மத கலவரத்தால் ஈராக் இரண்டாக உடையும் அபாயம்: ஐ.நா. சபை எச்சரிக்கை

782

ஈராக்கில் பாக்தாத் நகரை தீவிரவாதிகள் சூழ்ந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள மதக் கலவரத்தால் ஈராக் இரண்டாக உடையும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரம் உருவானது. தற்போது அதுவே உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா பிரிவினரின் அரசை எதிர்த்து சன்னி பிரிவின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு வலிமை வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவாக உள்ளனர். அதனால் தீவிரவாதிகளின் கை ஓங்கி விட்டது.

ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.

அதற்காக தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். வரும் வழியில் நேற்று பாகுபா என்னும் நகரை சிறிது நேரம் கைப்பற்றினர். ஆனால் அதை ஈராக் ராணுவம் மீட்டு விட்டது. இருந்தாலும் ஷியா பிரிவினரின் தல் அபார் நகரில் பெரும் பகுதியை தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

இதற்கிடையே மெயின் இலக்கான பாக்தாத்தை நெருங்கிவிட்டனர். 60 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அவர்கள் பாக்தாத்தை சூழ்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் பகுபா என்ற இடத்தில் உள்ள சிறையில் கடந்த 2005–2007–ம் ஆண்டின்போது நடந்த வன்முறை சம்பவங்களுக்காக சன்னி பிரிவு மத குரு நிகாத் அல்– ஜிபோரி உள்பட 44 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை ராணுவ வீரர்கள் உடையில் வந்த ஷியா பிரிவு தீவிரவாதிகள் கடத்தி சென்று மள்கு என்ற இடத்தில் கொலை செய்து உடல்களை தெருவில் வீசி சென்றனர். அதனால் ஈராக்கில் மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு மத கலவரம் மேலும் தீவிரம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஈராக்கில் குர்தீஷ் மாகாணம் தன்னாட்சி பெற்றது. தற்போது ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள் நாட்டு போரை பயன்படுத்தி தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்த தொடங்கி விட்டனர்.

பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் குர்தீஷ் மாகாண பிரதமர் இதை சூசகமாக தெரிவித்தார். இனி நாடு பழைய நிலைக்கு திரும்புவது முடியாத காரியம் என தெரிவித்துள்ளார். தங்களுக்குரிய குர்தீஷ் மாகாணம் முழுமையாக தங்களுக்கே கிடைக்க அரேபிய நாடுகளின் சன்னி பிரிவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2011–ம் ஆண்டில் ஈராக்கில் இருந்து அமெரிக்க படை வெளியேறியது. அதன் தயவில் தற்போது அங்கு ஷியா பிரிவினரின் அரசு அமைந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக அமெரிக்கா மீண்டும் அங்கு போர்க் கப்பலை அனுப்பியுள்ளது.

275 ராணுவ வீரர்களும் வந்து இறங்கியுள்ளனர். பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம், அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலியாவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

எனவே ஈராக்கிலும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஈராக் இரண்டாக உடையும் அபாய நிலை உருவாகும் என ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.

எனவே ஈராக்கில் உள்ள அரசியல் மற்றும் மத தலைவர்கள் கலவரத்தை தூண்டும் செயலை கைவிட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான் – கி–மூன் தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை பாய்ஜி நகரில் உள்ளது. உள்நாட்டு போர் காரணமாக அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்த்த வெளி நாட்டினர் அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.

SHARE