மதுரை அருகே வேன் மோதி பலியான கோவில் காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை

160

மதுரை அருகே உள்ள கொடிக்குளம் பாரத் நகரில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக காளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையை தெய்வமாக பகுதி மக்கள் கருதி வந்தனர்.

மேலும் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் இந்த காளை அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். அங்கு தங்கம் உள்ளிட்ட பல பரிசுகளை காளை வென்றுள்ளது.

இதனால் கொடிக்குளம் மக்கள் தங்கள் கோவில் காளையை ஒரு கதாநாயகனாகவும், ஜல்லிக்கட்டு வீரனாகவும் பாவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த காளை சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியே சென்ற வேன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவில் காளை பரிதாபமாக இறந்தது.

இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். காளைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மலர் மாலைகள் வைக்கப்பட்டன. மேலும் காளையின் அருகே போட்டிகளில் வென்ற பதக்கங்களும் வைக்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து தாரை தப்பட்டை அடித்து காளையை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதன்பின்னர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி காளையை அடக்கம் செய்தனர்.

– See more at: http://www.manithan.com/news/20150612115496#sthash.W5jbVlNI.dpuf

SHARE