யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள எமது தாயக மக்களின் இயல்பு வாழ்வைக்கட்டியெழுப்ப வழிகோலுவதாக புதிய ஆண்டின் வரவு அமையட்டும்.
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தும் சொந்த வீடுகளிலும் அல்லல்படும் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு வழிசமைப்பதாகவும், வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படும் மக்கள் தமது வாழ்வாதாரத்தைச் சீரமைத்துக்கொள்வதற்கும் மலரும் 2015ஆம் ஆண்டின் புத்தாண்டு வழிசமைக்கட்டும்.
தொடர்ந்தும் நீடித்துவரும் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டுவருவதற்கான திறவுகோலாக 2015ஆம் ஆண்டு அமைய வேண்டும் என்ற அனைத்து தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக புத்தாண்டு மலரட்டும்.
அனைத்திற்கும் மேலாக, நாட்டில் அழிந்துபோயிருக்கும் ஜனநாயகமும், சமத்துவமும், சுயமரியாதையும், நல்லிணக்கமும் தழைத்தோங்குவதற்கு வழிசமைக்க இன்றைய புத்தாண்டு தினத்தில் அனைவரும் சபதமேற்போம்.
எமது அரசியல், சமூகப்பணிகளில் தொடர்ந்தும் பயணிக்கும் எமது மக்கள், புலம் பெயர் உறவுகள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள், பொதுநிறுவனங்கள், எமது கட்சியின் ஆதரவாளர்கள், சமூக அமைப்புகள் அனைத்திற்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது உரிமைகள் வெல்லப்பட்டு, சமத்துவத்துடன் சுயமரியாதை, சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான உண்மையான விடியலைநோக்கி வீறுநடைபோடுவோம்.