சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (சிகா) சார்பாக நடக்கும் விருது விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இப்போது இந்தி மொழிக்கும் விருது வழங்கப்பட இருக்கிறது.விழாவில் சின்னத்திரை நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் பெறும் கலைஞர்களை தேர்ந்தெடுக்க, பாரதிராஜா தலைமையில் இயக்குனர்கள் பாக்யராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா, ஒளிப்பதிவாளர்கள் மது அம்பாட், என்.கே.விஸ்வநாதன், ராபர்ட், இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், இந்தி நடிகர் தர்மேந்திரா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். மேலும், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ராதிகா, குஷ்பு, ஹன்சிகா, சுருதிஹாசன் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
விழாவை ஒளிப்பதிவாளர் சங்க செயலாளர் மற்றும் பெப்சி சம்மேளன தலைவர் சிவா பொறுப்பேற்று நடத்துகிறார். இதன் முலம் திரட்டப்படும் நிதி, நலிந்த சங்க உறுப்பினர்களின் நலனுக்குப் பயன்படுத்தப்படும் என்று சிகா தெரிவித்துள்ளது