மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்முன்னாள் LTTE யின் சிறப்பு தளபதி – கருணாஅம்மான்

569

கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

Karuna All Party3

ஏனெனில், தனது சொந்த ஒரேயொரு அண்ணனை யுத்தக் களத்தில் இழந்ததாகவும் அவர் கூறினார். மேலும், தனது இணைப்புச் செயலாளரராகவுள்ள பொன். ரவீந்திரனும் அவரது ஒரேயொரு அண்ணனை இழந்துள்ளார். அவ்வாறே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம் எனக் கூறினார்.

உதயம் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த கலாசார பாரம்பரிய விளையாட்டு விழா தேற்றாத்தீவிலுள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘தற்போது எமது மண்ணில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இவ்வாறான விளையாட்டு உட்பட ஏனைய இதர செயற்பாடுகளை செய்ய முடிகின்றது.

பிறந்திருக்கின்ற புதிய ஜய வருடத்தை இவ்வருடம் முழுவதும் அனுபவிக்கும் ஆண்டாக வேண்டும். வருடப் பிறப்பை வரவேற்பதற்காக வேண்டி வருடம் தோறும் கிராமங்களில் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அதுபோல விளையாட்டுக்களும் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டம் இச்சித்திரை வருடத்தை மிகச் சிறப்பாக கொண்டாடியிருக்கின்றது. இதைப் பார்த்து நான் பெருமையடைகிறேன்.

ஏனெனில், கடந்த 30 வருடங்களாக யுத்த மேகம் சூழ்ந்திருந்தது எமது மக்கள் அனைவருக்கும் தெரியும். அக்கொடிய யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு யுத்தத்தின் வெற்றியின் பின்பு எவ்வளவு வேதனையான விடயங்கள் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வான வேடிக்கைகளை நிகழ்த்தி மகிழ்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அத்தோடு, பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடைபெறும். ஆனால், அந்த வெற்றியின் பின்னாலுள்ள துன்ப துயரங்களையோ, சோகங்களையோ, இழப்புக்களையோ பற்றிச் சிந்திப்பதில்லை.

ஒரு யுத்த களத்தை எடுத்துக்கொண்டால், அங்கு ஆயிரம் சடலங்கள் கிடக்கும். இரண்டாயிரம் போராளிகள் காயப்பட்டிருப்பார்கள். பலர் அங்கவீனமாக்கப்பட்டிருப்பார்கள். இரத்த ஆறு ஓடும். இது போன்ற நிலைமைதான் அங்கு இடம்பெற்றன.

இவ்வாறு 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தையும் இழப்புக்களையும் நிறுத்தி, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இன்று ஒரு அபிவிருத்திப் பாதையில் எமது மாவட்டத்தை வழிநடத்தி சிறந்த அமைதியான காலத்திலேயே நாங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால், கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக் கூடியவை அல்ல என்பதுடன், அதை எங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாது. ஏனெனில், எனது சொந்த ஒரேயொரு அண்ணனை யுத்த களத்தில் இழந்துள்ளேன். எனது இணைப்புச் செயலாளரராக இருக்கின்ற பொன். ரவீந்திரனும்; அவரது ஒரேயொரு அண்ணனை இழந்துள்ளார். அவ்வாறே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்துள்ளார்கள். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை நாங்கள் இழந்திருக்கிறோம்.

ஆகவே, இந்த இழப்புக்கள் தொடரக்கூடாது. இந்தப் பாதையிலிருந்து நிலைமையை மாற்றி எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்று, கௌரவமிக்க மக்களாக படித்த கல்விச் சமூகமாக, முறையான அபிவிருத்தியுடைய மக்களாக எமது மக்களை வாழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது உங்கள் மத்தியில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை எமது அன்பிற்குரிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான மாற்றத்தை நீங்கள் தற்போது காண்கின்றீர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் தற்போது பாரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற 3 தேர்தல் தொகுதிகளில் 2 தொகுதிகளில் தற்போது பரிபூரணமாக குடிநீர் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

அம்பாறையிலிருக்கின்ற கொண்டைவட்டுவான் என்கின்ற குளத்திலிருந்து குடிநீரைக் கொணர்ந்து படுவான்கரையின் பெரும்பகுதிக்கு நீர் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்தியிருகின்றோம். வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு தொகுதி அனைத்திற்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்குடா தொகுதிக்காக கித்தூள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைத்து குடிநீர் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தவிருக்கின்றோம்.

இதுபோன்று நீண்டகாலத் திட்டமிடலை திட்டமிட்டு செயற்படுத்துகின்ற காரணத்தினால்தான், எங்களுடைய மாவட்டம் தற்போது சிறந்து விளங்குகின்றது.

இன்று கல்வியில் நாங்கள் உயர்ந்திருந்தாலும் பல மைல் கற்களை எட்ட வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கின்றது. பல தடைகளைத் தாண்ட வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கின்றது என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த கால 30 வருடகால யுத்த இடைவெளி இன்று தமிழ் மக்கள் மத்தியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. எமது சமூகம் ஒரு அறிவுடைய சமூகம். முயற்சியுடைய சமூகம். ஆனால் அந்த முயற்சிகள், அறிவுகள் இருந்தலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழல்கள் காரணமாக வாய்ப்புக்கள் பல தடுக்கப்பட்டன. இன்று நாங்கள் கல்வியில் பின்தங்கியிருக்கின்றோம். ஆகவே, நாங்கள் முன்னேற வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கின்றது.

தற்போது தேற்றாத்தீவு கிராமத்தில் பட்டதாரி ஒன்றிய மாணவர்கள் மாலை நேர வகுப்புக்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்குகின்றார்கள். விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த இடத்தை வகிக்கின்றார்கள். எனவே, அவர்களது முயற்சிகளுக்கு நான் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களின் இந்த செயற்பாடுகளுக்காக வேண்டி நான் இரண்டு இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளேன். இந்த தேற்றாத்தீவுக் கிராமத்தில் எடுக்கப்படுகின்ற முயற்சிகள்போல் ஏனைய அயல் கிராமங்களிலும் எடுப்பார்களேயானால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் கல்வி விருத்தியினை அதிகரிக்கலாம் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தக் கிராமத்தில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் போன்றோர் இருக்கின்றார்கள்;, அதேபோல் பல அதிபர்கள், பல பட்டதாரிகள் இருக்கின்றார்கள். இதுபோல் இன்னும் பல பொது நிர்வாக அதிகாரிகளையும் இந்தக் கிராமத்தில் உருவாக்க வேண்டும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு முயற்சியுடன் செயற்பட்டால் மாத்திரம்தான் நாம் முன்னேற்றம் அடையலாம்.

எனவே இந்தக் கிராமத்தில் இருக்கின்ற விளையாட்டு இமானத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள காலத்தில் ஆற்று நீர் இக்கிராமத்தில் வராமலிருக்க அணைக்கட்டுகளைக் கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எனவே எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் எந்த அரசு வருகின்றதோ, அந்த அரசாங்கத்தின் பக்கமிருந்து வளங்களைக் கொண்டு வருகின்ற சமூகமாக நாங்கள் அனைவரும் மாறவேண்டும். தொடர்ந்து நாங்கள் எதிர்ப்பு அரசியலில் இருந்து கொண்டு மிகவும் தேய்ந்து போகின்ற சமூகமாக மாற்றமடைந்திருக்கின்றோம். அதிலிருந்து எமது மக்கள் விழிப்படைய வேண்டும்.

ஏனெனில், பத்திரிகைளில அறிக்கை விடுவதும் அல்லது வேடிக்கையான விடயங்களை பத்திரிகைகளில் கூறி தமிழ் மக்களை உசுப்பேத்துவதிலும் எந்தவிதமான சாதனைகளையும் நாங்கள் ஏற்படுத்த முடியாது. மாறாக புத்திசாதுரியமாகச் செயற்பட்டு அனைத்து வளங்களையும் கொண்டு வருவதற்குரிய வாய்ப்புக்களை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசாங்கத்தினைப் பயன்படுத்த வேண்டும். அபிவிருத்திகளை மேலதிகமாகக் கொண்டு வரவேண்டும்.

இன்று நீங்கள் புதிய கல்லடிப் பாலத்தினைப் பார்க்கின்றீர்கள். புதிய மண்முனைத்துறைப் பாலத்தினைப் பார்க்கின்றீர்கள். எதிர்காலத்தில் ஒரு மண்டூர் பாலத்தினை நீங்கள் பார்ப்பீர்கள் என்பதனை நான் இவ்விடத்திலே கூறிக்கொள்கின்றேன்’ என்றார்.

 

SHARE