மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக நகர பகுதியில் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பகல் நேரங்களில் வழங்கப்படும் நீர் வழங்கலின் அழுத்தம் குறைவாக காணப்படும்.
இதனால் பகல் நேரங்களில் எமது பாவனையாளர்கள் துரித கதியில் நீரை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் கூறினார். தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இதற்கான காரணமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே முருங்கனில் இருந்து மன்னாரிற்கு நீரை விரைவு படுத்துவதில் தாமதம் ஏற்படுவதனால், மன்னார் நகர பகுதிகளில் நீர் இணைப்பு பெற்றுள்ள பாவனையாளர்கள் நாளாந்தம் இரவு நேரங்களில் தமது வீடுகளில் உள்ள நீர் தாங்கிகள் அல்லது கொள்கலன்களில் நீரினை சேமித்து வைத்து வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.