மட்டு.வேட்பாளர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

210
மட்டக்களப்பு வேட்பாளர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிப்பு நடைபெறுவதாக மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

இம்மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் 16 வது பாராளுமன்றத் தேர்தலில் வழக்கம் போலவே பெண் வேட்பாளர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது.

 

அரசியற் கட்சிகள் கணிசமானளவு பெண்கள் வேட்பாளர்களை நியமிக்க வேண்டுமென பல இலங்கைப் பெண்கள் அமைப்புக்கள் தொடர் கோரிக்கை விடுத்த காலகட்டத்தில் இக் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திம் வகையில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இம்முறை பெண்கள் மாத்திரமே ஒரு அரசியற் கட்சியின் வேட்பாளர்களாக ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் சாதகத்தன்மையையும் நாம் அங்கீகரிக்கின்றோம்.

ஆயினும் பெண்களின் அரசியற் பங்கேற்பு அதிகரிப்பதற்கு இது மாத்திரம் போதுமானதல்ல. அடைய வேண்டிய இலக்கிற்கு நீண்ட தூரம் உள்ளது.

அரசியற் கட்சிகளிடம் பெண்கள் வேட்பாளர்களை ஏன் நியமிக்கவில்லை என்று கேட்டால்; பெண்கள் மீதே குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் முன்வருகின்றார்களில்லை எனக் கூறுகின்றனர்.

ஆனால் பெண்கள் முன்வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் சமத்துவத்திலும் சமூக நீதியிலும் நம்பிக்கையுள்ள அரசியற் கட்சிகளின் தார்மீகக் கடமையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாகப் போட்டியிடும் 368 வேட்பாளர்கள் மத்தியில் 19 பேரே பெண்களாவர். அதிலும் அரசியற் கட்சிகளின் வேட்பாளர்களாக 5 பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தில் இலங்கை தமிழர் மகா சபையில் 1 பெண்ணும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் 1 பெண்ணும், ஜனசெத பெரமுனவில் 2 பெண்களும், நவ சிஹல உறுமயவில் 1 பெண்ணும் போட்டியிடுகின்றனர். ஏனைய 14 பெண்களும் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிடுகின்றனர்.

பெண் வேட்பாளர்களை நியமிப்பதில் பிரதான அரசியற் கட்சிகள் உதாசீனம் காட்டிய போதிலும் அவற்றை மீறிப் போட்டியிட முன் வந்தமைக்காக இப் பெண்களை நாம் வரவேற்றுப் பாராட்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE