மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

623
மன அழுத்தத்திற்கு குழந்தைகள்கூட விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

 13-1431519242-youretiredallthetime

இனப்பெருக்க மண்டலம்

அதிகப்படியான தொடர் மன அழுத்தத்தின்போது அட்ரினலில் இருந்து சுரக்கப்படும் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணியைப் பாதிக்கும்.

நீண்ட நாள் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியைப் பாதித்து, ஆண்மைக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது முன்கூட்டியே கடுமையான வலி கொண்ட மாதவிலக்கு ஏற்படலாம். மேலும், உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் இது குறைக்கும்.

நரம்பு மண்டலம்

மன அழுத்தத்தின்போது நம்முடைய உடல் மிக விரைவாக அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள தன்னைத் தயார்ப்படுத்தும்.

மூளையில் இருந்து அட்ரினலுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு, கார்டிசாலைச் சுரக்கச் செய்யும். இது இதயத் துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும்.

உணவுச் செரிமான மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தலாம். பதற்றச் சூழல் மறையும் வரை நம்முடைய உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாது. தொடர் மன அழுத்தம் தூக்கத்துக்கும் உலை வைக்கும்.

தசைகள்

மன அழுத்தத்தின்போது உடல் தசைகள் கடினமாகும். இது நீடிக்கும்போது தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.

சுவாச மண்டலம்

மன அழுத்தம் மூச்சை அதிகமாக உள் இழுத்து வெளியே விடச் செய்யும். இது சிலருக்குப் படபடப்பு மற்றும் மாரடைப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

நாளமிள்ளாச் சுரப்பிகள் அமைப்பு

மன அழுத்தம் ஏற்படும்போது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பியில் இருந்து அட்ரினல் சுரப்பிக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.

அது கார்டிசால் உள்ளிட்ட சில ரசாயனங்களைச் சுரக்கும். இந்த ரசாயனங்களை மன அழுத்த ஹார்மோன்கள் என்று கூறுவார்கள். இவை சுரக்க ஆரம்பித்ததும், கல்லீரல் அதிக அளவில் குளுகோஸை உற்பத்தி செய்யும்.

இதயச் செயல்பாடு

திடீரென ஏற்படும் மன அழுத்தமானது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைப் போன்றது. மன அழுத்தத்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இதனால் இதயத் தசைகளும் ரத்த நாளங்களும் வேகமாகவும் அதிகமாகவும் செயல்படும். தொடர்ந்து இப்படி நிகழும்போது ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்; மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்

மன அழுத்தம் இருக்கும்போது வழக்கமாக உண்பதைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடத் தூண்டும்.

நீங்கள் அதிகமாக சாப்பிடும்போதோ அல்லது புகையிலை மற்றும் மது போன்ற பொருட்களை உட்கொள்ளும்போதோ அது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதனால் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோன்ற உணர்வு, வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும். இறைப்பையின் செரிமானத் திறன் பாதிக்கப்படும்.

இதன் விளைவாக,ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படும். மேலும் வயிற்றில் உணவின் பயணத்தையும் பாதிக்கும். இதனால், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும்.

 

SHARE