மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும்’ முதலமைச்சர் விக்கி

171

 

 ‘தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும், அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

11084272_937237962973495_1380954966749064119_n 150323114933_jaffna_maithripala_sirisena_512x288_bbc chunnakam-tna-seithy-1-20130904-360

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பணம் பெற்றுக்கொண்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக வெளிவந்த செய்தி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விளக்கம் கேட்டு முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்துக்கு, முதலமைச்சர் வியாழக்கிழமை (18) எழுதிய பதில் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்லை என்று அவர்கள் நினைத்தால் அதைப் பகிரங்கமாகக் கூறலாம்.

உதாரணத்துக்கு கடந்த  13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

‘கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள 6 கிணறுகளை புனரமைப்பதற்காகவும் வேறு தொடர்புடைய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும், வலிகாமம் கிழக்கில் 8 வீதிகளைப் புனரமைப்பதற்காக 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும் கேட்டிருந்தோம். அந்நிதி ஒதுக்கீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்றிட்டங்களைக் கொடுத்தார்களா? வாகனங்களைப் பெற்றார்களா? என்பதை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே கேட்கவேண்டும்’ என சுரேஸ் தெரிவித்திருந்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன், வெளிப்படையாக என்னென்ன தேவைகளுக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கீடு அவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீட்டினை பெற்றுள்ளார்கள் என்ற எனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவரது இந்த கருத்துக்கள் அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரது இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமான ஆதாரங்களுக்கு மேலதிகமான ஆதாரங்கள் எதனையும் என்னிடம் பெறவேண்டிய தேவை இருக்காது எனக் கருதுகின்றேன்.

வடமாகாண சபையைப் புறக்கணித்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டதென்பதையும் பணம் தென்னிலங்கையில் இருந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றேன்.

செயற்றிட்டங்களை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்துவது வடமாகாணசபை அலுவலர்கள். வடமாகாணசபைக்கு இவற்றுக்கான பணம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாண சபையுடன் கலந்துரையாடல் இன்றி இப்பேர்ப்பட்ட செயற்றிட்டங்களில் இறங்குவது ஒரே விடயம் சம்பந்தமாக இரட்டையான நடைமுறைப்படுத்தல் நடைபெற இடமளிக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

வடமாகாண சபை மூலமாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் அந்நிதியம் வடமாகாண சபை மூலமாகவே ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நிதி ஒதுக்கீடு பற்றி அந்தந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தும், ஏனையோர் அது பற்றி இன்னமும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும்’ என விரும்புகின்றேன் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

download

SHARE