கடந்த சில வாரங்களில் தொடர்ந்த கடும் மழையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள் நீருள் முழ்கியதால் இலட்சக்கணக்கான மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தின் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் சுமார் 677 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசத்திற்குட்பட்ட நான்கு இடைத்தங்கல் முகாம்களில் இருந்த 677 குடும்பங்களுக்குமே மேற்படி நிவாரண உதவிகளாக தலா ஒரு நுளம்பு வலை மற்றும் படுக்கை விரிப்பு (பாய்) என்பன வழங்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த மாதம் 22ம் திகதி முதல் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டிருந்த கடும்வெள்ளம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் இவ்வாறு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை புலம்பெயர் தமிழர்களிடம் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முன்வைத்திருந்தார்.
அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சிலவற்றை வழங்குவதற்கு நோர்வே நாட்டிலுள்ள முன்று தமிழ் அமைப்புகள் முன்வந்திருந்தன. நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம், நோர்வே தமிழர் மகளிர் குமுகம் மற்றும் நோர்வே புனர்வாழ்வு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் முன்வந்ததையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் களப்பணியினை மன்னார் முத்தரிப்புத்துறை RDX இளையோர் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
முத்தரிப்புத்துறை பங்குத்தந்தை டெனி கலிஸ்டஸ், நானாட்டான் பங்குத்தந்தை அருள்ராச் குருஸ் அவர்களின் கண்காணிப்பில் வெள்ள அனர்த்த நிவாரண ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் இன்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் ஊடாக மேற்படி நிவாரணப்பொருள் உதவிகள்நானாட்டான் மகாவித்தியாலயம், எரிவிட்டான் கிராம அபிவிருத்தி சங்கம், மோட்டக்கடை அ.த.க.பாடசாலை மற்றும் அச்சங்குளம் அ.த.க.பாடசாலை ஆகிய நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 677 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.