மகிந்த – மைத்திரி சந்திப்பு

288
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.

கிருஷ்ண பரமாத்மா உறங்குகின்ற வேளையில் சென்ற துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான். துரியோதனனுக்குப் பின்னதாகச் சென்ற அருச்சுனன் கிருஷ்ணனின் கால்மாட்டில் உட்கார்ந்தான்.

இப்போது கண்ணன் துயில் கலைகிறான். கால்மாட்டில் இருக்கும் அருச்சுனனைக் கண்டமட்டில் அருச்சுனா! என்று ஆரத்தழுவ, தலைமாட்டில் இருந்த துரியோதனனை கிருஷ்ணனுக்குக் சுட்டிக்காட்டுகிறான் அருச்சுனன்.

இருவரிலும் முதலில் வந்தது துரியோதனனாயினும் முதலில் கண்டது அருச்சுனனே என்பதால், தனது ஆயுதங்கள் துரியோதனனுக்கும் தான் அருச்சுனனுக்குமானது என்று தீர்மானிக்கப்படுகிறது. எல்லாம் கிருஷ்ணனின் இராஜதந்திரம்.

பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக முதலில் வந்தவர் என்பதை விட, முதலில் கண்டவருக்கே நான் உரியவன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விடுகிறது.

பாரதப் போரில் நடந்த சூழ்ச்சிகள் இந்த உலகின் பல இடங்களில் நடந்துள்ளது, நடந்து வருகிறது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

இந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலின் போது மிகப்பெரும் எதிரிகளாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரைவில் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்கின்ற வேளையில், மகிந்தவும் மைத்திரியும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற சூழமைவு ஏற்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச­  மைத்திரிக்குக் கைகொடுக்க முனைந்த போது கை கொடுக்க மறுத்த மைத்திரி சம்பிரதாயத்துக்கு ஒரு கும்பிடு போட்டார்.

மகிந்தவின் கைகள் கறை பிடித்தவை. எனவே அந்தக் கைகளை எனது கைகளால் தொடவிரும்பவில்லை என்பது கைகொடுக்க மறுத்தமைக்கான காரணமாக மைத்திரியால் கூறப்பட்டது.

நல்லது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வோடு ஒன்றாக இருந்த போதிலும் அவரின் ஆட்சி முறைமையால் வெறுப்படைந்து அவரை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரி, தேர்தலில் தான் வெல்வேனா இல்லையா என்பதன் முடிவு தெரியாமலே மகிந்தவுக்கு கைகொடுக்க மறுத்தமை ஒரு துணிச்சலான, நேர்மையான செயல் என்றே சொல்ல வேண்டும்.

நிலைமை இப்படியாக இருக்கையில் இப்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவை சந்திப்பதற்கு மைத்திரி சம்மதம் தெரிவித்துள்ளமை பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

அதாவது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்­சவை போட்டியிடாமல் தடுப்பதற்காக இச் சந்திப்பு நடக்கிறதா? இப்போது நாங்கள் ஒரே இனம் என்ற அடிப்படையில் சர்வதேச விசாரணையை தடுத்தாக வேண்டும் என்ற கொள்கைப்படி சந்திப்பு நடக்கிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

எதுவாயினும் மகிந்தவை எதிர்த்து மைத்திரிக்கு வாக்களித்து மைத்திரியை ஜனாதிபதியாக்கிய தமிழ் மக்களுக்கு பாதகம் செய்யும் வகையில் மைத்திரி – மகிந்த சந்திப்பு அமையாது என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் விட்டால், ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மகிந்த குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற செய்தி சொல்லப்படுமா? அல்லது என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என்று மைத்திரியிடம் மகிந்த கேட்பாரா? என்பதும் சந்திப்புக்குப் பின்னரே தெரிய வரக்கூடிய சங்கதிகளாகும்.

SHARE