நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கள சமரவீரவிடம் 100 கோடி நஷ்டஈடு கோரும் மஹிந்த

299
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வா ஊடாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் 7ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இந்த நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை குவித்துள்ளதாகவும் இலங்கையின் முதலாவது ரில்லியன்பதி மகிந்த ராஜபக்ச எனவும் மங்கள சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக 100 கோடி ரூபா நஷ்டஈட்டை 21 நாட்களுக்குள் வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு வழங்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 2000 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு தொடுக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.

SHARE