மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 225 கிராம சேவையாளர் பிரிவுகளில், 88 ஆயிரத்து 925 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மேலும் குறித்த மாவட்டத்தில் 7 ஆயிரத்து 794 குடும்பங்களைச் சேர்ந்த 27ஆயிரத்து 608 பேர் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் அந்த நிலையம் தெரிவித்தள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 78 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 31ஆயிரத்து 431 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 776 பேர் இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உரிய பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள அனர்த்தம் காரணமாக, இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 32,299 குடும்பங்களைச் சேர்ந்த 63,978 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 7,377ஆக அதிகரித்துள்ளன. குறிப்பாக மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து இதுவரையில் 1,877 வீடுகள் முழுமையாகவும் 5,500 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. நேற்றுத் திங்கட்கிழமை எடுக்கப்பட்ட தரவுகளின்படி, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 548 வீடுகள் முழுமையாகவும் 1,333 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 412 வீடுகள் முழுமையாகவும் 1,122 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 346 வீடுகள் முழுமையாகவும் 402 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.- என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.