மத்திய ஆப்பிரிக்க குடியரசு நெருக்கடி: புதிய முஸ்லிம் பிரதமரை நிராகரிக்கும் போராளிகள்

418
முஸ்லிம்களும், பெரும்பான்மை கிறிஸ்துவர்களும் நிறைந்து வாழும் நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ளூர் செலேகா போராளிக் குழுக்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் அப்போதைய பொஸைஸ் அரசுடன் அதிகாரங்களை பங்கு போட முனைந்தனர். ஆனால் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததோடு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இவர்கள் தலைநகரை முற்றுகையிட இவர்களின் தலைவர் மைக்கேல் ஜோடோடிடா அதிபராகப் பதவி ஏற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவ பலேகா எதிர்ப்பு இயக்கத்தினர் வன்முறைக் கலவரங்களில் இறங்க இது பெரிய இன மத வன்முறைக் கலவரமாக மாறியது. இதனால் 20 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது. இந்தக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக ஜோடோடிடா தனது பதவியை விட்டு விலகினார்.

இடைக்கால அதிபராக இருக்கும் சம்பா பன்சாவைத் தொடர்ந்து அங்கு அமைதியை நிலைநாட்டும்விதமாக அவருக்கு சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த மஹமட் கமௌன் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபரின் ஆணை மூலமாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வானொலியில் அதிபரின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.

இதன்மூலம் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட ஒரு ஆபத்தான யுத்த நிறுத்தத்தை செயல்படுத்த இந்த இடைக்கால அரசாங்கம் முயற்சிக்கும் என்று கருதப்படுகின்றது. மேலும்,கடந்த 1960ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து சுதந்திரம் பெற்றபின்னர் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் முஸ்லிம் பிரதமர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.

ஆனால் இவரது தேர்வை பிரதானமான முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவான செலேகா நிராகரித்துள்ளது நெருக்கடியை மேலும் நீட்டிப்பதாகவே அமைந்துள்ளது. வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களுக்கு உதவி அவசரமாகத் தேவைப்படுகின்றது என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

SHARE