மஹிந்தவின் அரசியல் மீளுயிர்ப்பும் உள்ளக விசாரணைப் பொறிமுறையும்- வி.ரி. தமிழ்மாறன்

378

 

மஹிந்தவின் அரசியல் மீளுயிர்ப்பும் உள்ளக விசாரணைப் பொறிமுறையும்

= வி.ரி. தமிழ்மாறன்

தமிழ் மக்களது அரசியற் கவனம் தற்போது வேறு திசைகளில் திருப்பப்பட்டு வருகின்றது. வட மாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்துடன் ஆரம்பித்த சர்ச்சை, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கை பிற்போடப்பட்டதனால் ஏற்பட்ட முகச்சுழிப்பின் ஊடாகப் பயணித்து தற்போது தூய நீருக்கான போராட்டம் என்ற வடிவத்தில் நங்கூரமிட்டுள்ளது. விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிலைப்படுத்தி பல்வேறு முன்னெடுப்புக்கள் பல கோணங்களிலிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் பிரதிபலிப்புக்களையே இங்ஙனம் வித்தியாசமான வடிவங்களில் தற்போது எம்மால் தரிசிக்க முடிகின்றது.

ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும்  சர்வதேசச் சட்ட மீறல்கள் குறித்து நடாத்தப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பது தெளிவாக்கப் பட்டுள்ளது. ஆனாலும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், நல்லிணக்க முயற்சிகளின் ஒரு பாகமாகத் தொடர்ந்தும் உள்ளக விசாரணை பற்றிப் பேசப்படுகின்றது. அரசாங்கம் அப்படிப் பேசியே ஆக வேண்டும் என்பது அதற்குரிய நிர்ப்பந்தமாகும்.

வி.ரி. தமிழ்மாறன்

உள்ளக விசாரணையின் சாதக பாதகத் தன்மை பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. ஆனாலும் அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதன் பின்னணியில் அமைந்திருந்த சில நோக்கங்கள் பற்றி தமிழ்மக்கள் மத்தியில் உரிய தெளிவு இருந்ததாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே,  ஆட்சிமாற்றத்துக்காகச் செயற்பட்ட எம்மவரில் சிலர் கண்டனக் கணைகளையும் எற்க வேண்டியிருந்தது. தற்போது 19வது திருத்தம் பற்றிப் பேசப்படுகையில் இது குறித்து சில விடயங்களை ஞாபகப்படுத்துவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.

வேறு சில நாடுகளில்  இடம்பெற்ற சம்பவங்களை உதாரணமாகக் கொண்டு பார்க்கையில், போர்க் குற்றங்களைப் பொறுத்தளவில் உள்ளகமோ அன்றி  சர்வதேச விசாரணையோ ஆட்சிமாற்றம் ஒன்றின் பின்னரே அது சாத்தியமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளில் உண்மையான அக்கறையுள்ளோர் முதலில் ஆட்சி மாற்றம் பற்றி ஏன் யோசித்தார்கள் என்பது இதனால் வெளிப்படும்.

பொதுவாக, இத்தகைய விசாரணைகளின்போது, ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள், குறிப்பாக அரசுத் தலைவர்கள் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பிருப்பதில்லை. ஈராக்கில் இடம்பெற்றதுபோல முழுமையான இராணுவ நடவடிக்கை ஒன்றன் பின்னரே அது சாத்தியமாகலாம். அங்ஙனமன்றி,  ஜனநாயக முறையில் ஆட்சிமாற்றத்தை எற்படுத்தின், அரசுத் தலைவர்களுக்கான சிறப்புரிமைகள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் இல்லாமற் போய்விடும். அதன் பின்னர் அத்தகைய தலைவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அபாயத்துக்கு உட்படுத்தப்படுவர். எனவே இங்கும் ஆட்சிமாற்றம் எத்துணை அவசியம் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

18வது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது தென்னிலங்கை மக்களுக்கு இருந்த விசனம் எங்களுடையதை விட வேறுபட்டதாகும். அவர்கள் வெறுமனே ஜனநாயக விரோத, எதேச்சாதிகார ஆட்சி முறைமை பற்றிய கவலை கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் அதுபற்றிய கவலைக்கும் அப்பால் வேறொரு விடயத்தைச் சிந்திக்க வேண்டியவர்களாக இருந்தோம்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம்  அவர் அரசுத் தலைவராக வலம் வரும்வரை சர்வதேசச் சட்டத்தின் கீழான சிறப்புரிமையைத் தராளமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பிருந்தது.  என்னதான் இருந்தாலும் சர்வதேச சமூகம் என்பது அரசுகளின் கூட்டே என்றளவில் அரசுத் தலைவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில் அச்சமூகம் அக்கறை காட்டாது என்பது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல. எனவே அந்தப் பாதுகாப்புக் கவசத்தைக் களைவதில் நாங்கள் அக்கறை கொள்ள வேண்டியிருந்தது. இதற்காகவே ஒரே நேர்கோட்டில் சந்திக்கக் கூடிய அக்கறை கொண்டோருடன் சேர்ந்து செயற்பட வேண்டியிருந்தது.

மஹிந்தரைத் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலமே அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியும் என்று எங்களில் யாரும் அப்போது பகிரங்கமாகப் பேசியிருந்தால் தேர்தல் முடிவுக் நிச்சயமாக வெறுவிதமாகவே அமைந்திருக்கும். இதை மனதிற்கொண்டுதான் நாங்களும் நல்லாட்சி பற்றி உச்சரித்துக்கொண்டு ஆட்சி மாற்றத்துக்கான செயற்பாடகளில் ஈடடுபட வேண்டியிருந்தது.

18வது திருத்தம் இருக்கும் வரை தனக்கு எவ்வித அச்சமுமில்லை என்ற இறுமாப்புடன்தான் முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டார். வெளிநாட்டு விஜயங்களையும் மேற்கொண்டார். ஆனால் இப்;போது அவரால் அப்படிச் செயற்பட முடியுமா என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, 18வது திருத்தம் கொண்டுவரப்பட்டதன் உள்நோக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவியில் இருந்து அதிகாரங்களை மனம்போன போக்கில் பாவிக்க வேண்டும் என்பதற்கும் அப்பால், உள்ளக மற்றும் சர்வதேச விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்குமான உபாயமாகவே அத்திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பது பலருக்கும் அந்நேரம் புரிந்திருக்கவில்லை.

இதனால்தான் எம்மவர்களில் சிலரும் ஆட்சி மாற்றத்தால் எமக்கென்ன பயன் என்று பேசத் தலைப்பட்டனர். எனவே, மஹிந்தரின் தோல்வி என்பது எம்மைப் பொறுத்தளவில் வெறுமனே ஆட்சிமாற்றமோ, ஜனநாயக வெளியை ஏற்படுத்துதலோ மட்டுமல்ல என்பதுடன் அதற்குமப்பபால் செய்ய வேண்டியவற்றுக்கான முதலாவது அடியெடுப்பு என்றும் கொள்ளப்பட வேண்டியதாகும்.

இந்தப் பின்னணியில்தான் மஹிந்தரின் அரசியல் மீளுயிர்ப்புப் பற்றிக் கவனஞ் செலுத்துதல் அவசியமாகின்றது. பெரும்பான்மையின மக்களிடையே உள்ள மிகமிகத்; தாராளவாத சிந்தனை கொண்டோர்கூட முன்னாள் ஜனாதிபதியை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துதலை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.  இது விடயத்தை தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப் பகிரங்கமாகவே கூறிவந்துள்ளது. ஆக, அதிகூடிய பட்சம் ஏதேனும் வகைப்பட்ட உள்ளக விசாரணை ஒன்றையே இலங்கை அரசால் முன்வைக்க முடியும்.

தேர்தல் அரசியல் என்ற ஒன்று இருக்கும் வரையில், இராணுவ வீரர்களையோ அன்றி அரசியற் தலைவர்களையோ விசாரணைக்குட்படுத்துவதை ஜீரணிக்கும் மனப்பக்குவத்தில் தென்னிலங்கை இல்லை என்பது யாவருமறிந்ததே. இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணைகளுக்கு ஏற்பட்ட முடிவுகளை இங்கே நினைவுகூரலாம். குறிப்பாக, 1977 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்து நியமிக்கப்பட்ட சன்சோனி ஆணைக்குழு கண்டுபிடித்து அறிக்கையிட்ட முடிவு யாதெனில் தமிழ் அரசியற் தலைவர்களின் தீவிரவாதப் பேச்சுக் காரணமாகவே கலவரம் மூண்டது என்பதாகும்.

அரசின் தேவையும் மஹிந்தரின் தேவையும்

அரசின் நலனும் மஹிந்தரின் நலனும் சங்கமிக்கும் புள்ளி ஒன்று தற்போதைய அரசியற் சூழ்நிலையில் உள்ளமையைக் கவனிக்க வேண்டும். எப்படி அரசு உள்ளக விசாரணை பற்றிப் பேசிக்கொண்டிருத்தல் அவசியமோ   அங்ஙனமே மஹிந்தருக்கும் முக்கியமான அரசியற் பதவி ஒன்று தற்போது அவசியமாகின்றது. எனவேதான் எப்பாடுபட்டாவது எத்தனை கோடி செலவழித்தாவது அவர் பதவியொன்றில் அமரவேண்டியுள்ளது.  நாட்டை மீண்டும் கொள்ளையடிப்பதற்கான முயற்சி இது என்ற அவரது தென்னிலங்கை அரசியல் எதிரிகள் குரலெழுப்பலாம். ஆனால் அதுவல்ல எமது பிரச்சனை. உள்ளக விசாரணை பற்றி எந்தளவுக்கு அரசு உரத்துப் பேசுகின்றதோ அந்தளவுக்கு பதவியொன்றுக்கான ஆதரவு மஹிந்தருக்கு அதிகரித்த வண்ணமிருக்கும்.

ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து கண்டறியப்பட்ட இன்னொரு விடயம், யாதெனில், நாட்டுக்குள் இடம்பெற்றிருக்கக் கூடிய கொடூர சம்பவங்கள் மக்களை அதிரவைக்காதபோது அல்லது அத்தகைய கொடுமைகள் தங்களது கலாச்சாரத்துக்கு இழுக்கேற்படுத்துவதாக அமைந்துள்ளதாக மனதார நம்பாதபோது, எத்தகைய உள்ளக விசாரணையையும்  அந்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதாகும்.

சர்வதேசச் சட்ட மீறல்களுக்கான உள்ளக விசாரணையின் பயன்வலுவானது   ஒரு நாட்டு மக்கள் எந்தளவுக்கு அச்சட்டங்களைத் தமது சொந்த நாட்டுச் சட்டங்களுடன் ஒப்பிடத் தயாராக இருக்கின்றார்கள் என்பதிலேயே தங்கியிருக்கும். இலங்கை இவ்விடயத்தில் மிகமிக மோசமான நிலையிலுள்ளதாகப் பலமான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. எனவே அரசு பேசும் உள்ளக விசாரணை என்பது நிச்சயமாக ஒரு கட்டத்துக்கு மேலாக நகரப் போவதில்லை.

ஆயின், இது குறித்து தமிழ்த் தலைமைகள் என்ன செய்யலாம் வினா இங்கு எழலாம். அரசியல் தீர்வு தொடர்பில் நான் அடிக்கடி வலிறுயுத்தி வருவதைப் போலவே இங்கும் அரசின் இயலாமையை வெளிப்படுத்தியேயாக வேண்டும். உள்ளக விசாரணை ஒன்றை வினைத்திறனுறு முறையில் நடாத்த இயலாத நிலையில் அரசு உள்ளதாக நிரூpக்கப்படுமானால் அடுத்தாக உள்ள ஒரெயொரு தெரிவு சாவதச விசாரணையே என்பது பெறப்படும். இதை மனதில் வைத்தே எமது அடுத்த கட்ட நகர்வுகள் இருத்தல் அவசியமாகின்றது.

மஹிந்தரின் அரசியல் மீளுயிர்ப்புக்கு உரமூட்டுவதே உள்ளக விசாரணை என்பது தற்போதைய அரசாங்கத்துக்கு தலையிடியாகவே இருக்கப் போகின்றது. எனவேதான் தேர்தலை செம்டெம்பருக்கு முன்னதாக நடாத்தி கண்டத்திலிருந்து தப்பிக்க  அரசாங்கம் அவசரப்படுகின்றது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இந்த விசாரணைகள் எல்லாம் மாரிசமான்களாகவே அமையும் என்பதை மறக்கக் கூடாது.

SHARE