இலங்கை அதிபர் தேர்தலில் ஜோதிடத்தையும், தனது குடும்ப ஆட்சி சாதனைகளையும் நம்பி களம் இறங்கிய ராஜபக்ச, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிடம் படுதோல்வி அடைந்தார்.
தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக செயல்பட்டு வந்த ராஜபக்சவின் தோல்வி தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜபக்சவின் தோல்வியை தமிழ்நாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இலங்கை கடற்படையினரால் நாள்தோறும் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவிப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
அப்படி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு தங்கள் பிடியிலேயே வைத்துள்ளது.
ராஜபக்சவின் இந்த செயலை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் பல கோடி மதிப்புள்ள படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
அப்படிப்பட்ட ராஜபக்ச இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் எண்ணமாக இருந்தது.
தற்போது, தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்ததன் மூலம் தமிழக மீனவர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், பாம்பன் ஊராட்சிமன்ற தலைவரும், ம.தி.மு.க ஒன்றிய செயலாளருமான பட்ரிக் தலைமையில் மீனவர்களும், ம.தி.மு.க.வினரும் பட்டாசுகளை வெடிக்க வைத்து கொண்டாடினர்.