தியாவைச் சார்ந்து இலங்கை செயற்படும்.
அமெரிக்கா தேர்தல் தினத்தன்று காலை இராஜங்கச் செயலர் மூலம் நேர்மையான முறையிலான தேர்தலிற்கு வேண்டுகோள் கொடுத்து மென்மையான அழுத்தத்தைக் கொடுப்பதற்கும் நீர்மூழ்கி விவகாரமே காரணம். இலங்கையில் இருந்து சிலநூறு கடல்மைல்களில் அமெரிக்காவின் பெரிய தளமிருக்கிறது.
மகிந்த தேர்தலிற்கு அடுத்தநாள் அதிகாலை அலரி மாளிகைக்கு சட்டமா அதிபர், இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோரை அழைத்து சதியொன்றில் ஈடுபட முனைந்தார் என்று தற்போதைய அரசால் உத்தியோகபூர்வ விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது.
இது தேர்தலிற்கு அடுத்த நாள் வரையிலும் அலரி மாளிகையில் ராஜபக்ச சுதந்திரமாக இயங்கினார் என்பதையும், எந்தவொரு நாடும் அலரி மாளிகையோ, மகிந்தாவையோ கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என பல தகவல்களைப் பகிர்ந்தார்.
“இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு” என்று இந்தியாவில் இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேரா முழங்கினாலும் கொழும்புக்கு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை வரவழைத்தது என்பது இந்தியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணி என்று ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறுகிறார் ஒன் இந்தியாவின் கன்சல்டிங் எடிட்டர் எம். அனந்தகிருஷ்ணன். இது தொடர்பாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை: இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவுக்கு டெல்லியில் நேற்று விருது அளிக்கப்பட்டது. அப்போது அவர் இலங்கையில், சீனா ராணுவத்தின் நடமாட்டம் இல்லை என்றும் இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார்.
மேலும் சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவு என்பது இயற்கையான ஒன்றுதான் என்பதை இந்தியா நம்பியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைத் தீவில் சீனா ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்று இந்திய பாதுகாப்புத் துறையின் பல்வேறு மட்டங்களில் கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கருத்தை ஜெயந்த பெரேரா தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் சீனா கடற்படைக்கு சொந்தமான 039 சொங் ரக நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புக்கு சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டம் தொடங்கிவிட்டது என்பதற்கான சமிக்ஞையாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் அணு ஆயுதங்களைக் கொண்டது அல்ல என்கிறார் இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேரா. ஆனால் இந்திய கடற்படை வல்லுநர்களோ, சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலின் நடமாட்டம் என்பதே இப்பிராந்தியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இது குறித்து கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளத்தின் செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற கேடர் ராய் பிரான்சிஸ் கூறுகையில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இந்திய பிராந்தியத்தை எட்டிப் பார்க்கிறது என்ற செய்தி வெளியான போது அது பாதுகாப்புத் துறையினருக்கு ஆச்சரியமளிக்கவில்லை.
அதே நேரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கான அறிவிப்பாகவும் அது இருந்தது. அமைதி காலங்களில் ஒரு நாட்டின் போர்க்கப்பல் மற்றொரு நாட்டின் துறைமுகங்களுக்கு தூதர்களாக செல்வது வழக்கம். இந்த அடிப்படையில் சீனா போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் இந்திய போர்க்கப்பல்களும் அங்கே சென்றுள்ளன. ஆனால் நீர்மூழ்கிக் கப்பல்களை அப்படிப் பார்க்க முடியாது. அமைதி மற்றும் போர்க்காலங்களில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவைதான் நீர்மூழ்கிக் கப்பல்கள் என்கிறார். மேலும், சீனாவின் நீண்டகால வியூகமான “முத்துமாலை” திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தைப் பார்க்க முடியும். அதாவது இந்தியாவை சுற்றிய துறைமுகங்களில் தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வது என்பதுதான் சீனாவின் முத்துமாலைத் திட்டம்.
இதனடிப்படையில் பாகிஸ்தானின் கவ்தார், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் துறைமுகங்களை நிர்மாணித்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளது. மிகச் சிறிய நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின்னரே சீனா அதிபர் ஜியாங்பின் இந்தியாவுக்கே பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது என்றும் ராய் சுட்டிக்காட்டுகிறார். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை அனுமதித்ததன் விளைவுகளை இலங்கை உணர்ந்துள்ளதா என்பது தெரியவில்லை. சீனாவை முன்வைத்து அண்டை நாடுகள் அச்சுறுத்துவதை நிறுத்துங்கள் என்று இந்தியா சொல்வதற்கான நேரம் இதுவல்லவா? என்றும் ராய் கேள்வி எழுப்புகிறார். அத்துடன், சீனா 50க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துள்ளது. இதில் ஒன்று விமானந்தாங்கி நீர்மூழ்கிக் கப்பல். தற்போது இந்திய பெருங்கடல் பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவின் தமது நீர்மூழ்கிக் கப்பல்களை பலப்படுத்த வேண்டிய தருணம் என்கிறார் அவர். இந்தியா கண்காணிப்பது அவசியம் மேலும் பாதுகாப்புத் துறை வல்லுநரான டெல்லியைச் சேர்ந்த அவினாஸ் கோட்போலே, இலங்கையை சீனா தமது பாதுகாப்பு யுக்திக்கான முதன்மையான நாடு என பல காரணங்களின் அடிப்படையில் கருதுகிறது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பட்டுப் பாதை திட்டம், இந்த பிராந்தியத்தில் சீனாவின் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புக் கூடிய மையம் போன்றவை முதன்மைக் காரணங்கள். அத்துடன் இந்தியப் பெருங்கடற் பரப்பில் கடற்கொள்ளைகளை தடுப்பதில் எதிர்காலத்தில் சீனா முதன்மை பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கிறது. சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வருகையை இந்தியா தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கிறார்.
மலாக்கா நீரிணைப்பில் அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்பாக சீனாவுக்கு இன்னும் ஊசலாட்டமான நிலை இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை மற்றும் மாலத்தீவுகளை தமது நாட்டின் நலன்களுக்காக மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அளவில் கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். மேலும் இந்தியா- சீனா இடையேயான கடற்சார் ஒத்துழைப்பு குறித்தும் இனி எதிர்காலத்தில் இருநாடுகளும் பேச வேண்டும் என்கிறார். செயின்ட் டேனிஸ் துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் இப்படியான ஒரு அசாதாரண சூழலில், இந்தியாவின் ஐ.என்.எஸ். மும்பை, ஐ.என்.எஸ். தல்வார், ஐ.என்.எஸ். தீபக் ஆகிய கடற்படை கப்பல்கள் பிரான்ஸின் ரீயூனியன் தீவுகளின் செயின்ட் டேனிஸ் துறைமுகத்தை நேற்று சென்றடைந்துள்ளன. இருதரப்பு உறவுகளுக்காகவும் இந்தியா – பிரான்ஸ் இடையேயான கடற்படை பாதுகாப்புக்கான ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகவும் இக்கப்பல்கள் சென்றுள்ளன என்கிறார் கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா.